அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

கலியுகம்

Rubik's cube
சுற்றிப்பார்த்தார்
சுவாமி.

மூழ்கிபோனதோ
முழு மதிய நேரம்.

முக்கி முக்கி
முனைபற்றி முறுக்கியும்
முற்றுப்படவில்லை
முக்கண்ணர் முயற்சி.

இன்றைக்கும்
இ·தெனகு
இயலாதென் றெண்ணுங்கால்,
இருதிக்கில்
இடம் மாறி
எட்டிக் கிடந்ததிரு
வண்ணம்.

சுற்றுமுற்றும் பார்த்தார்
சுவாமி.

முழுநித்திரையிற் கிடந்தாள்
தேவி;
ஊர், மயிலூரப் போயிருந்தான்
முருகன்;
பெருச்சாளி பின்னோடிக் கொண்டிருந்தான்
பெரிய பிள்ளை.

உருவி ஒட்டிக் கிடந்ததறை
உயிர் மோனம்.

நகம் நகர்
சத்தமின்றிக்கூடக்
சட்டென் றுரித்தார்
சங்காரி,
சங்கடத்திரு சதுரம்.

பட்டென்று ஒட்டினார்
நிறம் பொருந்த,
பக்கம்.

கனம்
சுற்றிப்பார்த்தார்;
கச்சிதம் அவர் கலை.

துக்கம் அகன்றது.
துள்ளினார்.

எட்டி அழைத்தார்
உடல் இளையாப்புத்திரனை;
தட்டியெழுப்பினார்,
தட்சன்புத்திரி தலை.

"தேவி,
வெற்றி! வெற்றி!!
வென்றது வாய்மை."

0பின்னூடுகை:

Post a Comment

<< Home