அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

இயங்கொழுக்கு

பாலைமணற்பரப்பு
ஒழுக்கென்றாகும்
உயிர்வாழ்க்கை.

அவரவர்க்காகும்
அவரியக்கும் சூத்திரம்.

காலமும் மனமும்
சாராக் கணியங்கள்.

வாழ்வுக்கோலங்கள்,
கீறக் கிடக்கும்
மேலொரு பரப்பு,
சார்கணியம்.

அதில்,
அகில உயர்புள்ளி தொடுதலும்
அருகிரு இழிபுள்ளிகூட அகல்தலுமே
என் நோக்கு.

ஆயின்,
அவை அறிதலும் தெரிதலும்
அடங்கா தென் அறிவுக்கு.

ஒவ்வோர்
வீழ்விலும்,
அகிலத்து ஆழ் இழிகுழி
இதுவென்றே சொல்லி
அழுத்தும் அதற்குள்
ஏதோவொன் றெனக்கு.

நிழலைக்கூட
தன் இருட்குகைக்குள்
நெரித்திழுக்கும்
உட் தளநிலம்.

அகமும்
புறமும்
சாணேற
முழம் சறுக்கும்.

எனினும்,
எழுந்தோ, எகிறியோ
எப்படியோ
வெளிவருவேன்
உயர் தளத்தே;
இடை விட்ட பயணம்,
என் இஷ்டப்படியே
இனியும் தொடரும்.

கணிதவழி
இயங்கொழுக்குச்
சூத்திரத்தாலான
மேற்பரப்பே
வாழ்க்கை.

இயங்கு தளம் எனது;
ஏற்றமோ, இறக்கமோ,
எனதுமட்டுமே,
என் இயங்கு தளம்.
அதன் சூத்திரம் இடுபவர்,
காலமும் நானுமே.

உச்சி ஏறியபின்
உருளாமல்
இருப்பதே
குறி.

ஆதலில்,
என்னிற் சாராதியங்கும்
காலத்துக் கஞ்சுகிறேன்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home