அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

குளத்திலே ஒரு கல்

குளத்திலே
ஒரு
கல்.

சுவர் பற்றிப் பிடித்தெழுந்து
குட்டை நடை வைக்க முயல்
முதல் நாள் தட்டித் தவறி விழ,
நிலம் தொட்டுப் பல் குத்தி
குருதிப் பொட்டொன்று வைக்கமுன்னர்,

குளத்திலே
ஒரு
கல்.

பள்ளிக்கூடத்து வாயில்;
விட்டுத் தாய் போக,
பயம் பற்றிப் பிடித்தழ மனம்
முற்றுகை வைக்கையிலே,
எட்டி முன் தெறித்தோடி,

குளத்திலே
ஒரு
கல்.


பத்தாம் வகுப்பு;
பக்கத் திருக்கைப் பெண் கை
பக்கவாட்டிற் தன்னிச்சையின்றித்
தொட்டுப் பட்டொரு முத்துப் பல்
சத்தமின்றி மொட்டவிழ்க்கப்
போகுதென்ற போதினிலே
சித்தத்தே நீர் தெறிக்க,

குளத்திலே
ஒரு
கல்.

இப்படியாய்,
முதல் மாதப் படி கைக்கெட்டு கணநேரம் முன்,
முதல் முத்தம் இதழொற்று சில நொடிதன் முன்,
முதற் பனியை நான் பார்த்த தை தினமொன்றே,
தொலைபேசி தந்தை இறப்புரைக்க எழுகையிலே,
தொலை நாடு நான் நகர தொடர்பொன்று ஆகையிலே,

குளத்திலே
ஒரு
கல்.


இன்றுவரை என் சிந்தைக்குத் தெளிவில்லை
-ஏன்
ஏதெனக்கு வாழ்க்கையிலே
இயங்குதடம் மாற்றவானாலும்,
மூளையிலே முதற் தோன்றுவது,
நானறியாக் குளமொன்றில்
யார் எறிந்தார் என்றின்றி
தானாய்த் துள்ளி விழும்
ஒரு சிறுவுரு(ள்) கூழாங்கல்?

சென்ற வாழ்வுத்தொடரோ,
இல்லை, இனிச்
செல்லிடத்துத் தான் இருப்போ,
என்ன உறவதுவோ,
என்னில் ஏனெழுந்து வந்ததுவோ...

முன்னையரு நண்பனோ
பின்னை வரும் பெருந்துயரோ
என்னவோ .....

.....நானறியேன்.

ஆயினும்,
நான் போகும் நாடெல்லாம்
ஊர்க்குளமும் உருள்கல்லும்
தேடித்தி¡¢தல் என் இயல்பு.

'99 மே 20, வியாழன் 16:24 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home