அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

புரிதல் மறுக்கும் அயலவனுக்கு

அயலவனுக்கு,
புரியவில்லை என்பதுவாய் நீ புன்னகைப்பது எனக்குப் புரிகிறது.
புதியதல்ல உன் காலந்தேய்க்காப் பொய்ப்பாசாங்கு.
எனினும்,
உறுதியாய் மெல்லவரும் உளச் சொல்லைக்
கொல்ல மறுத்து என் இறுதிக்கும்
உனக்குச் சொல்லிக்கொண்டே இருப்பேன்,
"வெட்டுண்டு பனை சாயினும்
விடலை வடலிகள் விடும் வேர் ஆழ மண்ணூடே."
என்றாவது காண்பாய் நீ,
எரிந்த என்பூமிச் சாம்பல் மேடெல்லாம்
பீனிக்ஸ் என எழுந்து நிற்கும் பெரும் பனை.
காற்று, விலங்கு,பறவை,நீரூடு வெளியெங்கும்
கடத்துண்ட என் நிலவனமெல்லாம்
மீளத் தம் உயிர்விதை போட்டெழுந்த
அடர் பச்சை முற்றத்தே
இரத்தச் சிவப்பாய்ப் பூத்துக் கொட்டும்
கூர்முள்முருங்கை தன்கோபங்காட்டி.
அந்நாளில்,
என் வாசற்படி நின்று, கதவு தட்டி,
உன் மகள் மணமாலைக்கு மலர் கேட்காதே.
இன்று விழும் என் மக்கள் பிணம்
உரமாய் உதிர்ந்தெழுந்து,
விதிமுகம் நகையாடி
இறைத்த அவர் செந்நீராற்
சிரித்திருக்கும் செம்பூக்களவை.
ஆயினும் காலம் கடந்து,
அன்றைய வாடைக் காற்றும் கூறும்
இன்றைய என் வடநிலம் எழும் நிணநாற்றம்.

-இன்னோர் அவலம்சேர் புலம்பெயர்நாள், '97

0பின்னூடுகை:

Post a Comment

<< Home