அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஒற்றைத் துயர்செய்தி

நேற்று மாலை நடைப்பொழுதில்
சந்திச் சிவப்பு ஒளி மங்கத் தரித்திருக்க,
காற்று என்னருகே கண்ணியமாய்க் காவிச்
சென்றதொரு சிறு கையடங்கு துயர்செய்தி.
முன்னெப்போதோ கேட்க மறந்த
காதற்பிரிவு தாளாக் கானமொன்றிருந்து
தாளம் தப்பி வீதி போகுமொரு இரட்டைவரிச் சரணமா?
என்றோ அடை மழை இரவொன்றிற் கேட்ட
இரட்டை இணை வேட்டை இழந்துற்ற
ஒற்றைக்குருவியன்றின் உயிர் உருகிப் போனதோ?
இல்லை,
வரப்போகும் வேறேதோ துன்பத்தின் வெளியட்டை
காலத்தே முன் எகிறிப் பிய்ந்து போம் சிறு துண்டமோ?
எத்தூரம் திசை குவிந்து பார்த்து
நினைவு பிதுக்கிப் பிழியினும்
சரியாய்த் தெரிதலில்லை
சங்கேதம் தன் சகவாசம்.
கருக்கற்போதினில், கனமாய்க், கருப்பாய்,
காற்றை விஞ்சிடக் கடுகிப்போனால்,
காண்பதெப்படி
கண் வியத்தல் மட்டும் கருத்து கொள்தலின்றி?
சிலகுறிப்பு மட்டுமே நேற்றையப் புகார்ப்படல
மங்கலாய் எண்ணத்தே படிந்து இன்னும்.
திட்டமாய் அமைந்திரு உருத்தொலைப்பினும்,
அ·து எனைக் கண்டு அசைத்தது தன் உடலம் ஏதோ..
..காலா...கையா....இல்லை, கண்கள் போலும்;
ம்...நிச்சயம் இல்லை, காற்றோடு
காதலாய்க் கைகோர்த்துப்போனதா
கரவு கொண்டு கடிந்து கைவிட்டு முன்போனதா
என்பது என் கண் பாதி பதித்த குறைபோல்.
கறுப்பாய் இருந்தாலும் அதன் காற்றடி பந்துடம்பில்
திட்டுத் திட்டாய்ச் சிதறியிரு சிவப்பென்ன.....
.....இரத்தமோ?....இல்லை,...
...வெறும் ஹோலி வண்ணக்கோலம் போலும்.
ஏதோ; எனை விடுங்கள்;
தெளிவாகச் சொல்லத்தெரிதலில்லை
அந்நேர என் சிரசின் அவசரப் பதிதலுக்கு.
நேற்றைய நடை முடிதலில்,
நிச்சயமாய்த் தெரிந்ததெல்லாம்,
அதற்கு நானோ, எனக்கு அதுவோ,
என்றோ, எங்கேயோ, எப்படியோ, ஏனோ
-பத்து வருடமுன் பார்த்ததொரு தேர்க்கூட்டச்சந்தடியில்
விரி கண் கணம் கலந்து, பின் என்றும் காணாது
கடந்துபோன செம்பொட்டு, மஞ்சட்பட்டிடு
கன்னி முகப் பொங்கு சிறுபருப் போல-
அறிமுகம் ஆயிருந்தோம்
அல்லது ஆவோம்
என்பதொன்று மட்டுமே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home