அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

"யானோ கொற்றன்! ............... நானே கள்ளன்."

கொற்றவன் தான் என்றான் மனக்கூன்பாண்டியன் என்பான்;
பற்றுதன் னகத் திட்டங்க ளற்றவை நுட்பம் செத்தவை - சொன்னான்.
கெட்ட கூற்றுவன் அற்றிலன்; ஆயின் குணத்தே கூன் உற்றவன்
பட்டவை அடிமனதினில் புறம் கொட்டியே கெட்டவன்.

உற்ற நன் மைந்தன் தமிழ்க்கோவலன் தன் உள்ளம்
பெற்ற கவி முத்துப் பரல் தனை விற்றிடவந்தனன் ஆங்கே
கெட்ட வோர் கொல்ல னுரை கூனது கூட்டிடப்
பட்ட தோர் வேளை மன்னன் மதி கெட்டனன் முற்றாய்.

திட்டினன்; திரளாய்ச் சினம் பெற்று விழியிற்
கொட்டினன் கொதி கனல்; குருதி கதி கொள்ளத்
தட்டினன் தொடை; சித்தம் சிதறிக் கைவிரல்
சுட்டினன் வெட்டனக் கோவலன் சிரம்.

சினம் தணி பின்னொரு போது மதிக்கண்ணகி வந்தனள்;
என்னவன் எங்குற்றான்; ஏதுபிழை செய்துற்றான்
என்றதோர் கேள்வி எழுந்ததவ் வவையிலே. கூனன்
தன் வன்னுடல் மேலும் நாணிக் குறுகிட, தறிபடக்

கொட்டிப் பரந்தது சிதறற் சொற்பரல் தரை எங்குமே.
மன்னவன் மருண்டான்; தன் மனமருட்கொல்லனைச் சினந்தான்;
என் முன்பிழை அதுவென விழியிமை துடிக்கவும் மறந்தான்.
தன்னை வைதான்; தன்னின்னுயர் இனி அவனி வையான்;

மாசறு மன்னவன் நானிலன்; மாண்புறு வளநானிலமென் உள்ளமில்லை.
ஆள் கொற்றவன் நானில்லை; இனி என் கூற்றனே யானாவேன்.
எனைப் பெற்றவள் கண்டிட்டால் பெரும் பழி கொண்ட தாய்ப்
பேச்சிழப்பாள்;
அவசரத் துட்டனாய் ஆனேன் நானே; ஆழ்துயர்சூழ்பழி கொண்டோன்தானே.

சரிந்து வீழ்ந்தவன் சபைநிலம் விட்டனன் தன் உடல் சேராவி
வரிந்து வாங்கிய மூச்சை வளிக்கே வந்துபிடியென்றிருத்தி
ஏங்கிப் போனோன் சொன்னான் இழி விவரம் வரியாய்க் கூவி,
"யானோ கொற்றன்! ............... நானே கள்ளன்."

0பின்னூடுகை:

Post a Comment

<< Home