அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஒரு சோடிப் போர்வைமூடிகள்

நீயும் நானும்
போர்வை மூடிகள்.

காணும் நீயும் நீயல்ல;
கனலும் நானும் நானல்ல.

நானும் அறிவேன் நீ ஊரும் கழி;
நீயும் அறிவாய் என் ஊரின் வழி.

வாழ்தலுக்கும் மாள்தலுக்குமிடை
மறைதலுக்காய்ப் புலன் கொண்ட
போர்வைமூடிகள்
எமது புதினங்களின் புற்றுமூலம்.

கொண்டதுக்கும் கொன்றதுக்குமிடையே
கொழுவித் தொங்கும் திரிசங்கு நிலம் எமது.

வலிய வலிய வரிந்து கொட்டும்
பாஞ்சாலி பட்டுத்துகில்
புழுக்கும் போர்வைகள்:-
புத்திசாலியாய்ப் புதினித்துக்கொண்டவை;
பொல்லாதவனாய் பொதித்துக்கொண்டவை;
வல்லானாயும் வாலுள்ளானாயும் எல்லாவேளையும்
எடுத்துக் கொட்டிக்கொண்டவை
மேல்முதுகிலும் முன்முகத்திலும்.

போர்வை மூடிக்கொண்டே போராடிக்கொண்டவர் நாம்.
பூனைகட்குப் புலிகளாய்
புலிகளுக்கு வேடராய்
பூசாரிக்குப் புலையராய்
புலையருக்கு வலையராய்
வலையருக்குக் கலயராய்
போலிகட்குப் பொய்யாய்
வேலிகட்குக் கொடிகாலியாய்
பொருந்தார்க்குப் புரியாராய்
திட்டமிட்டுத் தாளம் தப்பிதராய்
போர்வை மூடி பொறி பொத்திக்கொண்டு
பொல்லாராய் வீதிவழியெல்லாம்
சுருள்வாள்வீசிப் போராட்டம்.

நீயும் அறியாதானல்ல என
நானும் அறியாதானல்ல என
நீயும் அறியாதானல்ல என்றானபோதில்,
நீயும் நானும்
ஒருமுறை கையுதறி
ஒட்ட உடம்பிற்போட்ட
ஒரு சோடிப்
போர்வை மூடிகள்.

*********

தீக்கங்குமுனை எழுத்தாணி,
தாளுருக்கித் தடம் பதித்த
சொல்லுழவும் நெல்விதைப்பும்.

வெற்றுக்குடமிருந்து கற்பிதக்காசுகளை
வெளிவிரித்து விதையெனவே வீசும் கை,
எனதும் உனதும்.

எனது விதையுள்ளும் களை விளையும்;
உனது களையுள்ளும் விதை முளையும்.
களைகளையும் விதைகளையும்
தளை பிரித்தறியும் நம் கண்.
என்றாலும்,
-என்னது விதையென்றும்,
உன்னது களையென்றும்-
எம்மாலானது
பொய் விளையும் பூந்தோட்டம்.

காவற்காரர் நாம் வனக் கதவுகளை மூடிக்கொண்டோம்;
எம் கையெடுத்துக் கொடுத்தததையே
அருங் கனிகளென்று புசிக்கச் சொன்னோம்.

மௌனத்தை சம்மதமாய் மாற்றிக் கொண்டோம்;
முரண் நிற்க முழுப் பூட்டுத் தூக்கிக் கொண்டோம்.
கல்லறையைக் கடவுட்சிலை ஆக்கித் தந்தோம்;
களங்கத்தைப் பளிங்கென்று போற்ற(றி)ச்சொன்னோம்.

என்றாலும்,
-உன் விதையும் என் களையும்
என் விதையும் உன் களையும்-
ஒவ்வொன்றையும் தூற்றிக்கொண்டோம்;
ஒவ்வா ஊமைகளாயும் காட்டித் தந்தோம்.

கங்குமுனைக் கருவிதன் கெண்டைமுள்ளழுத்தி
மெல்லத் துளைத்து மண் நகரும்;
இல்லாப் பொய்கள், இலை சடைத்து மரம் விளையும்.
இருந்த இருப்புகள், இற்றுப் போய் மண் விளையும்.

ஒரு நல்லவனை வெள்ளிக்காசுக்குக் காட்டிக்கொடுத்தோமா,
உள்ளிக்கார வெள்ளைப் பொய்களையே விதைக்கின்றோம் என்றாலும்,
முளைத்த பொய்கள் மூக்கு வளர்கையில்,
வெள்ளிக்காசுக்களை விழுத்தி,
விசுவாசத்தை வாங்கித் தின்றன.

எம் தோற்றத்தை நாமென்றோம்;
எம் மாற்றத்தை நேரென்றோம்;
புண்ணாக்கிப் போட்டிருந்த சட்டையைப் புதிதென்றோம்;
சாட்டையைச் சொடுக்கிவிட்டுச் சமாதானமென்றோம்.
வீட்டுக்குள்ளிருந்தே வேற்றாளாகிப் போனோம் நாம்.

நேற்றும் நாளையும் நேரெதிராய் நின்றாலும்,
நம்மவர்க்கு, நல்லவர்க்கு, மன்னவர்க்கு, மனிதருக்கு,
நான்கு நீளப்பொய்யைச் சூடாக்கி, நேராக்கி
நீட்டி விற்பதில், நிலத்தில் விதைப்பதில்
நானும் நீயும் நேயமிகு கூட்டாளிகள்.
நம் தேக நிழலும் நம் நிலத்தே தமைப் பிரியா.

வாங்கிப் போனவர்கள், வாய்ச்சண்டையிட்டுக்
கொண்டார்கள்;
கொன்றார்கள்.

'00/05/22

0பின்னூடுகை:

Post a Comment

<< Home