அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஆக்காண்டி ஆக்காண்டி

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைச்சாய்?*

ஆறு போன இடமெல்லாம்
புற் படுக்கை முட்டை வைச்சேன்.

முட்டையெல்லாம் குஞ்சானா,
முழு வுலகும் குருவிச்சத்தம்.

குருவிச்சத்தம் கேக்கத்தானே
குழி பறிச்சு முட்டை வைச்சேன்.

சத்தம் மட்டும் போட்டு விட்டா,
உன் பிறப்பு முற்றா குமா?

சத்தம் போடத் தெரியா விட்டால்
பின்னே என்ன கருங் குருகு?

கூட்டை வேடன் கலைக்குறானா?
குருவி பிடிச்சுத் தின்னுறானா?

ஐயோ ஐயோ என்ன செய்வேன்!!
ஆகாதய்யா இவ் வேடர் கூட்டம்!!

வாயைக் கொஞ்சம் பொத்திக்கொண்டு
பாழ் வயிற்றைக் குருவி பார்க்கலாமே?

ஓஹோ! நீரும் (கொல்) வேடர்தாமோ?
எம் அலறல் கேட்டும் தின்போர்தாமோ?

ஐயோ குருவி! (முழுப்)பொய்யோ சொல்வாய்?
வையம் காணும் மெய்யை அறிவாய்.

இல்லை இல்லை! கொல் வேடர் நீரே.
என் குஞ்சு இரண்டு கொன்றோன் நீயே.

கொஞ்ச வந்தேன்; கொல்வோன் என்றாய்
கொல்நஞ்சும் நல்நெஞ்சும் கிஞ்சித்து மறியாய்.

நீயே வேடன்! உன் நினைவோ கொலை.
நாயே போடா! நரி நினைவோனே!

ஓஹோ அறிவேன் உன் குலத்தழிவு
ஓரோர் நினைவும் உலகொவ்வா நிலையுலவு.

போ போ மூடா! உயிர்கொல் வேடா!
குருகும் புள்ளுமே உலகினி லுயர்வு
புவியே சுழல்வது புட்கட்குத் தாமே!
துயர்பட்டாலும் குருகே உயர்ந்தோன்.

முறையோ குருவி முறைதலை மறத்தல்
அருகும் குருகும் அர்த்தமில் கருத்தில்
பெருகிட வேண்டில் (வாழ்) வழிதனிற் கூர்க்க.
வரும் வளமும் பலமும் குருவிகள் வசமே.
உட்பொருள்தனை உணர்க; வெறும்புலம்பலை ஒழிக்க.
வருவேன்குருவி, வணக்கமும் வாழ்த்தும்.


*ஒரு ஈழத்துநாட்டுப்பாடலினதும் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதையினதும் தொடக்கவரிகள்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home