அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

அசைவறு வாழ்வு/ஞாபகத்தின் தாக்கம்*

Still life/Persistence of Memory*

மெல்லக் கண்கிறங்க,
ஓர் அசைவறு வாழ்வு ஓவியம்.

எனது முன்,
கணத்தினிற் பரவிய உலகு.

'ஞாபகத்தின் தாக்கத்து' நேரக்கம்பிகள்
நிலைக்கும் கணம்.

தரையினிற் பரவிய மெத்தை;
தலையணை முகம் அணைத்துக்
கவிழ்ந்த புத்தகம்;
தொலைக்காட்சித்திரை,
அலையுறுகுழம்புவர்ணம்;

மீயுந்துமெய் நிலையின்மீதொரு சலனம்.

திரையுயர் சாளர மேகம்,
நடைதவிர் நடுகையாகும்;
வெளிதனை நோக்கும் பாவை,
முகமதில் மழைதெறி துளிகள்.

கனவிற்கும் உணர்விற்கும் இடையரு
யாத்திரையின் தரிப்பிடத்தே நினைவு.

மாநகரமாடிக்குடியிருப்பு
ஏணிப்படிகளில் எற்றிவிட்ட
தாழம்புதர் நதிதீரத்து ஓடக்காரன்
போலோர் உணர்வுள்ளே
கணம் கவிந்து கழியும்.

ஓர் ஆரம்ப ஓவியனின்
அசை கைத் தூரிகை துப்பு,
அசைவறு வாழ்வுக் கணப்படைப்பு
- என் கிறங்கலில் வீழ்படிவு.

படக்கருவியுட் சொடுக்கிய கணத்தினை
உடன் கழுவிய விம்ப விளைவு
- தொடரும் வினை.

முன்னொரு நூற்றாண்டின்
முகம் தெரியாத் தூரிகைதன்
இழைப்பின்னலை என்னுட்
பெற்று மீண்டேன்.

அழல் அவிந்தும்
நிழலுடன் ஒழிவிலாக்
கணநினைவு தொக்கும்;
தொடரும்.

கணத்தில் உருகிய உலகு,
பின் எனது.

கணம், கல் சமைந்த
ஓவியக்கடிகாரங்கள்
நேரம் நிமிண்டி, நிமிர்ந்து
மீளத் தொடங்கின,
உருகிச் சொட்டுதல்
கீழ்க்காலப்பாதையில்.


*Persistence of Memory: ஸல்வடோர் டாலியின் உருகும் கடிகாரங்களுடனான ஓவியம்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home