அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

உரல்களுக்குப் பின்னே உலவியதெம் உலகம்

உரல்களுக்குப் பின்னே உலவியதெம் உலகம்.

உலக்கையின் விழுத்தல்கள், உளப்பதிவுகள் ஆகும்.

அவள்களின் உலகம்,
உரல்களின் பேச்சும்
உலக்கையின் இடிப்பும்.

உலகு சுழலச்சுழல பதிவுகள் பெருகும்.
அரிசிப்பதிவுகளின் மேற்படியும் உமியும் தவிடும்.

உமிகூடக் கரியாகும்;
பல் வெளுக்கும்.

புழுங்கற் றவிடு,
வீடு மணக்கும்.

செழிக்கும் முற்றம்.

அந்நாளில்,
அவள்கள் கனவுகளின் வளப்பம்,
இடுப்புரல்-பூணுலக்கை
பொருதிப் புணர்தலுள்ளே
வெறுமனே முடக்கம்.

******
இன்று,
அவள்களின் உலகம்
உருண்டது;

மெல்லென அவலத்துள்,
அவல்-பேச்சுத் தின்றது
மெல்லும் உரலடி நாக்கு;

நிலை குத்த
உலக்கை தூக்கு தளிர்க்கை
நிதானித்து,
கிடக்கையிலே,
உரப்பையுட் கலப்பை தாங்கி
நெடுக்கினில் நடக்கும்.

சினைப்படு கனவும் கவலையும்
அற்றுப்போனது சிறுமிகள் கருப்பை.

பேரிடி கேட்கும்;
மின்னல் முளைக்கும்.

சமரில் ஆணுக்குப் பெண் சமனென்று
வெறும்பேச்சுக்குப் பின்னாலும் கொட்டியது முரசு.

******

உரல்கள் இடி ஒலி ஓய்ந்தன;
உருண்டன ஒரு மூலைக்குள்.
உலக்கைகள் சுவர் சாய்ந்து தூங்கின.
பூண் மழுங்க,
போயின பேர்புகழ்.

நெற்குதங்கள் பாதி குதம் வற்றிச் செத்தன;
மிச்சமோ இயந்திரத்தைக் குத்தகைத்து
சத்தமொழியாது சல்லித்துப் போவன.

சிகண்டிப்பேடிகள் நாங்கள்மட்டும்,
உரலடிப் பேச்சுடன்
எட்டத்திலோடி ஒளிந்துகொண்டோம்;
பின், இன்னும் பேசுகின்றோம்....
.......................... பேசுகின்றோம்....
ஓய்ந்த இடுப்புரல்களையும்
தூங்கு மரவுலக்கையையும்
துளிர்க்கவைத்தல் எவ்வண்ணமென..

*******
ஊர் விட்டு ஊர் தேடி,
உலங்கு வானூர்திக்குக் கீழே ஓடத்தொடங்குமுன்னே,
முற்றத்து உரல்களுக்குப் பின்னே உலவியதெம் உலகம்.

'00/04/26

0பின்னூடுகை:

Post a Comment

<< Home