அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

அகதித் தேசத்தே ஓர் அதிகாலைத்து(¡)க்கம்

வானவிற்கள் சாலை ஓயுந்தூரந்தான்;
யாருங் காணா மழை விட்ட மதிய வேளை
சிறிது முறித்துப் பொதி கட்டிப் பரண் இட்டு வைத்தால்,
பின்னே,தொட்டிலுட்
குழந்தைக்கு விளையாடக் கொடுக்கலாம்.
முட்டைகருப் பருதி பரிதியிற்
கருங் கடல் கரையமுன்,
மேலால் வெட்டிக் கொஞ்சம்
பெட்டியிற் போட்டு விட்டால்,பின்,
தங்கை அவசரத்துக்கு முகத்துக்கு இட்டுக் கொள்வாள்.
இன்றிரவு கூரையேறி,
ஏழெட்டு நட்சத்திரம், முற்றியது தொட்டுப் பார்த்து,
கொக்கையாற் பறித்தெடுத்து,
சற்றே மேலே தட்டி அடுப்பில் வறட்டி,
சுட்டுப் பொடி செய்து வைத்தால்,
அம்மா தேவைக்கு, வெள்ளித் தம்ளர்
தேய்த்துச் சுத்தம் செய்வாள்.
மெத்தைக்குப் பஞ்சு வேண்டுமென்று
மெத்த நாளாய் இவள் சொல்வதால்,
நாளை, நல்லதொரு கன்னிக் காலை
வெண்மெதுமேகம் சுண்டிக் கண்டு,
கயிறு கட்டி இழுத்து மெத்தை போட்டுவைத்தால்,
நித்திரையாவது நின்று பிடிக்கும்...
.....தட்டியெழுப்பப்பட்டேன்.
-அறைநண்பன்.
"முட்டாளே, இன்னும் முழு நித்திரையா?
இன்றைக்கு அகதிப்பணம்
அலுவலகத்தே எடுக்காவிட்டால்,
என்னத்தைப் பண்ணுவது
எம் அலுவலுக்கு இம்மாதம்?"

'97 வைகாசித்திங்களின் ஒரு சோர்திங்கள்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home