அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சிங்காரம் கெட்டுச் சிறைப்பட்ட பாவிக்கு ........

பற்றலை இற்றலெனல்
முகம்மூடி சிரம்மூடி
முழுப்பூச்சுற்றல்.

ஆக்கம் அற்ற காலை
ஆற்றாதெழு முற்றிய சமாதானம்.

தாமரைத்தாளுள்ளே
ஒட்டலின்றி உருளும் ஒரு சொட்டு நீரும்
சுற்றித்தான் திரியும்
சுகம் தேடி சுழன்றோடிக்
காற்றின் கை பட்டுவைக்க.

பற்றென்றும் சூரபத்மன் சிரம்.
வெட்டித் தரை தொட்டிடாப்போது
வகை பேதமுற்றேனும்கூட
கெட்டியாய்த் தழைக்கும் தலை.

வேர் முழுதாய் வெட்டி அகற்றிடாப் போது
கொடி சுற்றிச் சுற்றியே படரும் சுரை,
கொம்பில்.

வேர் அற்று வீழ்ந்து போதலோ
வெறுமனே சொல்லப்படும்
இதயம் துடித்து சித்தம் செத்த
வெட்டிய வாழைத்தண்டுதன்
வீண்வாழ்க்கையென்று.

வாழ்தற்குச் சொட்டிடு கணங்களை
வீணுக்கு ஊணாய்க்
கொட்டினோமே என்று
ஒப்பாரி இட்டு இட்டுக் கொட்டுதல்
கொடுமையும் கண்டு குலைகுலுங்கும்
கொடுமை.

தம் விழி பட்டவர் அற்றவர்
மற்றவர் கண்களை
விற்றிடக் கேட்டிடல்
முற்றிலும் மடைமை.

பாவியர்க்கு,
ஆவி ஆடி இருக்குங்காலை,
இத்தோடு
விட்டோம் பற்று என்று சொல்லாது
விட்டுவிடும் பற்று முளைக்குமோ
ஒருபோதேனும்
பாம்புப் புற்றாய்?

பட்டுக் கெட்டபின் வரு ஞானம்,
ஒழிந்த பிணம் சுட்ட சாம்பலுக்கு
உரல் உடையாதின்னும் உள்ளதே என்பதற்காய்ச்
சுற்றம் கூட்டி, சுட்டுவிரல் நீட்டிக் குற்றம் சுமத்தி,
சுண்ணம் தட்டித்தட்டி இடித்தழுதல்போல.

மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம்.
மிகைப்படாது முடி சிரைத்திருத்தலே சீர்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home