அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

மாரி மழையின் பின்னால்

மாரி மழையின் பின்னால்
சாய்வு நாற்காலி
கொய்வேன் அவள் நினைவு.

மாரி மழையின் பின்னால்
சூடான தேநீர்
நீராவி அவள் மூச்சு.

மாரி மழையின் பின்னால்
கம்பிளிப் பூச்சி
சிவப்பு அவள் தொடுகை.

மாரி மழையின் பின்னால்
குளிர் இரவு
போர்வை அவள் வெம்மை.

மாரி மழையின் பின்னால்
கத்தும் தவளை
தாவும் என் மனது.

மாரி மழையின் பின்னால்
குடைக் காளான்
நனையும் என் விழிகள்.

மாரி மழையின் பின்னால்
சொட்டும் நீர்
தேங்கி என் காலம்.

மாரி மழையின் பின்னால்
புத்தகப் பூச்சி
வாசனை காதற் கடிதம்.

மாரி மழையின் பின்னால்
முறிந்த மரங்கள்
அவள் வராத நாட்கள்.

மாரி மழையின் பின்னால்
ஊரும் நத்தை
அரிக்கும் கை விரல்கள்.

மாரி மழையின் பின்னால்
தேங்கிய குட்டை
துள்ளும் இரு விழிகள்.

மாரி மழையின் பின்னால்
பள்ளி விடுமுறை
தூரத்தொடர் நேர நிழல்.

மாரி மழையின் பின்னால்
நீண்ட தூக்கம்
கோடை எரிக்கும் கனவு.

மாரி மழையின் பின்னால்
வண்ணாத்துப் பூச்சி
துடிக்கும் புண் வலிகள்.

மாரி மழையின் பின்னால்
கனலும் சூடேற்றி
வெறுக்கப் பிறந்த நான்

மாரி மழையின் பின்னால்
விளக்கு விட்டில்
எரியும் என் நான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home