அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

Yours truely Humble-Next-Door-Megalomanic

ஆதியில் நானொரு சிறுவன்;
ஆயினும்,
அங்கங்களின் அளவோ,
அன்று போற்றான் இன்றும்.
உணர்வுதான் ஒவ்வொன்றும்
எங்கெங்கும் ஒவ்வாமால்
அங்கங்கள் தங்கா அளவு பொங்கி
ஆகிப் பருத்தன உரு.

இன்று,
இல்லாப் போலியில்
இருந்தெழுந்தது
புதிதாய்ப் பூத்த
பூதாகரம்
-" நான் அறிவேன் யாவையுமே;
அ·தின்றேல் அறிவு வேறில்லை."
கேளுங்கள் என் சேவகரை,
கண்மூடிக் கைகுவித்து
கும்பிட்டுக் கூறிடுவார்,
-" அவர் அறிவார் யாவையுமே;
அ·தின்றேல் அறிவு வேறில்லை."

என் எண்ணங்களின் விரிவாக்கம்
என் எதிரிகட்கே சமர்ப்பணம்.
இனி அவரே
என் இனியவர்.
எவரும் கைதட்டிக் கொண்டாட
கைப்பிடித்து எனை நடத்து
நல்வழிகாட்டி.
ஆனால், பாதைகாட்டிகளும்கூட
என் பாதக்குறட்டுப் பராமரிப்பாளர் ஆகல் வேண்டும்
(எனக் கொள்ளவேண்டும் அவா) என்பதென் அவா.

சித்தம் நிறைந்திருத்தலே முற்று;
-அறிவீர் நீர்.
நிறைத்தல் எதனாலென்பதல்ல;
-அதை அறியீர் நீர்.
அளத்தலோ முகத்தலோ
அதுவும் என் கை அளவுக்கே.
என் வீட்டுச் சிறு குடத்தினுள்ளும்
சுருங்கிற்றாம் சிலகாலம்முன்
தென் கடல்.

பூதப்பித்தன் ஆனாலும்,
- புரிவீர்-
நான் உங்கள்
அண்டைவீட்டு
தாழ்மைகொள்
பூதப்பித்தன்.

காற்று வெளி,
வானில் ஊற்றும் ஒலிகூட
எனக்குத் தோத்திரம்தான்
என்றறிவேன் நான்.
என் சேவகர் அறிவார்.....
வாமனன் வழி வந்தோன்,
மாபலியைப் பலி கொண்டோன்
யாரென.

ஆயினும் என்கொல்?
இன்றும்கூட,
நான்
- பிரமாண்டப்பித்தன்-,
என்றும்
உங்கள் அன்பிற்குரிய
அண்டைவீட்டு
எதிலும்-தானெனும்
எளிமைகொள் நினைவோன்.

~~~~~~~~~~

என் வீட்டிலும்கூட எங்குமிருந்தாலும்
எதிர்வீட்டில் மட்டும்
என் கண்பட்டு
எல்லோர்க்கும் சுட்டிச் சொல்ல இருப்பான்,
என்றும்
உங்கள்
அண்டைவீட்டு
தாழ்மைகொள்
நானெனும்
பூதப்பித்தன்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter