அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

இறைமையைப் பேணல்

உந்தன் இல்லாளை உள்வீட்டில் உதைத்திரு;
உன் வீட்டுப் பூங்காவை தீ வைத்துக் கொளுத்து.

அயலான் மகன் உன் மகளைக் கூடுமுன்,
அவன் மனையாளை இன்றே அவசரத்திற் அழுத்திப் புணர்.

முன்வீட்டான் கண்ணாடிக்கும் சிதறப் பெருங்கல்லெறி
வருங்காலம், அவன் பேரன் உதைபந்தடிக்கலாம் உன்வீட்டில்
என்றெடுத்துரை எல்லோர்க்கு மொரு காரணம்.

சட்டைப்பைச் சலவைக்குறிப்புக் கடதாசியில்
சக்கரவட்டம் கீறி, சத்தியமே வெல்லுமென் றோதி
சாதி பேதமின்றி சகலருக்கும் விநியோகி;
சரித்திரம் படைக்காத சாமான்யருக்கும் உபதேசி.

ஒரு மகாத்மா முழத்துண்டுபின் மறைந்துகொள்;
வன மரங்களின் பின்னிருந்து மாவீரரிற் சரம் தொடு;
அத்தினாபுரியிலே காய்வீசச் சொக்கட்டான் கற்றுக்கொடு;
கடந்தகாலத்திற் கஞ்சிகாய்ச்சி, வரண்ட கலயத்திற் பங்கிட்டுப் பருகு.

இந்தத்தேசத்தில் பொன்னுருக்கி, புழுக்கைவடிவு ஆண்குறி பொருத்திக்
கொண்டவன் நீ மட்டும்தான் என்று விண்ணப்பித்துப் பிடித்துக்கொள்
எண்ணத்திற் சின்முத்திரை.

உன் பெண்டாட்டியை குறி பார்த்துதைத்தல்,
பிறன்வீட்டுப் பெண்டுகளை மறம்விளைந்து படுத்தல்,
முன் மனைக் கண்ணாடிகளை உடைத்தல்,
காலில்லாக்கதைகளைக் காற்றுவெளியிற் பரப்பல்
- இயலாமையில் எண்ணிக்கொள்,
இவை எல்லாமே ஏதோவிதத்திலாகும்
உன் இல்லாத இறைமையைப் இறுக்கிமூடிப் பேணிக் கொள்ளலென.

சப்பாணிகள் தேசத்தில்,
உறுக்கிச் சத்தமிட்டவனே
ஒப்பில்லா வீரன்,
உந்தன் உள் உலகுக்கு.
இரைத்திறைத்து உரைத்துக்கொள்,
உன்னையும் அவ் வொருவனென,
இன்றைக்கும் உள்ளது உனக்கு,
ஒரு சுட்டுவிரலாட்டு சொந்த இறைமையென.

தொங்கும் தங்க ஆண்குறி
என்றும் விறைக்காது.
ஆனால்,
சுண்டெலிவால் சொந்த இறைமை
சொக்கித்து வாழ்ந்தது போ!

'00/05/18

0பின்னூடுகை:

Post a Comment

<< Home