அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

பேசிய சிறகுள்ளும்...

பேசிய சிறகுள்ளும்
பிறழ்ந்ததென் பெருநரம்பு.

தூக்கத்தைத் தூர எறிந்துவிட்டுத்
துழாவிக்கொண்டிருக்கின்றேன்,
பொய்மை வெளியை.

முட்டுவார்கள், மோதுவார்கள்,
அத்தனை பேர் அடையாளங்களுக்கப்பாலும்
அவர்கள் அப்பா அம்மாக்களை
அடிக்கடி எண்ணிக் கொள்கின்றது
மனம்.

எனக்கு இறப்பு எண்ணிக்கையும்
எம திருப்பு இடமுமே பிரதானம்;
எத்தனை பேர்களுக்கு அத்தனைக்கும்மேல்,
கூடப் படுத்த புருஷர்களும்
கூடிப் பெற்ற புத்திரர்களும்?

என்றாலும்,
எதிரிகளை, எம்மவரை,
இறந்தவரை, இருப்பவரை,
என்றோ இருந்த என் இடத்தை,
இங்கிருந்து எண்ணும்போதும்,
இவர்கள் நடக்கக்கூடாதா,
அவர்கள் கிடக்கக்கூடாதா
என்று மட்டும்தான் இருத்தி
எண்ணத் தோன்றுகின்றது,
எனக்கு.

படுக்கப்போக மட்டும்
என் இடம் மறைகிறது;
பற்றி வலிக்கிறது
என் உள் இடம்.

எவரெவரோ பெற்றார்கள்,
இவர் முயங்கிப் பிறந்தார்கள்,
வெட்டவெளியில் விரிகை மண்தூற்றி
சுடுசொல் சுற்றி விதைத்தெறிந்து,
என்னைச் சபித்தல் தெரிகின்றது,
என் அறை இருள் வெளியில்.

எத்தனைபேர் இறப்பது,
என் இடத்துக்காக?
எண்ணிக்கைக்கணக்குக்காக?
எனக்குத் தெரியவில்லை.
பிதாமகன் இறுதிக்கிடக்கை,
என் மெத்தைப்படுக்கை.

காலை எழுந்தாலோ,
என் கணக்கு நின்றால் மட்டும்
கௌவாது போவானோ கருங்காலன்
என்ற நினைப்பு தொனிகிறது
நெஞ்சு உட்தோற்றத்துள்.

காலை நினைப்புக்கும்
தூக்கக் கணிப்புக்குமிடையே
விசைப்படு விரல்குத்து
காலக் காற்பந்து
என் மனது.

பாசி பூசிய சுவர்க்குள்ளும்
புழுங்கிப் பேசும் நிழற்பிறவி.

'00/05/08 23:11 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter