அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

அக்கிலிஸின் குதி

என் மனத்து ஏதோ மூலைக்குள்ளூம்
எல்லோரையும் போலோர்
அக்கிலிஸ் குதி.

எவருக்கும் தெரியாது
எனக்குமே புரியாது
என்னுள்ளே
ஓர் அக்கிலிஸ் குதி.

குதித்து நின்றாடும் மேடையிலே
பம்பரமாய்ப் பரந்தாடும் பரதம்
நடுவழியே
கைதட்டற் சுருதித் தொனியுட்
தொக்கிய வினாவுட் கொக்க,
பாவு பாதம் இடறித்
தட்டித் தவறும் தாளம்;
நிருத்தநளினம் விலகும்;
நடனமுத்திரை நசியக்
குலைந்து போம் குறி.
வலிக்கும் எகிறிய குதி.

ஆள் தாங்கி நடந்தாலும்
உள்மடிந்துறை தம்மடிக்குட்
தாங்கு திறனற்றவை
மனிதக் கால்களின் குதிகள்.
அவைகளின் வலிகள்
உள்ளே ஆறாதவை.
புண்களோ என்றும்
பட்ட இடத்திலேயே
அடி
பட்டுக் கெடுப்பவை.

குதிகள், முகங்கள் அல்லன.
தாங்கிக் காத்திருக்க
மூக்குத்துளைக்குமட்டும்
வளிபடு வெளிவிட்டு
மூடிக்கட்டிக்கொள்ள.

குதிகளுக்கும் மனதவியும்;
அவைகளும் சுவாசிக்கும்.
பார்க்கும்; தம் வருத்தம்
காற்றோடு பேசும்.
ஆதலினால்,
இருட்டு லாடத்துள் இறுகி
வேதனைப்பட்டிருக்கப்
பிறக்காதவை என்க
எவர்தம்மும் குதிகள்.

என் மனத்து ஏதோ மூலைக்குள்ளூம்
எல்லோரையும் போலோர்
அக்கிலிஸ் குதி.

பந்துக்கடித்ததெல்லாம்
தன் முன்மூஞ்சி நேர்
வம்புக்கு வந்ததென்ற
வீம்பு தின்று தினவெடுத்துத்
தேடிப் பதம்பார்த்து
மீண்டு தான் நோகும்
குதியுண்டு என்
உள்ளக்கூட்டுக்குள்ளூம்.

இனிவரும்
என் ஆட்டங்களில்
பந்துகள் குறியாகா.
பிறர்தம்
குதித்துதைக்கும்
குதிகள் குறியாகாதிருத்தலே
குறி.

குதிகள்
அறியும்
குதிகளின் குணம்.
........... மனிதர்கள்
மனிதர்களை
இதுவரை
அறிந்ததை விட.

குதிகள்
புரிந்துகொள்ளூம்
பிற குதிகளின் மனம்.

எவருக்கும் தெரியாது
எனக்குமே புரியாது
என்னுள்ளே
ஓர் அக்கிலிஸ் குதி,
எல்லோர் மனதுள்ளூம்
எங்கோ மழைக்கு
ஒண்டிக்கொண்டிருப்பதைப் போல்.

99 may 10

0பின்னூடுகை:

Post a Comment

<< Home