அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பெரியவளவுக்காரர்பெண்

செத்துப்போன அம்மம்மாவுக்குக் கடைசித் தொண்டைவிக்கல் எடுக்கையிலும்
இருந்ததொரு பெருங் கவலை,
பெரும்வளவுக்காரர் வழிக் கடைக்குட்டிக்குமர் ஒன்றைக்கூட
எனக்குக் கட்டிவைக்கப் பாழ்விதிவிட்டுவைக்கவில்லையென்று.

பெரும்வளவுக்காரர்,
முன்னைப்பெரும் பணக்காரர், கமக்காரர்,
பின்னை பல அடிமை தொண்டு செய் ஆண்டைச்சாதிக்காரர்,
தம்முன்னை பழையோர் ஆண்ட அந்நியர்க்குக் குடைபிடித்த
அரும்பெருமைக்காரர்,
தொழும்கோவிலுக்கு தென்னந்தோப்பளித்த கொடைபடிந்த மனக்காரர்,
இத்தனையுள் அடங்கா எத்தனையோ வகைத்தகமைக்குச்
சொந்தக்காரர்.

எட்டுத்தலைமுறைமுன்,
அவர்வீட்டுவேரெழு விருட்ச ஓரக் கிளைவிட்டுப்பிரிந்த
என்முன்னோரும் அவர்க்கு எதிலும் குறைந்தில்லை,
தெளிதிரவம்முடிந்த வாசனைத்திரவியக்குப்பி வாழ்க்கைத்தரத்திலும்
வெற்றுமண வாழ்ந்துகெட்ட வாய்ச்சவாடலிலும்.
ஆதலினால், என் அன்னையின் அன்னைக்கு,
மாப்பிள்ளை கொடுத்து அவர்தம் ஒரு மகளிர் மடக்கி அடக்கி
தான் கேட்டலுக்கு கூப்பிட்டலுக்கு கூலி செய்து குறைசொல்ல
எம்வீட்டிலிருத்த வெகு ஆசை இருந்தததறிவேன்.

ஆயினும், எனக்கது நாட்டமில்லை.
நான் பெண்விடுதலை பேசு புதுநாக்காளியல்ல,
பணக்கூட்டு விட்டு பாட்டாளி நலம்பேசு தோழர்கட்சிப்பேச்சாளியல்ல,
கிட்டத்தே உறவுவைத்தால் கிட்டிவரும் குழந்தைநலமும்
எட்டிக் கெட்டிருக்கும் என்றெண்ணு பகுத்தறிவாளியுமல்ல,
ஆயினும், நாட்டமில்லை எனக்கு,
அங்கொரு நங்கை என் கை பற்றி, பறந்துவந்து
அமெரிக்கத்தொடர்மாடி குளிர்கொள்குச்சிருந்து பொங்கிப்போடுதற்கு,
போனகதை பேசுதற்கு,
கொங்கை பற்றிக் கூடிக் குழந்தை பெற்று பின், பக்கத்தே
குந்தி,
கோரக்கொலைகள் விழு தொலைக்காட்சியிற் கோடம்பாக்கம் விட்டதொரு
அரைப்பைத்தியத்தின் குறைப்பிரசவம் பார்த்தென் உறையற்ற தலையணைமேல்
பாட்டமாய் நீட்டமாய் அழுதுவைத்து அழியாக் கறைக்கண்ணீர்ப்படுத்தி,
எழுந்து,
மீள குடிக்க வெந்நீர்வைக்கப்போயிருத்தலிலெல்லாம், சத்தியமாய்
நாட்டமில்லை எனக்கு இப்பிறப்பே, வாட்டம் தருதலின்றி
வேறொன்றுக்குமாய்.

வெறும் தேங்காய்ப்பொச்சாய்ப்போன பொய்க்கதை பேசிக்கிடக்கா
புரிந்துகொள் பெண்ணொன்று பார்த்துக் கிடத்தல் வாழ்க்கைக்கு நலம்.
அதைவிட்டு,
காலை எழுந்து கண் கழுவி பல் தீட்ட,
குளியலறைக்கதவு கொடகொடவென்றடித்துத் திறந்து,
"கண்டீரோ, மாலைக்கு வருகையிலே, ம வரிசை நடிகரின்
'மானின் பிரசவம்' படப்பதிவுநாடா எடுத்துவாரும்; ப
நடிகை,
புதிதாய் ஒரு நீலக்கல் பதித்த நெளியல்நகை
போட்டுக்கிடக்கிறாளாம் நெஞ்சின்மேல்"
தலைக்குள் தேள்கொட்டி தீத்திரவம் நாவாலெனக்கு நதியாய்
உருகியோடும்,
"நாசமாய்ப்போக, ம குதிக்கும் மானின் பிரசவம் என்ன,
மாமுனியின்
மலைப்பிரசங்கம் போற் கதையா?
ஓரிருவர் ஓடி, சிலர் குத்தி கொடுநரர்
மோவாயுடைத்து,
பின் கைக்கீறி பீறாய் செங்குருதித்திலகமிட்டு
கொட்டாவி விட்டிருக்க கொள்ளையாய்ப் பேசி,
அணைத்துப்போம்
முட்டாள் இலக்கணத்திற்கொரு வரைகோடுகீறு
ஆயிரம்பின்னும் ஆறு பூச்சியம் வரும் இலக்கத்து அதே
திரைக்கதைதானே?
போடி பொறுப்பற்ற போக்கத்த பெண்ணே,
போய் உலைக்குக் கொட்டு ஒரு கொஞ்சம் நெட்டல் அரிசியை
நீ.
மானின் பிரசவமாம்,
கள்ளமாய்ப் புளிமாங்காய் தின்றிருக்கும் ப நடிகை
நெளிநகையாம்."
போதுமிது, மிகுதி நாட்பொழுது நரகமாய் உழுதுவைக்க;
"அப்பா இப்படியோ, வளர்த்துவைத்தாரென்னை?
கேட்டால் வீட்டிலேயே கட்டித்தந்திருப்பார் குட்டியாய் ஒரு
வெள்ளித்தியேட்டர்.
இங்கே பார்த்தால், பெரியவளவுக்காரர் பேரப்பெட்டைக்குக்
கேட்கக்கூடக் கிடையாதாம் ஓருரிமை ஒன்றுக்கும்",
கொட்டிவைத்த புட்டும் சம்பலும் தொட்டுத்தின்னமுன் கொட்டிவிழும் சொற்கள்
தரை;
விட்டுவிட்டால் எனக்கிழுக்கு;
சிலுமிசச்சிருங்காரி, சின்ன வளவுக்காரரென்றால், சில்லறையாய்ப்
போச்சோ உனக்கு?
"சாணிப்பட்டிக்குள் மாடுவைத்து பால்விற்றுப் போம் நாட்பிழைப்பு;
இத்தனைக்குள்,
குட்டியாய் ஒரு படமாளிகை கொட்டிக்கிடக்குமோ, சொல்?
நெய்க்கட்டியாய்ப் பொய்சொல்பவளே,
எட்டுப்பட்டி கட்டி ஆண்டதெல்லாம் எப்போதோ போச்சு;
பொத்திக்கிட உன் புழுப்படு பொய் வாய்."
பின் புட்டுப்பறக்கும்; அதைத் தொட்டு முந்துதல்போல்,
தொடரும் சம்பல் செங்கார அர்ச்சதையாய் சிருங்காரிக்க நிலம்
தூவி;
இத்தனைக்குள் தொட்டில் விழித்தெழுந்து குட்டியன்று
இரவு கத்தா வட்டியும் சேர்த்துக் கத்தும் கிலியில்
வலியெடுக்காமலே,
அரசி தொட்ட சமையலறைச்சட்டிபானை நான் விட்டுப் புட்டுப்
பறக்கும்தட்டுகளை
விட்டுவிடுவோமா என்று விர் என்று விரையும்
என் வெறி விழியுரசி என் விரல் மொழியுரசி.
என் மொழி மேலும் கூர்ப்படையும்;
தேள் பூரும்; பாம்பு படமெடுத்து நின்றாடும்;
அவள்சரிதம் நீண்டு இன்னும் ஆங்கிலேய ஆட்சிக்காலம்,
அவள் பாட்டன் போர்த்தாங்கி ஓட்டியது பற்றிப் போர்வெறியிற்
புழுகிப் புழுங்கலேற்றும்;
குழந்தை அப்பனிடம் நாலு அம்மையிடம்
மூன்று தாளம் தப்பாமல் மெத்த மொத்த அடிவாங்கி
பால் பருக்காமலே ஞானம் பெற்று
தன் பாட்டப்பாட்டும் விட்டு பையப் பதுங்கி அடங்கும்.
சக்தி சிவச் சண்டை உக்கிரம் பெறும்;
ஒரு கணத்தில், மொத்தென்று தட்டப்படும் கதவு;
எட்டித்திறந்து, "எவனடா அவன் இடைவேளை விடுதற்குமுன்?" என்றால்,
கோபம் முகம் சோளப்பொரியாய்க் கொட்டிக் கிடக்க,
பெட்டிமாடி கட்டிப்பார்ப்பவர் எட்டி நின்று சொல்வார்
(எத்தனையாவது முறை? எனக்கே தெரியாது; விட்டுத்தள்ளுமது; வேண்டா
விழற்கதை),
"இங்கு பாரும், இனியுமிது தாங்காது; கூப்பிடப்போவேன் சட்டம்
காப்பவரை;
குட்டிக் கேட்டாற்றான் கொஞ்சம் அடங்குவீர்
உம் கூட்டுக்குள் பிறர் அமைதித் தஞ்சத்திற்கு வழிவிட்டு."
அன்றையவேளை அத்தனைக்குள் அடங்கும்;
ஆயினும், மாலை படச்சுருள் என்னோடு வரும்.
தலையணை கரை கறை விழும்; புதுநகைக்கொரு,
பொலிவு உடைக்கொரு துண்டுவிழும் என் அன்றைய மண்டகப்படியினிலே;
பின், மிஞ்சிப்போய் காலையிற் கத்துதற்கு சிறு குட்டி ஒன்று
மட்டும் போதுமென்றோ
என்றெண்ணி
படைப்புத்தொழிலில் இலவச இரவுப்பரிசோதனைகள் மீள் நடக்கும்.

மீளக் காலை வரும்;
கதகளிக்கலைஞி ஒருத்தி அன்று மாலை ஆடவந்திருப்பாள் இந்நாடு;
சாலை ஓரமாயே ஒழுங்காய் நடக்கவொண்ணா
என்னருமைப் பெருவளவுக்காரிக்கு
கதகளி கண்டு களிக்க வேளை வந்த புழுகம் வரும்;
பின்னோர் இயட்சயகானத்தொரு
குச்சி பிடித்து வழமை மோகினி ஆட்டம் நிகழும்
என் ஒரு ஈரரை அறைக்குடிசையிலே என்றும்போல்.
"என் தாயார் முன்னைய பாலசரஸ்வதிக்கு
பரதநாட்டியம் கோலாட்டிக் கற்பித்த நிருத்தநர்த்தகி"
என்ற சில பச்சோந்தி ஓணானும் சாட்சியற்ற வீச்சு
வெற்று வாக்கியங்கள் விழுந்திருக்கும் வெறு வளிவெளியில்.
காட்சி தொடரும்; போர்க்கரு காரணம், காரம் மட்டும் வகை
வேறுபடும்.

இத்தனையால்,
~ முன்னைப்பெரும் பணக்காரர், கமக்காரர்,
பின்னை பல அடிமை தொண்டு செய் ஆண்டைச்சாதிக்காரர்,
தம்முன்னை பழையோர் ஆண்ட அந்நியர்க்குக் குடைபிடித்த
அரும்பெருமைக்காரர்,
தொழும்கோவிலுக்கு தென்னந்தோப்பளித்த கொடைபடிந்த மனக்காரர்,
இத்தனையுள் அடங்கா எத்தனையோ வகைத்தகமைக்குச்
சொந்தக்காரர்~
இத்தனைநிறைவீட்டுமுன் மாமரத்துக்கிளை ஊஞ்சலாடி, இற்றைக்கு
வெறும் தேங்காய்ப்பொச்சாய்ப்போன பொய்க்கதை பேசிக்கிடக்கா
புரிந்துகொள் பெண்ணொன்று பார்த்துக் கிடத்தல்
வாழ்க்கைக்கு நலம் என்று பட்டிருக்கும்,
பிறர் பட்டகதை எட்டிப்பார்த்திருந்த என் மனத்திற்கு,
இன்றைக்கு.

-'98 மார்ச் 08, 00:37 (உலகப்பெண்கள்தினம்)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home