அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஊர்

காற்று மாறவில்லை என்றே சொல்லிப்போனது,
கற்பூரச்சட்டி கோவில்வீதிவழி சுற்றிப்
பிடித்துப்போன பெற்றவளும் பெண்ணும்போல;
வீதி முன்போலவே குண்டும் குழியும் கொண்டு
இங்கே மழைக்காலம் மீன் பிடிக்கக்கூடாது
நானும் நண்பரும் அட்டை எழுதிக் குத்திவிட்டகோலத்தே;
கண்டமுகங்கள் விண்டுவிபரம் கேட்கமுன்
போய்ச்சேர்வோம் என்றாள் அன்னை, வீடு.

வீடு மரம் மூடிக்கிடந்திருந்தது; செவ்வரத்தை
பற்றையெனக் கிடந்த பாதையெல்லாம்,
பச்சையும் மஞ்சளும் இச்சையின்றிப்
பிச்சுப்பிச்சுப்போட்ட வண்ணக்கோலமென
பெயர்தெரியா இலையும் தழையும்
மண்ணிலும் முன் மாடத்திலும்;
தங்கையின் வேலை என்று
சொல்லாமற்தெரியாதோ?
தோல்விகள் துயரங்கள் தோளேறி அழுத்துகையில்,
வீடென்றொன்று நிம்மதிக்கு தூரமிங்கு கிடக்குதென்று
சொல்லி மாதம் வருடம் போக்கிவிட்ட
சிறு தீப் பெட்டி உள்ளுறங்கிக் கிடந்தென்
காற்சட்டைப்பையுள்ளுறையும் இந்நிலத்து மண்தவிர,
அஞ்சல் இடை மடியுண்டு வந்து,
அண்ணா கவலை அறு என்று சொன்ன
சருகெல்லாம் வந்தவழி இதுதானே?
அம்மாவின் அம்மாதான் ஆலயத்திற்கு
நித்தியகல்யாணி நித்தமின்றி
குரோட்டன் எல்லாம் பார்வையிலேயே
குதறியிருப்பாள் இருந்திருந்தால்.
கதவு திறக்கப் புது நாய் குலைத்து
அம்மா அதட்டலில் அடங்கி வாலாட்டியது.
பழையது, போன வைகாசி வாகனமேறி
வாய் பிளந்து வான் போனதென்றாள் அன்னை.

அப்பா தளர்ந்திருந்தார்;
தங்கை வளர்ந்திருந்தாள்;
சில்லுருட்டித் திரிந்த தம்பி
ஒரு மூலையில் சைக்கிள்
சில்லுக்குக் காத்தடித்துச்
சிலிக்கன் சில்லுப் புத்தகம்
வாசித்துக் கிடந்தான்.
மிச்சமெல்லாம் அப்படியே,
விட்டுப்போன காலத்திற்கே
சில செத்துப்போன உற்றார்
படம் கொள் சுவர் தவிர்த்து.
எந்தன் அறை தம்பி இன்று
தனதெனக் கொண்டிருந்தான்:
சின்னப் படங்களென பெயர் தெரியாச்
சில சினிமாப் பெண்பிள்ளைகள்,
வண்ணத்தில், வயிறு காட்டி,
முன்னர் நான் ஸ்ரீதேவி
ஒட்டிப்போன சுவரெல்லாம்.
பின்னால் கிடந்த பெரும் பெட்டியன்று,
புதிதாய் ஒரு குரலிற் தமிழ் கொன்று
'இது இலங்கை வானொலி' என்றது
விடாமலே அது துரத்தி இன்னொன்று வன்குரல்,
'தூங்கிப்போகா நேற்றைய இரவை'ப்
பாடும், காறித்துப்பும் ஒலிகொண்டு,
கூட ஒரு பெண் குரல்,
முட்டைஅடைக்கோழியெனக் கேருதற்குப் பதில் கூறி.
என்ன ஆனார், என் இனிமை
கே.எஸ். ராஜா, ஏ.எம். ராஜா?
'ஆர்?' என்றான் தம்பி;
செத்துப் பல காலம் என்றாள் அன்னை;
ஏதோ தொலைந்தது என்றிடும் சிந்தை;
உடைந்தது இங்கும் என்றது மனது.

சாப்பாடு பலகால(ர)ம்பின் உட்போயிற்று;
படுக்கமுன், கடல், காற்று, பழம் நண்பர்,
அமர் பழைய சுடலை மதில்,
பொது நூலக, கல்யாண்ஜி கவிதை கிட வடமூலை
பார்த்து வரவேண்டுமென்றேன் பரபரத்து.
நேரம் மாலை மணி நான்கு,
காலம் மிகக் கொடிதென்றாள், தங்கை.
திருவிழா வில்லுப்பாட்டு,
கடல்மணல் நடு இரவு உடு எண்ணல்,
கூடப் பொலிவிய சேகுவரா இறப்புப் பேச்சு,
'சாமத்தே சாமர்த்தியமாய் சுடலை
உடல் புதைக்கவந்த சந்திரமதி' சாடு
மயானகாண்ட அரிச்சந்திரன்;
எல்லாமே என்னாயிற்று?
வெறும் கன்னியர் பின் காதற் பவனி வரவேண்டு
மாலை மணி நான்கே கொலை கொள்
கொடிதாய்ப்போனதுவோ, கோணேசர் பூமியிலே?
தொலைந்தவை தொகை ஏறும்;
உடைந்தவை ஊன்றி உட்குத்தும்.

தூக்கம் பிடிக்காது;
தம்பி சூட்டிற் செத்தவர் கதை சொன்னான்;
அம்மா உடல் மெலிந்துபோயிற்றே என்றழுதாள்;
தங்கை கனடா போனவர் கதை சொல்லிப்
புது கானடா இராகப் பாடற் சங்கதி சரணம் சொன்னாள்;
அப்பா, ஏது மாற்றமும் பெற்றுப்போகாது,
தமிழோசை பிபிசி கேட்டு, வானொலி மூடி
ஊர் அரசியலையும் உலக அரசியலையும்
ஒப்பிட்டுக் கருத்துக் கேட்டார்;
அத்தனையும் முடிய, முன் முற்ற மல்லிகை
முகர்ந்துலாவ, அன்னை சொன்னாள்,
இரா வெளிப்போகும் இராணுவம் உன் உலாக்காண
இராமல் விதண்டாவாத வினாக் கேட்கும்;
உலாவல் போதும் உள்ளே போய் உறங்கென்றாள்.
எழுந்து மூச்சுவிடவென்று ஏழு வருடம் பின் வந்ததெல்லாம்
எதுவும் இல்லாமல் உள்ளே போய் உறங்கத்தானோ?

மறு நாட் காலை,
ஊரார்கேள்விக்கு,
கால் பதிக்காக் கலிபோர்னியாக் கடற்கரையில்
வெற்றுக்கச்சணிந்து மாதர் கதிரவன் பிடித்தல்
குளிர் மில்வோக்கிக் குச்சிருக்கும் எனக்குத்
தெரியா நியாயம் அவர்கட்குப் புரியாமற்போக,
வெளிவாழ்தல் மிக மேன்மை எனக்காணும்
அவர் புரிதல் எனக்கு நியாயமற்றுப் போக,
பள்ளி பல்கலைக்கழகம் விட்டுப்போன
பால்ய நண்பர்கள் தேடித்திரிந்தேன் நான்;
விரிவாய் இடம் மாறிப்போயிருந்தோர் வீடிருந்து,
பெரிதாய் வயிற்றுடன், பின் குதிக்கும் குட்டிகள் அதட்டி
புதிதாய்ப் பெண்கள், முகங் கண்டு முன் பயந்து, பின்
நவின்றார்,
'காரியாலயம் போனார்; கடைக்கு; குழந்தைக்கு மருந்தெடுக்க;
வரும் நேரம் சொல்லல் கடினம்;
நீர் யாரென்று, வந்தாற் சொல்ல?'
யாரென்று சொல்ல?
தன் நாடு சொர்க்கமென மீளத் தேடி வந்தவனென்றோ?
பெற்றோர்க்குச் சொல்லாமல், பள்ளிக்குச் செல்லாமல்
உன் கணவர் கூடி, ஒன்றாய்
முன் பெண் துரத்திய முட்டாள் ஒருவனென
என்னென்று சொல்லிவைக்க
இந்நாள் அவர் மனைப்பெண்களிடம்?
இன்ன கடை கிட்ட வாழ் அவர் முன்னாட் தோழன்
என்று சொல்லெனச் சொல்லி
குழந்தைகட்கு எடுத்துப்போன
கையுறை கொடுத்துப்போனேன்;
பின்னேரம் வந்தான் ஒருவன்; இருவினாடியில்,
இரவுக்கு மேற்சம்பளம் என்று சொல்லிப்
பின்னால், பின்னாள் ஒரு முறை வருவேன் என்று போனான்.
மற்றவன், மறுநாள் தொலைபேசி,
போகமுன் ஒருமுறை வந்துபோவேன்;
இன்று மைத்துனி பூப்பூப்பு,
நாளைக்கு மைத்துனன் மனைவிக்கு மகப்பேறு
மறு வாரம் யாரும் உறவினர் மாள்வார்கள் மண்டையிற் சுடுகுண்டு
பெற்று என்றான்.
விட்டவர்கள், மற்றவர்கள்,
நான் வெற்றுச் சுடலை மதில் முதுகெலும்பிற்
தனியிருந்து என் முதுகு முற்காலம் உப்பேறித் திரிந்த சிறுவர்
கைப்பந்து, காற்பந்து ஆடக் காண்கையிலே
வந்து வாசலிலே வாகனம் நின்றிறங்காது
வீட்டிற் தேடிப்போனார் என்றனர் தங்கை, தம்பி.
நூலகக் கல்யாண்ஜி கவிதை தொலைந்து போனது,
ஞானக்கூத்தன் கிழிந்து கிலோ அரை ரூபாய்க்கு
சுந்தரராமசாமி கூடக் கொசுறாய்ப் போனார்
என்றாள் ஒரு சிடுசிடு இளமங்கை, பின்னிருந்த இளைஞனுக்குத்
தான் கொஞ்சாக்குறை கெடுத்த கரடி என எனைக்கண்டு.

மிகுதிக்காலம் எல்லாம்
சிலர் நண்பர்க்காய் வீடுபோய் சாப்பிட்டு வந்தேன்,
அமெரிக்கக் கதை அறியாததும் சேர்த்துச் சொல்லி;
தங்கையின் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன்,
வண்ணாத்துப்பூச்சிகளுக்கு மகரந்த வழிகாட்டினேன்;
அம்மாவின் சமையலுக்கு வேண்டாம்
வேண்டாம் எனக் கார வெண்காயம் வெட்டினேன்
கண்ணீருக்கு அதுவே காரணமென்றவள் எண்ணட்டுமென்றெண்ணி;
தம்பிக்கு, கணித வகையிடல் தொகையிடல் சொல்லப்போய்
அவன் சொல் நாட்டு உடல் வதையிடல் கூறிடல்
கேட்டுக் கவலை கொண்டிருந்தேன்,
வெளியே வீணாய்ப்போகாதே என்றுரைத்து;
தந்தைக்கு, கிளின்டன் தேர்தல் நிதி ஊழற்கதைக்கு
விபரம் சொல்லித் தீர்த்தேன்; கூடவே,
டோல் மேடை இருந்து விழுந்த கதையும் கேட்காமலே.
பின் மிஞ்சிய நேரமெல்லாம், பின் வீட்டுச் சிறுகுழந்தை
என் முதுகு ஏற்றி வீட்டுக்குள் உப்பு விற்று வந்தேன்.

போகும் நாள், அம்மா அழுதாள்; தம்பி,
பொதியெல்லாம் தூக்கிவந்தான்; அப்பா,
நிதி ஊழல் முடிவெல்லாம் விளக்கமாய் எழுதென்றார்;
தங்கை அண்ணா இந்தா இம்முறையும் மறந்திடாமல்,
எம்முற்றமண் உன் வெற்றுத்தீப்பெட்டிக்குள் எடுத்துப்போ என்றிட்டுத்தந்தாள்;
மைத்துனியின் காவல் நண்பன் தொலைபேசியில்,
"போய்க்கடிதம் போடென்றான்."
மறு நண்பன் வாயில் வந்து, தன் ஒன்று விட்ட தங்கைக்கு
அங்காரும் அவன் குலத்து ஆடவன் பொருந்தி அமையுமோ
என்று பாரென்று கூறி இயந்திரம் முறுக்கிப் பாய்ந்து போனான்.

விமானம் ஏறுகையில்,
எண்ணத்தே இன்பம் என்றிருந்த என் உலகமும் எங்கோ இறந்து
போயிருந்தது.
வராமலே என் திரிசங்கு மனச் சொர்க்கத்தில் சீவித்திருக்கலாம்
என்று குற்றம் எனைச் சொல்லிக் குலுங்கின,
உடைந்த மனச்சிதறல், தொலைந்த சிந்தைத் துகள்கள்
தம் துயர்ப்பந்து என் தொண்டை அடைத்து.
அம்மா 'மறு வருடமும் வருவாய்தானே?' என்று கண்கலங்கக் கேட்டாள்
நானும் கசிந்தேன்.
அழுத அம்மாவுக்காகவா,இல்லை,
அரைக்கிலோக்கு விற்றுப்போன
ஞானக்கூத்தனுக்காகவா?
-இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

-97

1பின்னூடுகை:

Post a Comment

<< Home