அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

வட்டக்குற்றம் (இன்னோர் உடைந்த உரை உதிர்வு)

இத்தனை நாளாய்
இவர் என்னோடு
எதற்காய்ப் பேசவில்லை என்று
ஒரு சித்தக்கலக்கம்.
நட்பு, நடுத்தெரு நாயாய்
யார் எறிந்த கல்லுக்கோ
தான் போய் உடல் விறைத்து
கிடக்கிறதுவோ என்றும் அச்சம்.

போன மாதத்தே
என்றாவது மனக்காற்றுக்கு உதிர்ந்த
எனது காகிதத்து, கணினிக்கடிதத்து
வேலையற்ற வெட்டி ஒற்றைச் சொல்லேதும்
இவர் மனது ஈரம் உலர வைத்துப் போயிருக்குமோ
என்று நெஞ்சு நெகிழ் நிணப்புண்ணாய் நைந்து
ஒவ்வொன்றாய்ப் போன பொழுது,
தேர்த்திருவிழாக் கொறிக் கடலையாய்
கோதுடைத்து, தோலூதித்
தின்று பார்த்தபோதும்
அப்படியேதும் பட்டிருக்கவில்லை.

பொதுப்பட்டு ஓரம் வரைவற்று
வெளிவிட்ட அவர் ஒவ்வொரு
வட்டச்சொற்களுக்கும் என்
மனத்திலொரு பொய்த்திட்டம்
பெரும்பூதமாய், பேய்விரட்டு பூசணியாய்
வரைந்திருந்து அதில் அவர்
முக வண்ணம் இப்படியோ,
இல்லை வேறெப்படியோ என்றிருக்கும்
வீண்கஷ்டம் இனியும் வேண்டாம்
நேரே கேட்டிருப்போம்,
"நானேதும் இழைத்தேனோ, உம்
மனத்தொரு குற்றம்?" எனப் பட்டிருந்த போதினிலே,
அவரே கேட்டாராம் இது பற்றி இன்னொரு நண்பரிடம்,

"இத்தனை நாளாய்
இவர் என்னோடு
எதற்காய்ப் பேசவில்லை என்று
ஒரு சித்தக்கலக்கம்.
நட்பு, நடுத்தெரு நாயாய்
யார் எறிந்த கல்லுக்கோ
தான் போய் உடல் விறைத்து
கிடக்கிறதுவோ என்றும் அச்சம்.

போன மாதத்தே
என்றாவது மனக்காற்றுக்கு உதிர்ந்த
எனது காகிதத்து, கணினிக்கடிதத்து
வேலையற்ற வெட்டி ஒற்றைச் சொல்லேதும்
இவர் மனது ஈரம் உலர வைத்துப் போயிருக்குமோ
என்று நெஞ்சு நெகிழ் நிணப்புண்ணாய் நைந்து
ஒவ்வொன்றாய்ப் போன பொழுது,
தேர்த்திருவிழாக் கொறி கடலையாய்
கோதுடைத்து, தோலூதித்
தின்று பார்த்தபோதும்
அப்படியேதும் பட்டிருக்கவில்லை.

பொதுப்பட்டு ஓரம் வரைவற்று
வெளிவிட்ட அவர் ஒவ்வொரு
வட்டச்சொற்களுக்கும் என்
மனத்திலொரு பொய்த்திட்டம்
பெரும்பூதமாய், பேய்விரட்டு பூசணியாய்
வரைந்திருந்து அதில் அவர்
முக வண்ணம் இப்படியோ,
இல்லை வேறெப்படியோ என்றிருக்கும்
வீண்கஷ்டம் இனியும் வேண்டாம்,
நேரே கேட்டிருப்போம்,
"நானேதும் இழைத்தேனோ, உம்
மனத்தொரு குற்றம்?""

-98

0பின்னூடுகை:

Post a Comment

<< Home