அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஓணானுக்கு இறுதி எறி

வரும் வருட வசந்தத்தில்
ஏதோ ஓர்
ஓணானைத் தேடுங்கள்.

குயிலுக்கு, குருகுக்கு
பூவுக்கு, புதுசுக்கு,
துளிருக்கு, தளிருக்கு
வேருக்கு, நீருக்கு
வேண்டாம் வரவேற்பு
வரும் இளவேனிற்பருவத்தே.

முள்வேலியில் நின்று
முதுகைச் சிலிர்க்கும்
ஓணானைப் தேடுங்கள்.

ஒட்டாமலேனும்
உதடு குவித்து
கொத்தாக வேணாம்,
ஒற்றைப்படவேனும்
குட்டி முத்தம்
கை பட்டுக் கனக்க
காற்றில் அதன் திசை
இட்டுப் பாருங்கள்.

எத்தனை நாள்
கத்திமுள் முதுகுக்குக்
கல்லடித்துக் களித்திருப்போம்;
குற்றம் அது சொல்லவில்லை;
மிச்ச நேரம்கூட,
மிக்க வேதனையுள்
செதில் சிதைத்து
அடியாத் திசைக்கு
முதுகாக்கி நின்றது,
மிச்சப் பேருக்கும்
மிச்சக் கல்லுக்கும்.
அச்செயலில்
அ·து இயேசு.

ஒரு சமயமென்றாலும்
ஓடும் ஓணான் வாதையில்
உள்ளே உவப்புற்ற
முன்னைக் குட்டிப்பயல்கட்கு
முக்கியமான வேண்டுகோள்:
உங்கள் கைச்
சொச்சக் கற்களுள்ளும்
எச்சமாய்க் கிடக்கலாம்
ஏதேனும் நன்றி
பிச்சைக்கு.

சிறு பூப்பறித்து
ஒற்றியெடுங்கள்
அதை.
ஓரமாய் வீட்டில்
ஒளித்து,
பத்திரமாய் வையுங்கள்.

வரும் வருட வசந்தத்தில்
ஏதோ ஓர்
ஓணானைத் தேடுங்கள்.
"தேடுவோர் பெற்றுக்கொள்வார்"
-தேவனின் வார்த்தையாம்.

அது தப்பிப்போகுமுன்,
சுருக்காய்
சுள்ளென்றது உடல் சுட்டுத் தைக்க
விட்டெறிய வேண்டுமென்பேன்,
அப்பூ.


'99 ஜூன் 17, வியாயன் 00:18 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home