அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஓர் அறை(யும்), இரண்டு பேரும் மட்டுந்தான்

ஓர் அறை, இரண்டு பேரும் மட்டுந்தான் என்பதால்
இனித்துக்கொண்டிருந்ததுமுண்டு.

இன்று,
ஓர் அறையும் இரண்டு பேரும் மட்டுந்தான் என்பதால்
உறுத்திக்கொண்டிருக்கின்றது.

உன் உள்வலியை இல்லையெக்காடவெண்ணும்
ஒவ்வொரு புன்னகைக்கும்
என் உள்வலி மெல்ல மெல்லப் படர்கிறது
மண்பிடித்த மரவேர் மயிர்த்துளையுருவாய்
துளைத்து நகர்தலென.

கணணியிலே அடிக்கும் கணம்கூடக் கடைக்கண்ணாற் கவனிக்கிறேன்,
பயத்தினைப் பொத்திக்கொள்கிறாய் படபடக்கமறந்த விழிகளூள்ளே;
மலர்த்த முயல்கிறாய் முகம் மெலிதேனும்
வழக்கப்படு மஞ்சளடிக்கட்டுமென்று;
புதைத்த சிரிப்பைப் பறித்தெடுக்கப் பல் வறுக,
பதட்டம் அடிக்கும் தம்பட்டம்.

கனத்த மனதுடன் உள்ளே துடித்துக்கேட்கிறேன்,
"வருத்துதோ உடல் அதிகம்?"

மறுக்கும் தொனியிலும்
மறைத்திருக்கும் பொறுக்கமுடியா
அகவருத்தம்.

சமைக்கமுயன்று தோற்கின்றேன்;
என் சலனத்தைக் கவனித்துக்கொள்கிறாய்.
சிரிக்கமுயன்று
தோற்பது நாம்.
எனக்காய்ச் எதற்கும் சிரிப்பவள் நீ என்பதை மறந்து
அலுத்ததோர் நகைச்சுவையை எடுத்துவிடுகின்றேன்.
அடுத்தகணம்
'அறுக்காதீர்' என்றடித்துச் சொல்லாமல்,
நீ வெடுக்கென்று சிரிப்பதால்,
சிரிக்கமுயன்று
தோற்பது நான்.

தொலைக்காட்சியைக்
கனத்தகுரலிற் கதைத்திரு என்றிருக்க வைக்கின்றேன்.
தனித்திங்கே நீயும் நானுமில்லை.
எனினும்,
வருமொருநாள் தனித்துப்போவேனென்று
விளக்கை அணைத்துத் தூங்கப் பயந்து
விழித்து விழித்து
இரவு வெளி வெளிச்சத்தில் உனைப் பார்க்கிறேன்.
அதட்டுகிறாய்,
பேசாமல் படுத்துத்தூங்குமென்று.
அதட்டல்கள் குறைத்த தொனியிற் பிறப்பதில்லை என
நான் அறிவேன்; அதை நீ அறிவாய்.

அதிகம் நான் சிரிப்பதாய் கூடப்படிப்பவர்கள் கூறுகிறார்.
என் எழுத்துக்களிற்கூட, எள்ளல்
தனித்துப்போய்த் தரித்துப்
பல்விரித்திருப்பதை நானறிவேன்.

முற்றெனச் செய்து முடிக்காப் போர்போல,
என்னோடும் உன்னோடும்
இத்தனைக்குள்
எத்தனையோ வடிவெடுத்தாடும்
காலம்.

முகமுள்ள எதையும் எதிர்த்துப்போனேன்;
நியாயம், உன் பேரில்.
இப்போது என்ன செய்ய?
எனக்கும் தெரியாது;
என்னைமட்டும் தெரிந்திருக்கும்
உனக்கும் தெரியாது.

இன்று,
ஓர் அறையும் இரண்டு பேரும் மட்டுந்தான் என்பதால்
உறுத்திக்கொண்டிருக்கின்றது.

'00 April Fool's Day.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter