அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தூக்கம் தொலைவு

தூரத்தில் எங்கோ தீப்பற்றல்;
வண்டிகள் குறுக்கும் நெடுக்கும் வீதி குதறி காற்றின் தூக்கம்
கிழித்துக் குழப்பி ஓடும்;
வேட்கை இல்லை, என்றாலும், வெறுமனே தண்ணீர் குடிப்பேன்;
அடுத்துச் செய்ய ஏதுமில்லை;
ஐந்தாம் தடவையும் அரைமணிநேரத்துக்குள் மனைவிக்கு
நெற்றியில் முத்தமிடுவது புத்திசாலித்தனமெனப்பட்டிருக்காது;
ஓடும் வண்டிகள் போல, நானும் அறைக்குள் கோடுகள் கற்பிதத்தில்
போட்டு நடக்கலாம்;
நித்தமும் வெடித்த நிலத்தில் கற்பனைக்குப் போட்டுக்
காலையில் அவள் கழுவிவிடும் கோலம்தான், வேண்டாம்;
சூரிய ஒளி சாளரக்கண்ணாடி சுடும் காலம் சந்திக்கும் மீதி மணி
நேரத்திற்கு என்ன
பண்ணலாம்?
புரண்டு படுத்தவள் கை என் மார்பு அமர்வு தேடி, தூக்கம்
துணுக்குற்று,
பின், 'தூங்குங்கள்' என்று முனகி, கனவு தொடரப்போகும்;
பெருவிரல்களும் சுட்டுவிரல்களும் ஒன்றை ஒன்று மாறித் தொட்டு
அறை முப்பரிமாணவெளியில் அவள் ஒரு தொடர்கதை சங்கிலி
விளையாட்டு நிகழும்
இருளில்.
தரையிற் கோடுகள், வெளியிற் சங்கிலி;
என்னைச் சுற்றிக் கேத்திரகணிதச் சிறை;
காலடி கீழிருந்தெங்கோ, பிக்காசோவின் குவர்னிக்கா உருக்கள் எல்லாம்
மூக்கு கை கண்கள் இடம்பெயர்ந்து விசுறுண்டு ஒலி எழுப்புவதாய்
ஒரு கற்பிதத்தொனி.
மனம் அலுத்துப்போய், அறுந்துப்போகும் சங்கிலி.
கண் இருட்டிச் சுற்ற இரண்டாய் ஆறாம் முறை நெற்றி முத்தமிட்டுத்
திரும்பிப் படுக்க,
தூரத்தில் எங்கோ தீப்பற்றல்;
வண்டிகள் குறுக்கும் நெடுக்கும் வீதி குதறி காற்றின் தூக்கம்
கிழித்துக் குழப்பி ஓடும்;

0பின்னூடுகை:

Post a Comment

<< Home