அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

அடையாளம்

'யார் நீ?' என்றார்கள்
அடையாளஅட்டை
விண்ணப்பத்தில்.
'மனிதன்' என்று மகத்தான ஒரு சொல் போட்டேன்.
மறுத்தழித்து,
'தமிழன்' என்று தாமாகப் போட்டுக்கொண்டார்கள்.

அமைதியாக ஆட்சேபித்தேன் அதை.
ஆள்கூட்டி அடித்தார்கள்;
ஆட்காட்டிவிரலைச் சுட்டுவிரலோடும்
சேர்த்து அறுத்தார்கள்,
சட்டம்போட்ட வெள்ளி வில்வாளால்.
மறுபடியும் உறைக்க உரத்துச் சொன்னார்கள்;
பின், என்னையும் உரைக்கச் சொன்னார்கள்.
"நீ தமிழன்."

"நான் மனிதன்"

'நீ தமிழன்'
என்னைச் சொன்னவனைக் கை குறித்துச் சுட்டுப்போட்டேன்;

தன் பக்கத்துச் சுற்றத்தாருக்குச் சுட்டிக் கத்தினார்கள்,
"மாபாவி! ஒரு மனிதன் செய்யும் காரியமா இது?"

"சொன்னேனா?
'இல்லையே தம்பி,
ஒரு தமிழன் செய்யும் காரியம் இது"

0பின்னூடுகை:

Post a Comment

<< Home