அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

காலடித்துச் சிரித்தன காலமும் குழவியும்

கொலுவிருந்த சபை எழுந்தது.
மாமன்னன் சாலமன் வந்தமர்ந்தான்.
அலையங்கு மீண்டமர்ந்த தடங்கி.

நாட்டு நிகழ் காரியங்கள், காரணங்கள் கேட்டபின்னே
நாட்டியங்கள் தொடங்குமென சாட்சியங்கள் தோன்றையிலே,
அவை வாய் கேட்டிருந்த பேச்சுக்குரல் அவலமென ஆகியதால்
மிகை யாய் வீற்றிருந்த ஆவலுடன் குரல் கொடுத்தான் பெருங்குடிக்கோ.

உள்வந்த பெண்டிர் இருவர்;
இவர்கட்டுட் பிரிந்திருக்கும் பெரிதாய் பருவமும் உருவமும்.
முன்னே கட்டுடல் அற்று வந்தாள் வயது சொல்லும் நெற்றிமேல் வெண்
முடிக்கற்றை
பின்னே பட்டுடல் பொருந்தி நின்றாள் சற்றே இளம் பெண்;
பேரிளம் துடி மாது.
அனுபவத்தே ஆகி வந்த பக்குவம் முன் அடங்கிக்கிடக்கிட,
பருவத்தே ஆள்ளிக் கொட்டும் பளபளப்பு பின் துடிக்கும்.
இவரிடையே,
முள்போல உடல் துருத்தி என்பெ வரும் எண்ணிடலாம் என்றோர்
இளம்பிள்ளை.
கூடவே, அது தன்னோடு கூடிக் கொணர்ந்த பேதமுமாம்.

என் பிள்ளை இதுவென்று இழுத்து நிற்பார்;
ஒருவள் காலடியில்; இன்னொருத்தி சிறுசிரத்தே.
துடிக்கும் குழவி;
வாய் பேசிச் சொல்லமுடியாக் காரணத்தே
விழி பேசி கால் துடித்துப் பின்
தான் விறைந்து விம்மி அழும்.

சபை சேர்ந்து சிரிப்பகற்றிச் சிலிர்த்திருக்கும்;
நடனநங்கை நடுமார்பு விம்மி வியப்பிலொரு நர்த்தனம் ஆடும்
-நட்டுவாங்கம் குழவி குரல்.

அத்தனை சித்தமும் அடங்காமல் வினா விடுக்கும் அதனதனுள்...
.... "ஒரு தாய்க்கு இருபிள்ளை பிறப்பதுண்டு - ஆனால்,
இரு தாய்க்கு ஒரு பிள்ளை பிறப்பதுண்டோ?
அசல் யாரோ.... நகல் யாரோ?" #

பிற மாதர் உதரம் தன் உதிரம் வைத்தொரு குழவி தனக்கெனவே
எவளும்
பெற்றிடத்தெரியா நேரத்தே பிறந்திருந்தது இப்படியோர் பிரச்சனைக்குக்
கரு.

சத்தமிட்டோர் சிரிப்பு.
- சலனம் மீண்டு(ம்) முகிழ்ந்தது முகங்களில்.
சுற்றிப் பார்த்தனர்.
விட்டுவிடாமல் கொலுவெல்லாம் நடுங்கிட
குலுங்கிச் சிரித்தவன் கொற்றன் எம்மான்.
- சிலிர்த்த சிந்தைகளில் ஆங்காங்கே
வெடித்த சிறு சன்னமாம் சிறு கேள்வி;
அதன் சின்னம் கொக்கியெனக் தொக்கிக்கிடந்தது
ஆழக் குத்தியெழுப்பிய விழிகளின் வேலியில்.

பத்து மாதம் பதுக்கி வைத்துப்
பெற்ற சுற்றம் தாமேயெனக்
குற்றம் சொன்னோரும்
கொலுவோடு குலைந்து
குலுங்கிப் போயினர். - முழுதாய்க்
குழம்பிப் போயினர்.

மன்னனை மனிதனெனப் படைத்த
மகாப்ப்ரபுவும் மதி மயங்கிப் போனார்
மன்னன் மதி,
மடிந்து மழுங்கிப் போயிற்றோவென்றெண்ணி.

"வாளெடுத்துப் பிள்ளை வயிற்றுக்குடல்
நூலெடுத்து பெண்டிர் கையிற் போட்டு,
கால் பிரித்துப் பாதிக் கணக்கிட்டுக் கொடுக்க
ஆள் அழைத்து வாருமென்று ஆகிடுமோ?"
என்று அவதியுற்றார்
அந்த அசரீரி ஆண்டவனார்.

கோன் கொல்லென்ற நகை நிறுத்திச் சொன்னான் தன் சொல்.

" ஆள் உடல் கூர்
வாள் பிரித்துப் போட்டாலும்
தாள் பணிந்து காலெடுத்துப் போவீர் நீர்.
நும் களி சுவைக்க,
குழவிக் கறி உமக்குத் தேவையின்றி - அதன்
களிப்பெடுக்கும் குமிண்சிரிப்பு அல்ல.
ஆதலினால்,
இன்றொரு சிறு
விதி சமைத்துப் போடுகின்றேன்.
பிள்ளை உடல் சிறத்து,
பின்னை உயிர் சிரிக்க - ஒன்றாய்ப்
பக்குவமும் பளபளப்பும்
சேர்ந்திருக்கப் பார்த்திருக்க -
நுமக்கென நான் - தனி இறுக்க
விதி சமைத்துப் போடுகின்றேன்.
பிள்ளையே பெரிது; உம்மிடைப்
பிடுங்கலல்ல பேதையரே.
விவகாரம் இனி வேண்டாம்.
விடை தந்தோம் யாம்.
விரைக வெளிவாயில். "

அவை கலைந்தது.

வெளுத்து
மூக்கு நுனி துடித்த பெண்டிர்
விழி புடைக்க,
கலி யுடைத்துக்
களி யுடைத்து
காலடித்துச் சிரித்தன
காலமும் குழவியும்.


# நன்றி: கண்ணதாசன் (என்பதாக நினைவு)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home