அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஒரு கிருமியின் விண்ணப்பம்

வாழ்;
வாழவிடு.

உன்னைக் கெடுத்தலல்ல
என் நோக்கு.
ஆயினும், என் செய்ய?
அ·தே என் இயல்பு.

வேண்டிப் பெற்றதல்ல
கிருமி யாக்கை;
நான்,
விழைந்து கெடுப்பதுமில்லை
உன் வாழ்க்கை.

பொருதிக் கொள்ளும் சமர்க்களம்,
உன் - தின வாழ்க்கை,
என் - கண வாழ்க்கை.

பொருதலின்றிப் பிழைப்பேது...
உனக்கோ,
உனை, உன் உடல்தன் ஊனை,
உள்ளுறு ஓம்பி வளர் உயிர்தனை,
ஊணெனக் குடிக்கும்
எனக்கோ?

"தக்கன பிழைக்கும்;
தம்முட் தகைப்பட்ட வலியன செழிக்கும்."
வாழப் பக்குவம் அற்றதைச்
சுற்றி வந்தழிக்கும்
இயற்கையின் சுற்று.

அதனால்,
என்னைச்
சுட்டிக் கைநீட்டிக் குற்றம் சுமத்தலை விட்டு,
நீயும் வாழ், மனித;
என்னையும் என்னகத்தே வாழவிடு.

பிறப்பொக்கா வெவ்வுயிர்க்கும் சிறப்பதன்
கிடைப்பினைச் சிறப்புறச் செயல்
எனப்படும் எவரும் எழுதா இயற்பியல் நீதி.

வருமுன் காத்தல் உன் கடன்;
அதன் முன் வழி பார்த்தல் - என் தொழில்.
தொழிலின்றி இயங்கா தெவ் வுயிரும்.
தளருடல் தேடலும்
தேட்டத்தைத் தின்னலும்
-சின்னக்கிருமி என் தொழில்.

பொருதிக் கொள்ளும் சமர்க்களம்,
உன் - தின வாழ்க்கை,
என் - கண வாழ்க்கை.
அறிந்தோன் நீ -
ஆரத் தழுவிப் புணர்ந்து பெருகு ஆறறிவாளப் பெருந்தகை,
நான் -
சிறு நுணுக்குக்கருவியும் பெருக்கிக்காட்டா ஒரு கலம்பிரிந்துயிர் கருவுறை
கிருமி.

சமனெனப் படாதெம்மிடைச் சமர்...
எனினும்,
பொருதுவேன் உன்னுடன்
பொழுதெலாம் வேள்வியாய்.
என் வாழ்க்கை - கணத்தெரிந்தணைவது,
காற்றிடைச் சாடிடும் தீச்சுடர் ஒன்றென...
ஆயினும் வாழ்ந்திடும் போதெலாம்
வாழ்குவேன் எனதென.

பொருதல் என்பதே புருஷம் என்பதைப் புரி.
எம்மிடைக் கணியங்கள் பிரி குறி,
சமனிலி எனினும், சளைக்கா
இணை எருதுகள் மூர்க்கமாய்
யாம்
மூசிப் பொருதுவோம்; எழுந்து வா.

நீயும் வாழ், மனித;
என்னையும் என்னியல்பே வாழவிடு.

'99 ஜூன் 15, செவ்வாய் 11;37 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home