அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

க.த., கா.தே., அ. பா.

வேண்டிய அத்தனையும் கை விட்டு அள்ளினார்.
முதலில் வந்தது வேதாகமம்;
மூன்றாம் தடவைக்கு முளைத்தது, முல்லைப்பாட்டு;
பின்னொரு முறை பிறந்து வெளிப்பிதுங்கியது,
அண்ணலின் சத்தியசோதனை.

காட்டமாய் ஆட்டிய தலையில்
கூர்க்கொம்புமுளைத்து
கருங்காம்புமுலை சடைய,
பெற்ற பிட்சாபாத்திரம் கைவிட்டுத்தூக்க,
முதலில் முகிழ்த்தது மார்க்ஸின் தாடி;
மூன்றாம் முறைக்கு, அமைப்பியற்சூத்திரம்;
பின்னொரு தடவை பிந்திப்பிறந்து சந்திக்க வேண்டி,
பின்நவீனத்துவத்தின் பிரேதப்பரிசோதனை.

அள்ளி ஆளுக்காள் பிரித்து,
அளவாய்க் கொடுத்து,
கண் அகலவிரித்துப் பார்த்தால்,
பெற்றவர் சொன்னார்,
-கொடுத்தவன் மடியில்,
பனங்குற்றியாய்க்
குந்தியிருப்பது
தத்துவவறுமை.

அமுதசுரபி அவர்களிடம் போச்சு;
காமதேனு கனத்த மடிப்பால் சுண்டி
தூமகேதுவாய் தூர விரையலாச்சு.

சொந்தப்புத்தியை எங்கே வைத்தோம் என்று சொல்லக்கூட
சொச்சமும் புத்தி மிச்சமில்லை கக்கத்து இடுக்கில்.
தின்று செரிக்காமலே தழை கக்கிப்போன மாடும்கூட
ஆளைச் சுத்திச் சிரித்துப் போனது......
-கலிலியோவோடு தேங்காதது வானியலாம்.

கற்பதருக்காம்பிற் கட்டிய காமதேனுக்களும்
அவை தின்ற அட்சயபாத்திரமும்;
தின்றதைத் துப்பலும்
துப்பலைத் தின்னலும்.
அற்புதம் செய்கை.....
சளைக்காமல்
உற்பத்தி பண்ணுக
தமிழிலக்கியம்.

08, நவம்பர், 99

0பின்னூடுகை:

Post a Comment

<< Home