அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

கவிதைத்தொகுதி

அருகருகே கிடந்தன;
இரண்டுமே கவித்தொகுதி;
ஒரே பதிப்பகம், அச்சகம்.
ஒத்த அச்சு, உடலும் முகமும்.

முத்தான முகவுரைகள்;

"படித்த நகர்ப்பெண்களின்
பார்வையில், செய்கையில்
இக்கவிகளூடே
உடைத்தெறியப்பட்டது,
சிக்குண்ட உலகம்"
- என்றது ஒன்று.

"கள்ளமறு கிராமப்பெண்களின்
கதைகளில், கனவுகளில்
இக்கவிகளூடே
சிக்கவைக்கப்படுகிறது
சாதாரண உலகம்"
- இதுவாம் மற்றது.

வரிகளில் வழுக்கி,
வசனமுடிவினிற் பார்த்தேன்;
முகவுரை இரண்டுக்கும்
முக்கிய மூல முனைவர்
ஒருவரே.


இப்போது எனக்கு,
பக்கத்துவீட்டுப் பெண்களின்
பாடற்தொகுதி மட்டும்
ஒன்றாவது
படித்தாக வேண்டும்.

மிக்க முக்கியம்,
முகவுரை முனைவர்த்தனம்
மூக்கு முத்தாய்ப்பு
முகம் காட்டக்கூடாது.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home