அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

காகம் - ஒரு மறுபார்வை

இரவு முழுவதும் விழித்திருந்து
இங்கில்லாக் காக்கைகளைப் பற்றியரு
மழைக்காக்கைக்குளியல் வாசிப்பு.

குளிர்யுத்தப் பனியுருகி,
பொதுவுடமைக் கருவினுரு,
பல மனிதர் பார்வைக்காய் மீள் பங்கிடவே ஆனதனால்,
பொழுதுபோகாமல்,
தலை சாய்க்கும் சிறுபறவை நிலைநோக்கியும்
விழியால் அதன் நடை யு¡¢த்துப் பார்க்கும்
பிறிதொரு கோணப்பார்வை; கோணற்பார்வை.

ஒற்றுமைக் குவமை காக்கை.
ஓர் செத்த ரொட்டித்துண்டு எட்டி வீசிக்
காக்கைக்காய்க் கைதட்டி, பின்,
ஒருநாள் முழுதாய் உட்கார்ந்திருந்து பார்த்தேன்,
காகம் எள்ளையும் எட்டாய்ப் பங்கிட்டுத் தின்ற கதை.

ஒற்றைக் காகம் ஒரு வட்டம் அடித்தது வானில்.
பின், சட்டெனச் சரீரம் குத்திக் கீழே இறக்கம்.
உடன், ரொட்டியைக் கொத்திப் போகுமெனப் பார்த்தேன்.
முட்டாள் நீ என்பதுபோல்,
முற்றத்துச் சிறு இலை அற்ற புளி மேற்கிளையில்
மொட்டைத் தலையதுவே மிச்சமிரு மயிர்க்கற்றையென
இருக்கை.
தரை ரொட்டியைத் தலை சாய்த்தோர் கண்; கோணம்
விரித்தொரு பார்வை நிலைத்திட என் மீது. திரும்பித்
தரை ரொட்டியைத் தலை சாய்த்தோர் கண்; கோணம்
விரித்தொரு பார்வை நிலைத்திட என் மீது. திரும்பித்...
... தலை திருப்பிச் சலிப்புடனே சன்னலின் கம்பிகளை எண்ணிட
நான்,
இன்னொரு வட்டமடித்திறங்கும் தரை, காகம்,
பின் தத்தித் தத்தியரு குட்டைப்பிள்ளை நடை பழகும்
ரொட்டி இட்டவிடம் எட்டி.
காகமும் தன் நடை நடக்கின் அழகு.
வாய் கொத்திக் குதறுமுன்,
வான் பார்த்துக் கரையும்; விழியோ
அவ்வேளையும் விலகாது ரொட்டியின் வழி.

மேலிருந்து மேகத்தின் கீழிருந்து
வெள்ளைச் சுவர் விழு புள்ளியாய்ப் பூத்த பொட்டுக்கள்
பெருத்துப் புலப்படுகையில்,
செட்டை விரித்துத் தரை சிதறிய சில்லறையாய்ப்
பல காகம்.

அத்தனையும் விட்டம் சுருங்குமொரு
தரை மாய வட்டத்துப் புள்ளிகளாய்
தன்னுட் பற்றிச் சுருங்க இழுத்திருக்கும்
அடர் கறுந்துவாரமாம்
நான் எறிந்த ரொட்டி.

முற்றத்தின் முதற்காக்கைக் குரல் பற்றிப்
பின் எழுந்ததொரு பல கானக்கூட்டம்.
பின்பாட்டுத் தொடர,
என் காகத்துப் பொதுவுடமை,
பங்கிட்டுத் தின் தத்துவத்தைப்
பரிசோதித்திரு பாவம் எண்ணிப்
புழுங்கிப் புறப்பட நான் மூட நினைந்தோனோ...
.... சன்னல்?

மூளும் போர் காக்கையிடையே...
யாரது உண்பது ஓரது துண்டு ரொட்டியென்று.
முன்னை வந்த காகம் முழுதாய்த்
தன் உடல் கொத்துண்டு தின்னல் கண்டேன்.
பின்னொரு முரட்டுக்காகம் முடிவில்
எடுத்தேகியது ரொட்டி.
தன் தலை அலகுகள் பின்னக் கண்டவை
பெரிதோ சிறிதோ
உன்னது முகம் இனி விழியேன் என் ஒற்றைக்கண்ணிலேனும்
என்பதுவாய்த் தன்னது தலை தமக்குட் திருப்பித்
தாம் செல் திசை எண்ணி நீ மாளாய் என்றெனச்
சொன்னது போலொரு பாவனை என்னிடம்.

பின்னொரு நாள்,
இன்னொரு முறையும் ரொட்டி இட்டிருந்து பார்த்தேன்
எதையும் பன்முறை ஆய்ந்து பார்த்தலே பண்பென்று.
முன்னே நான் சொன்னதற்கேதும் பங்கமில்லை.

பொதுவுடமை போனதோடு போகட்டும்...
மனிதனுக்கோ காக்கைகோ ..
மடைத்தனமாம் என் ஆராய்ச்சி..

ஆனால், அதன்பின்,
மனம் பின்னியதெல்லாம் ஒரு கேள்வி.

முன் தின்ன வந்த காக்கையென்ன,
தான் தின்னக்கிடைத்ததைத் தன் இனத்துக்கும்
நம்பிக்கொடுக்க எண்ணிக்கெட்ட முட்டாளா,
இல்லை,
தன்னம்பிக்கை மீறி ரொட்டி தரம் உற்றதா கெட்டதா
எனக் காண ருசி பார் முட்டாள் காக்கையைத் தேடித்
தான் பெற்றதையும் கோட்டைவிட்ட முட்டாளா
என்பதுதான்.

பின் என்னொரு நண்பன் சொன்னான்,
"முட்டாளுள் வகைபிரித்துத் தேடி
முழுது அரை தேடும் வேலையற்ற
நான் கண்ட ஒற்றையாள் நீயும்
ஒரு முட்டாளே."

0பின்னூடுகை:

Post a Comment

<< Home