அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

உடுக்காதல்

இன்றிருந்து,
இங்கிருந்து,
பின்விடுதிக்கூரை மேலாய் எட்டித்தெரியும்
அவ்வொற்றை நட்சத்திரத்தைக் காதலிக்க எண்ணம்.
பின்னிரவு,
என் அறைச்சாளரம்
காற்றுக்காய்த் திறக்கையில்,
காத்திருந்தேன் உனக்கென்றே,
நாணி,
ஒளி வெட்க முகம் மேகம் உள் ஒளித்து,
பின்,
சட்டென்றெட்டிக் கண்சிமிட்டி,
"காதல, நலமா?"
எ(¨)னக் கேட்கும் பேதையது.
ஒளியாண்டு வெகு தூரம்;
மழை நனைத்தும்
வெயில் மறைத்தும்
மூடும் மூட்டமெல்லாம்
எனைக்காணும் இரவெண்ணி,
நிஷ்டையமர் ஞானியென,
கொட்ட விழித்திருக்கும்
என் சாளரம் வழி,
அப் பெட்டை உடு.
இன்றெல்லாம்,
அதன் ஏமாற்றம் தவிர்க்கவென்றே,
உறைபனி கொட்டும் விடிகாலையிலும்
காற்றுடன் கூட்டுச்சேர்ந்து தான்
திறந்திருந்ததாம் என் ஜன்னல்.

-மில்வோக்கி '97 ஓர் உடல்விறை உறைபனிக்காலை
('97 05 06)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home