அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஒரு பொருத்து முனைப்பற்ற காட்டுப்பாடல்

ஒரு பொருத்து முனைப்பற்ற காட்டுப்பாடலைக் கூற அனுமதி
யாசிக்கின்றேன்;
அது எனது தின வாழ்க்கைப்பாடல் அல்ல; என் தேசத்துயர்தன்
தனிச்சொடுக்குமல்ல.
ஆனாலும், இங்கே ஒரு துயர் முரட்டுக் காட்டுப்பாடலைக் கூற அனுமதி
யாசிக்கின்றேன்.


~~~~~

ஒரு தேசத்தே,

தூக்கமாத்திரைக்குட் தேய்ந்தவளின்
பேபி பியானோக் கட்டைகளுட்
தூங்கிப் பொதிந்திருந்தது,
துவண்ட உணர்வு.
அது மூசு தூசுக்காற்றின் விலை,
பரவுஞ் சிதறல்,
மின்னும் கோடி.

~~~~~

மறு தேசத்தொன்றின் நாசி நுனியில்,
கொடுங் கூற்று தூக்கம் கெட்டு எழும்;
பேய்க்கூத்து நாட்டியம் நிகழ்த்தும்;
காற்று வீசும் கச்சிதமாய் அரிவாள்;
கடல் தேய்க்கும் கால் வீட்டுப் பின்புறத்தில்;
கூரை தொலையும்; கூடியே
குறைந்து போகும் உயிர்த்தொகையும்;
பிணி தொடரும்; பட்டினி பிழியும்.
உடலக்கட்டைகட்குள்
உலர்ந்து தொலைந்தது
சங்கீதம்.

~~~~~

ஏலத்தே பேசி வாங்கிய பியானோ,
பிசிற்று விசிப்பு வாசிப்படக்கித் தூங்கும்;
மாற்றிப் போன கை மாண்பெண்ணி
ஏற்றும் காலம் இன்னும் விலை.

காற்றொழிந்த மனிதக் கட்டைகட்கு
காலை பிரார்த்திக்க மட்டும் பேசும் தேசம்,
மாலையிடக் காத்திருக்கும் நிலையத்தே
மேற்கிருந்தோர் விமானம்.

~~~~~

போவது போல் புரியும்;
புழுக்கும்; பூத்து மீண்டெழுந்து
வரும் கரை நிலம் மறைக்க
அலை.

என்றும் ஓயா என்னூர் அலைகளைப் போல்மாம்,
காற்றின் உயிரும்.

திசையும் கதியும்
பெட்டிக்குட் பொத்தினாலும்,
பெருவெளியிற் சுற்றினாலும்,
ஏதோ விதத்தே பேசித் தொனிக்கும்
தமை அகற்றி உயிர் நிலைக்கவிடா
முற்றிய இருப்பு.

~~~~~

பிரார்த்தனைக் குதவா பியானோக்கும் விலை பேசல் உண்டு;
பியானோ வரக்கேட்கா பிரார்த்தனையும் நிகழ்வதுண்டு;
அதன் மோகமும் மூர்க்கமும்போல்,
நகநுனிக் காற்றுக்கும்கூட உண்டு,
பிடித்த முகமும் பிடிக்காத நிறமும்.

/-06/21/99

0பின்னூடுகை:

Post a Comment

<< Home