அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

'கவிதைகளைத் துண்டாக்கிப் போடுங்கள்'

கவிதைகளைத் துண்டாக்கிப் போடுங்கள்;
அறிக்கைகளை மட்டும் அவிழ்த்துவிடுங்கள்.

ராமராஜ்யத்து மேய்ப்போர்களே,
வாலிவதத்துக்கு மட்டுமே வந்துபோவீர்.

சுக்கிரீவர்கள் தாரையுடன் சுகித்துக்கிடக்கட்டும்
வாலி வதத்துக்கு முன்னும் பின்னும்.

இரகுவம்ச ராமர் நீரோ,
நீர் உம்மால் நேர்நிக்கவொக்கா வாலி வதத்துக்கு
வனத்துள்ளே கணை பற்றி மறைந்திருப்பீர்.

வழுச் சாட்சிக்கு இணைப்புறா வேட்டுவ வால்மீகி;
சடைதலுக்கு சடையப்பவள்ளல் கை பார்த்து தமிழ்க்கம்பன்.

நீரோ ரோம் பற்றி எரிகையிலே
இசைத்தானோ பிடில், ராமா?
அறியோம் யாம்.
நீரோ யாழ் பற்றி முறிகையிலே
கெடுந்தாள் பற்றிப் போற்றுகிறீர்.
அறிவோம் தாம்.

ராமராஜ்யத்தின் மனிதநேயம்,
யாழ்ப் பாண மக்களுக்குக்கில்லை;
கைபற்றி எய்யும் பாணபாணிகட்கு.
கூனிகட்கு மட்டுமே கொடுப்பினை.

ராம கவிதைகளை தேவநாகரீகமாய்க் கிழித்துப்போடுக பிதாமகரே;
குறளோவியத்தை கூகைகட்டு ஓதிக்காட்டுக, தமிழ்மகரே.

அசோகசக்கரம் அச்சாணி குத்தி
முறிந்து தொட்டது நிலம்.
தர்மபுத்திரனும் சொன்னான்,
'அசுவத்தாமன் இறந்தான்' என்று.

சத்தியம் மட்டுமே ஜயதே!
செத்துமடிக மிச்சத்தமிழரெல்லாம்.

ஏசி இட்ட தீ எடுத்தெறிந்து பற்றட்டும்
சட்டென உம் உச்சக்கூரையிலும் ஓங்கியெழுந்து.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home