அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

சக்கையைப் பிழிதல்

I

கரிக்குருவி இறக்கைகட்கும்
கவிக்குறிப்பெழுதும் கனவெமது.

******

II

பதியன்களின் முகங்களாக
விரல்களும் நகங்களும்......

"பல்வெட்டிப் போட்ட நகம்
வித்துடைத்து முளைக்கா"

பழுத்துச் சிவத்து வெடிக்கிறது
தேகமும் விவேகமும்.

தடுக்கி விழுந்தாலும்
சிலிர்க்கிறன இரு தேகம்.

போர்க்களமாகும்
உடல்மயிர்த்தளங்கள்.

******

கண்வீச்சுத்துடிப்பு,
கமுகம் இலைக்காற்று
இதயத்துடிப்பு.

நடை நடையாய்
வழி சிரித்து
உதிரும் தேங்காய்த்துரு;
காந்தம் சேர்த்தது கண்.

******

பூப்பிடுங்கல்;
புல் நன்னல்;
நாக்குநுனி கடித்தல்;
நீக்கமற்று நிறைதல்;
ஈரக்காற்று இறைத்திறைத்து காற்றுப்பை நிரப்பல்.
தூக்கத்தும் தொலைப்பட்டு தொட்டிழுத்து இமையடித்தல்;
கையுதறிக் கவலைத்தவலை வீச்சமாய்ப் போட்டுடைத்தல்.

தேக்கமுற்றுப் போயிருக்கலாம்
திகட்டினாலும் முற்காலம்.

******

III

அடைத்த பெருங்கட்டிடத்துள்
புறாக்குழும முகனல் மனம்.

ஏகாந்த மூடலுக்குள்
எச்சமிட்டு சச்சச்சென்று
எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றது
இறந்தகாலம்.

மூக்கடிக்கும்
முழு வீச்சம்.

******

பின்னால்,
போன ஊர்க்கல்லாய்,
கடந்தவை.

கண்ணுக்குப் பக்கத்தே
கனவின்னும் படலமிட
கை நாடி பற்றி
நீ;

எதிர்காலம்,
பக்கத்துப் புகையிரத
புரியாப் பயணி.

******

IV

நேற்றன்றோ நம்நிலத்தே பால்நிலவைப் பாகமிட்டு
பாதி நீ, மீதி நானென்று விழியூறத் தேங்க வைத்து
வெறிக்க வெறிக்க வெளி சிவக்கும்வரை தின்றோம்,
நாம்?

இன்று வேற்று நிலத்தினிலே வான்வீதி கூட்டுகின்றோம்;
இதுவரை சேர்த்துக்கொண்டதெல்லாம்
சிந்தனையிற் சில்லறையாம்.
சேமிப்பு,
தொடரும்;
செலவும்கூடத்தான்
சேர்ந்ததுவாய்ச் செல்வழி.

கோர்த்த கட்பார்வைகட்டுள்
தோற்றுத் தொலைந்ததெம்
நடைபாதை.

கூட்டுக்குள் அந்தரிப்பு.
கோணற்குச்சுகளுட் சிறகிருப்பு.
சிக்கிக்கொண்ட அலகுட்
தொங்கும் செத்த வட்டப்புழு.

******

V

கவிக்குறிப்பு இடையினிலும்
சிறு கரிக்குருவி நனை உணர்வு.

******

'00/04/28

0பின்னூடுகை:

Post a Comment

<< Home