அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஆடி முன்னொரு ஆக்கதாரி*

வாழ்வு முன்னிலைக்
கண்ணாடியாய் ஆகவேண்டும்
என்றார் கவிதை.
தந்தான்.

தளவாடியின் முன்வைத்தார்.
கற்பனை,
தலை பெருத்து, உடல் சிறுத்து,
காலகட்டிக் கைவிரித்த
காரண மென்னென்றார்;
கனன்றார்; மோதிரக்கை
ஓங்கித் குட்டினார்
உச்சந்தலை; நகவிரல்,
உடைய உடைய
பற்றியுடல் பக்கம்
இழுத்து விரித்தார்.
புறுபுறுத்தார்; வெயில்
வீழ்படு புழுவாய்ப்
பதைபதைத்தார்;
களைத் திளைத்தார்;
பாவம் தோற்றார்.

மொழித் தராசுதாரர்,
முக்கண்ணன் ஆகமுன்
முகம் மறைத்து
மூலைக்குள்நகர்ந்தான்
இயற்கை முடுக்கத்தே
தன் மொழிக்கொரு
கவி படைத்தோன்;
ஆயினும்,
அவன் இத்துடன்
முக்காடிட்டானாய்
முடியான்.

சீப்பின் சிந்தனைக்கு,
முன்னே
முடித்திருத்து கண்ணாடி மட்டும்
வைத்துக் கொண்டார்
மொழி விமர்சகர்.

பார்த்ததை, பசையாய்
நிழற்படம் பிடித்தொற்றுவதில்,
என்னவுண்டு படைப்பாக்கம்?

ஆனாலும்,
ஆங்காகே அவர் அளவுக்கு நீண்டதை
அரிவதென்பதில் அகட்டி விழிகுற்றி
முடித்திருத்துத் தளவாடி மட்டும்
தான் வைத்துக் கொண்டார்
தாய் மொழி விமர்சகர்.

சிற்றூர்தி முன்னால்,
ஓடிப்பின்வரு
பேரூந்துப் பெட்டியெல்லாம்
உடல் சிறுக்கி,
தொகை பெருக்கிக் காட்டும்
குவிகண்ணாடி ஆகாதோ,
கலை?
............கதை??

முழுமுகம் விலக்கி
சிறு முகமயிரும்
கருகருக்கப்
பெரிதாக்கிக்காட்டு,
குழிவாடியாகாதோ,
கலை?
........... கவிதை??

இயங்குடலில்
தலையரு பழுதுண்டாயின்,
மீதி உரு நினைவொழித்து
அது ஆய,
பெருத்தி உரைத்தலே
கவி.

ஒளி பிரிக்கும் அரியம்,
ஒளி முறிக்கும் வில்லை
அ·தெனக்கு,
அறியப் பொறுதியில்லை
ஆதலால் வேண்டாம்......
... ஆக, ஆங்கே,
ஆக்கு ஐந்தா றுரு என்றார்;
அவர் அறிந்த தள
ஆடிச் சூத்திரத்திற்
கதுவமைய வேண்டி நின்றார்..

மொத்தமாய் வெற்றுடலே
ஒளியாகித் தளமிருந்து
உருத்தெறித் தங்கு,
சரிந்த சடமொன்று
சடங்கிற்கு வந்ததென்க.

ஆடி முன்னொரு ஆக்கதாரி
நின்றிருந்தாடிக் காட்டினும்
நிருத்தம்,
குறைநிறை கோடி காட்டாது
கோணற்படின்
கண்ணாடிக் கேற்ற
கதை மாற்று,
கவிதைத் தலை மாற்று,
கை இணையப் பூட்டு கலையை
என்பதாம்
விமர்சனர் விருத்தம்.

முன்னை
மொழிக்கிப்போ,
உடலில்
மிக வருத்தம்.


' 99 ஜூன் 17, வியாழன் 20:37 மநிநே




* மலையாளக்கவிஞர், தமிழ்-மலையாளம் மொழிபெயர்ப்பாளர்,
ஆற்றூர் ரவிவர்மாவின் பேட்டியன்றிலிருந்து,

"உங்கள் கவிதை புரியவில்லை என்று சிலர் சொல்கிறார்களே?"

"புரியவில்லையா? படைப்பைக் கண்ணாடிபோல் ஆக்குவதற்கு
முயன்றிருக்கின்றேன். குழிக்கண்ணாடி. ......"

0பின்னூடுகை:

Post a Comment

<< Home