அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

புரிந்துகொள்தலைப் பற்றிய இரு எழுத்துப்புரிதல்கள்

To Henry Foust
-------------------

அவன் சீனன்;
நீ கேஜன்
(என்றுதான் என்றும் நீ சொல்லிக்கொள்கிறாய்);
நான்....,
யாரென்று எனக்கே சொல்லத்தெரியாத
தருணமும் தகைமையும்.

வீதியின் கீழிறங்கிப் போனோம்,
பாலத்துநீரருகே, நடைபாதை நீட்டுக்கும்,
கைபிடியில் முழங்கை தட்டத்தட்ட.

நேரம் மாலை நான்கு;
ஓ' ப்ராயன் கபே, சிக்காக்கோ நகர்மையம்.
அவன்,
"டிராப்ட்" என்றான்;
உனக்கு, 'பட்வைஸர்',
எனக்கு, பெருந்தோடை
என்றானது பானவகை.

பேசப் பேச,
பொதுவிலில்லாத பொருட்களையெல்லாம்
தேசத்தை, நேசத்தைப் பார்த்துப் பார்த்துப்
பங்கிட்டுப் பேசினோம்; வறுத்தோம்;
பகுத்தோம்; வகை பிரித்தோம்.
பரிசாரகப்பெண்ணின் பிருஷ்டத்தின்
பெருப்பத்தை, மார்புவளப்பத்தை,
நாம் ஆண்கள் என்ற விறைத்த இருப்பை விட்டு,
மிகுதி அனைத்திலும் ஏதேதோ சரம்தொடுத்து
நரம்பு புடைத்து முரண்பட்டுக்கொண்டோம்;
கொம்பு முட்டிக்கொண்டோம்.

உனக்கு நான், மாதப்பழக்கம்,
எமக்கு அவன் அரைமணிநேரமாக்கும்.

முரண்பட முரண்பட, முடிவில்லாமற் பேசமுடிந்தது பெருங்கதை.
கணிதத்தையும் கவிதையையும் கழித்துவிட்டு
அனைத்தையும் பேசினோம்; அகப்படாததொன்றுமில்லை,
அமர்ந்திருந்த ஆற்றுப்புறமொன்றைத் தவிர.
ஆற்றில் நடந்தது அகலக்குடைந்த படகும் ப்ளூஸ் பாடலும்;
பக்கத்திலே சிறுத்த பெண்ணும் பருத்த ஆணும் பேசாமலே
தம்மை இருத்தி உறைக்கத் தின்று போக,
உரசிக் கொண்டு இருந்ததாக்கும் ஒரு சோடி.
யார் அறிவார்?
அதை அறியாமலே பேசிக் கொண்டே போனோமாக்கும்,
பல பல தடங்களில், தடங்கலின்றி நிழல்நெடும்பயணமாய்,
நிலைக்காத் திக்கு நகர்த்தி நினைவெல்லாம்.
பொருள் புரியாத இருளிலும் அறியாத பொருட்களை
அந்நியோனியமாக அறிந்தவர்கள் போல்,
பற்றிப் பேசிக்கொண்டோம் பானத்தூடே உள்ளேற்றி.

இருள்தின்னு ஏழு மணிக்கு,
அவன் தன் வீட்டுமாடிக்கு,
நீ டென்வர், கொலராடோவுக்கு,
நான் என் நகர்ப்புகையிரதத்திற்கு....

"மீதியை,
நிறங்களின் நிர்ணயத்தையும்
பேதமையையும் பிரிக்கையையும்
பின்பொருநாள் பேசிக்கொள்வோம்;
கூடவே,
எம் கணிதத்தையும் கவிதையையும்"
-என்கின்றாய்.

இத்துணை கருத்து முரணும்
இறுகப்பற்று பொருள்முறிவும்
முற்றற்றுப் போயிருந்தால்,
ஒத்தியைந்து எம்மிடையே
பொழுதாரப் பொருள் புரிந்து
பேசக்கிடைத்திருக்குமோ,
ஒத்தோடப் பானகம்?

~~~~~~~~~~~~~~~~~~~

0பின்னூடுகை:

Post a Comment

<< Home