அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

புரிந்துகொள்தலைப் பற்றிய இரு எழுத்துப்புரிதல்கள் I I

ஒரு குறுக்குவாகனவோட்டியின் நினைவாய்..

கிளைபோன் நாற்சந்து;
நடையிற் குறுக்கிட்ட என்னை,
"முதற்கடந்து போ" என்கிறாய்;
நீ காத்திருக்கக்கூடும் என்பதாய்
உன் கைசைவு.
"எனக்கு அவகாசமுண்டு காலக்கோட்டில்,
நீ நகர் இந்நேரத்தே" என்கிறேன் நான்
என் கண்ணசைப்பில்.

நாளைக்கோ,
இனிவரு காலைக்கோ,
எம் ஆயுளிலே
நாம் மீண்டும் கூடிக்கொள்ளப்போவதில்லை,
கால, இடத் தளங்கள்தம் கோடுகளில்
என்றாகக்கூடிய இல்லாநிலைதான்,
இருப்பும் நடப்பும்;
என்றாலும்,
உனக்கு நானும்,
எனக்கு நீயும்
பேசாப்பொருளிலே
கணத்திலே மனிதத்தை,
பரஸ்பர புனிதத்தை
உணர்த்திக்கொள்கின்றோம்.
அக்கணத்தையும் கடத்திவிட்டுக்
கலைந்துபோகிறோம்,
கிழக்கும் மேற்கும்.

கடந்துபோன நான்,
நன்கறிந்த மனைவியுடன்
சிறு பொருள்பற்றி,
'எனது' என்பதை முன்நிறுத்தி
சொல்லிற் பொருதுகின்றதாயானது,
அன்றையப் பொழுது.

பின்பு,
நீகூட என்ன பொருதினாயா,
உன்னவளோடு, இல்லை,
உன்னைச் சேர்ந்தவ ரெவராவதோடு,
என்முன்னே துள்ளிக் கணம் துளிர்த்த
மனிதப்புல்லி னிதழ்நுனி,
கல் நசுக்கிமூடி?

'00, ஜூன் 04.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter