அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

உருவிலி

அனுமானிப்பதை அப்படியே அறுத்துவிட்டால்
அரைப்பங்கு ஆகிவரும் என்று படுகின்றது;
பட்டாம்பூச்சிகள் பற்றிப் பாடல் எழுதுவதைப்
பத்தியச்சோற்றைப் போல் படிப்படியாய் நிறுத்திவிடலாம்;
ஆனால்,
அந்தரத்தில் அப்படியே இன்றைய இரவோடு,
அனுமானிப்பதை முற்றாய் அறுத்தாற்றான்,
அரைப்பங்கு தானாய்ச் சரியாகும் என்று படுகின்றது.

பாதிப்பேருக்குத் தானாய்ப் புரிகிறது;
மீதிப்பேருக்கு பாடமோ படிவதில்லை.....
நிகழ்வான திதுவானால்,
யாருக்குக் கம்பசூத்திரம்?
யாருக்குக் குறியுடைத்து,
அதற்கொரு விரிபாஷ்யம்?

இலக்கு இதுவென் றானபோதில்,
இடதால் இலகுவாக இங்கே வரமுடிகிறது;
சுழன்று வலதாலும் வளைந்து வந்து,
இடதின் வலதுகையை இறுக்கக் குலுக்கமுடிகிறது.
இலக்குக்கு இல்லை,
இடதும் வலதும்.
எம்மவர் என்பது மட்டுமே இருப்பு.

அசந்த வேளையில்,
"Profit over People:
neoliberalism and global order"
உரைத்தார் நோம் ஸோம்ஸ்கி.

அரண்டுபோய்,
சுரண்டி,
உரித்துப்பார்த்தேன் அவர் தோலை;
ஆதிசங்கரர் அரைச்சப்பணத்தில்
அலங்கமலங்க விழித்துக்கிடந்தார்.

உருவம் உரிக்க உரிக்க,
உடலிலி ஒரு வெங்காயம் மட்டும்தான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home