அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

எந்தவோர் இடத்தைப் பற்றியும்.....

எந்தவோர் இடத்தைப் பற்றியும்
நித்திய சத்தியமென்று
எமக்குச் சொல்லப்படுகின்றது,
கரிக்கோலிழுத்துச் சரித்திரம்.

புத்தன் பிறந்த புனிதபூமியிது;
போதிக்கிளை சடைந்ததால்
பொலிவுற்ற மண்ணிது;
லிங்கனின் தேசமிது;
'ரா'க்களின் சுவாசமிங்கே......

எல்லா மண்ணுக்கும்,
அதைச்சூழ்ந்த விண்ணுக்கும்,
விண்ணின் கண்கரை கடலுக்கும்
ஏதோ ஒரு சரித்திரம்
எவராலோ, என்றோ
எழுதப்பட்டிறக்க
இருந்திழிந்து சுமை
ஏற்றுக் கொண்டோம்
நாம்.

~~~~

புத்தன் பிறக்கமுன்னர்
இதுவென்ன பாழ்பூமியா?
போதி தழைக்கமுன்னர்,
புழுவூர்ந்த மண்ணிதா?
லிங்கனின் முன்னே,
நிலமென்ன வெறும் கல்லா?
'ரா'க்கள் ஆக்கமுன்னே,
யார் விட்டார் எவர் மூச்சு?

போனவற்றோடு, புரியாதவற்றோடு
புனிதத்தைப் பொருத்திக் கொண்டோம்.
புழுக்கத்திலே, இருப்பதை,
புழுப்படச் சபிக்கிறோம்;
எம் இயலாமையாய் மனிதவியல்பை
வெறுக்கக் கற்றுக்கொண்டோம்.

~~~~

வற்றிய புத்தியைச் வாரிச்சுரண்ட,
புத்தன் பிறந்தததனாற்றான்,
இந்தப் பூமியின் புனிதம்,
பொய்யாய், போலிப்பெருங்கதையாய்
ஐயோவெனப் போனது என்று படுகின்றது;
கூடவே,
போதி முளைக்காதவிடத்து,
இன்றையப் புதுப்பொலிவும்தான்.

'00 ஜூன் 04

0பின்னூடுகை:

Post a Comment

<< Home