அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

வண்ணாத்துப்பூச்சிக்கோர் எடுத்துக்கூறல்

புழுவாகக் கூட்டுள் குறுகி முடங்கிக் கிடக்கும் சுகம் பெருமை
எடுத்து இயம்பக் கூடாதோ யாரும் இவ்விளைய துடி
வண்ணாத்துப்பூச்சிகட்கு?
மல்பெரி இலைக்கனவுகளுடன் உருகி அவிந்துபோன பட்டுப்பூச்சிக்
கூட்டுக்கதைகள் மட்டும்
பட்டென்று சொல்லி அவை பயம் காண எச்சரித்துப் போவது
எல்லாமே அநியாயம்.
ஏமாற்றம் இன்பம் எங்கும் பரவிப்போனாலும்
முன் வண்ணம் வடிவு மகரந்தச்சுவை தெரியா மலர் மடி மட்டும்
நம்பிப் பறப்பது முட்டாற்றனம் என்றாதல் தோன்றாதோ அவை
உணர்கொம்புக்கெல்லாம்?
காணாத தேனை, தூர, புள்ளி இறக்கை காண
இதழ்மூடி ஒளித்து, கள்ள மதியக் குட்டித்தூக்கக் கதையளக்கும்
வெள்ளைமலர் எரி வெயில் தின்னத் தேடிக் கண்டு,
ஒரு பழத்துண்டு உணவுக்குக் கோல் மேலாய் குத்திடும் குரங்கென்றே
சுற்றி மெத்த செட்டை நோகச் சில நடனச்சேட்டை செய்தலிலும்
மரப்படுக்கை அருகிருக்கும் பச்சை இலை பாதித்தூக்கத்தே அரித்துச்
செரித்து
புழுவாகக் கூட்டுள் குறுகி முடங்கிக் கிடக்கும் சுகம் பெருமை
எடுத்துக் கூறக்கூடாதோ யாரும் இவ்விளைய வண்ணாத்துப்பூச்சிகட்கு?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home