அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

சொல்க நான் யார் இந்நாட்டில்?*

கூரையைக் கூவித் தீயாய்க் கரிக்க,
நீ யார் என்று உனைக் கேட்க,
சொல்க காற்றே,
நான் யார் இந்நாட்டில்?

வேரை உருக்க, விழி பறிக்க,
ஆடை கிழிக்க, அவம் முளைக்க,
சேற்றை விசிறி சீற்றத்தே சில்லுருட்டி,
சிதையெனப் போட்டுப் போனது
செந்தணல் எம் உயிரினில்.
அதன் செய்கைச் சேவகன் நீ,
சொல்க சுழிக்காற்றே,
சுமை யுடைத் தொரு சொல்....
வல்லபூதங்கள் வாய்விரித்த விந்நாட்டே
என்னுடைய இடம் ஏதென்று எனக்கு.

கல்லையும் காய்ச்சினாய்,
கவிதம் கைகட்கும் கட்டுவலை வீசினாய்,
சொல்லிலும் சொட்டுவிஷம் பாய்ச்சினாய்,
சுழித்தாய் முனை, சுழன்றடித்தாய் பனைவெளி.
கழித்தது தேகம், களைத்தது ஆத்மம்
கிளர்த்தது கலி கூற்று கூற்றென்று குரல் கூவி.
தென்திசைத்தேவன், எந்தையின் தரைவந்திறங்கி
அடுத்து நின்றாடினான்அவநிருத்தம்,
நிறுத்தாமல் நித்தமும், இப்பக்கமும் அப்பக்கமும்;
ஆசை அடங்காது அகலக் கைவிரித் தெப்பக்கமும்
எம் முன்றிலில், முகத்தில், முதுகில், முழுநிலப்பரப்பில்.
அந்தோ! உடைந்த துள்ளுறுதி; ஊதப் பறந்த தொட்டு வுயிர்ச்சொட்டு;
கூடி நின்று கொல்கூற்றுவன் கூத்துக்கு ஊதினாய் நீ வெண்சங்கமென்றால்,
கூறுக ஊழிக்கொள்ளிவாய்கொள்பிசாசே, ஆள் மேனி உன் காலூன்றி,
ஆழ நீ உழ வூறிப்பரவு ஊழ்நிலத்தே,
ஆரானேன் நான்? எதுவானது எனது உயிர்?

சாறு சுவறிச் சரிந்தது சடைத்த நீதி;
கூறிப் பிளந்து குதி பூத்தது குத்தாணி;
ஆணிவேரறுந்ததால் வேறு முளைத்தது வித்து;
வினை செழிக்க முலைப்பால் குடித்தது முள்முனையில்;
ஓடி ஒளிவாய்; உதிர்வாய்; உடல் உதறுவாய்;
மூடுபோர்வையிலே மூச்சிரைப்போனே,
முற்கேடு ஒழிவாயே, ஓடு! ஓடு!
ஓடிப்போய் உள்ள பாழ்நிலமெல்லாந் தேடித்தேடி
உனைச் சேர்ந்தாரையும் கேட்டுச் சொல்லிரு வார்த்தை,
நாறு பூ மேனி நீ நசித்த பூமியிலே,
நான் யார்? எனைச் சிதைக்க நீ யார்?



போது முன் போலி மௌனம்;
புத்தி புரிந்திரா மௌடீக னல்லன் யான்.
நாட்டில் நானோ, நடப்பில் யாருமில்லை,
நிழல் யாருமற்றோ ருரு எனதேதான்
என்றானதொரு பொழுதிதென் றானதினால்,
எழுந்து கூவி,
எனக்காய் நானே
உனைக் கேட்பேன்,
வேகு வன்னாகுதியே,
தீயாய்ப் பரவி எமை எரிக்க,
யார் இங்கே நீ?
ஓடாதே, ஒளியாதே;
உண்மைவீரனா யருபோது,
நின்று சொல் நீசத் தென்காற்றே,
நீ யார் நெடுநெருப்புக்கு?
நாம் யார் உமதிருப்புக்கு?



//\/\/\/\/\/\/\/\/\* "சொல்க நான் யார் இந்நாட்டில்?"
-கவிஞர் ஜெயபாலனின் '83ம் ஆண்டுக் கவிதை ஒன்றின் வரி


'00/05/26

0பின்னூடுகை:

Post a Comment

<< Home