அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

தணிக்கை

தென்லெபனான் மக்களைப்பற்றி,
பாடவுண்டு சேதி நிறைய எனக்கு.

தணிக்கைக்குத் தப்புமா,
என் தலையென்று மட்டுந்தான்
தவித்துக்கிடக்கின்றேன்.

ஓரொற்றை லெபனான் சுண்டெலியைக் கண்டதில்லை நான்.
அந்நிலத்துப் பெட்டைக்கோழிகளின் கொத்தும் திறன் மூக்கைக்கூட,
என் வீட்டுத் தொலைக்காட்சிப்பெட்டி உடைத்துக் காட்டியதில்லை.
என்றாலும்,
அவர்களைப் பாட என்னிடம் எத்தனையோ உண்டு செய்தி
என்று நிச்சயமாய் நம்புகின்றேன்.
தணிக்கைக்குத் தப்புமா, தலைப்பில்லாவிட்டாலும் என்கவி
என்றும்கூடத்தான் தடக்கிறது கவிநடையிடை கல்லாலும் பேரரசும்.

வெற்றுத்தாளாய் மட்டும் வெளியாகும் மக்கள்பத்திரிகை சிறுகட்டம்
மடம்தந்தால்,
வரள்பிரதேச கஜுமுந்திரி விதைப்பெருக்க விவசாயத்துக்கும்
விதைகீழிறக்கம்தணிக்கச்சொல் விஞ்ஞான விஞ்ஞாபனத்துக்கும்
இடைப்பட்ட தரிப்பிடத்தில், நிரப்பிடத்தில்,
என்னாலானது கொஞ்சம், இஸ்ரேல் படைகளின்,
இருப்பின் எல்லையையும் இருந்தாகவேண்டு இறைமையையும்
சுருக்கமாய்ச் சொல்லவும் உசிதப்படுகிறது எனது மனம்.
எல்லாமே,
என்னிடத்தில், என் இடத்தில்,
தணிக்கைக்கு, தனிக்கைக்கு,
தப்புமா என் தமிழும் தகவலும் என்பதைப் பொறுத்தது.
.
தென் லெபனானிலே,
பெற்றோல் குண்டு கக்கிய கிபீர் விமானங்களை,
பேய்வாய்ப் பீரங்கிகளை, பெருத்த பிருஷ்ட கவசவாகனங்களை,
வல்லசுரவான்குண்டுகளை, கள்ளமாய்ப் புகுந்த கால்நடைவீரரை,
மெல்லமெல்ல தள்ளித் தின்ற வல்ல மக்களை, வாழ் மனிதர்களை
அள்ளிச் சொல்லி ஆக்கிக்கவி எழுத,
உள்ளும் களி உடைத்தது எந்த னுளம்.
என்றாலும், எல்லாமே,
காளவாய் உட்கொட்டி, கணத்திற் கனம் சமித்து,
தள்ளிக்கழித்துத் தனி வெள்ளைக்காகிதமாய்
அள்ளி வெளித்தள்ளுமோ அரசாலையென்று,
தனித்துக் கிடந்து தவிக்கின்றேன்,
தணிக்கையெண்ணி,
மூடுகவிப்பனி தணித்து
நான்.

'00/05/24

0பின்னூடுகை:

Post a Comment

<< Home