அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, April 28, 2007

அலைகளை

அடிப்படைப்படம்: '06 டிசெம்பர்
1600X1200


சுவரின் சுண்ணாம்புச்சிதிலத்தோடு மோதும்
ஒரு குருட்டுக்கடுவன் பூனையினது விடிகாலை.

சொடுக்கிச் செய்தி சூப்பிக் கக்கின சக்கையுட்
சொட்டின குருதியைக் குட்டிக்குச் சுட்டும்
பெருவிரல் தள்ளி ஊட்டும் அவம், நிகழ் படலம்.
கால் அவிழ்ந்தலையும் குட்டிக்கு,
பாலின் தவனம்; பருக்கையில் கவனம்.

சொந்த நிழலைக் கௌவிச் சீறலும் பிராண்டலும்.
சாம்பலாய்க் கழியும் முதுமயிரைக் கிளைந்து
சாளரக்கண்ணாடி விரியும் நாளழியா எச்சத்துவீரம் .

ஒரு கிழட்டுப்பூனையின் உலகம் புழுத்துப் போன
ஒரு பழைய சொற்புரட்சிக்காரனின் பாலைத்தறை.
எழுத்தும் கருத்தும் நெம்ப முடிவதெல்லாம்
வெடிக்கப் பூனையும் நெளிபுழு என்பதைத்தான்.

களமோ காகிதமோ அடி வெம்பிச்சூம்ப
புரட்சி பெயரலையும் மினுங்கற்றுகளெதுவும்
தவழும் குட்டிகளின் குறளும் விரல்களின்
பாற்றவனத்திலும் பருக்கைக்கவனத்திலும்
நுழைந்து ஒளிந்து கொள்ளும் காலவனமாகிறது.

போக்குகிறகாலத்தில்
அவரவர் புரட்சியை அவரவரும்,
போகிறகாலத்தில்
போசனபாசனத்தை போவார் வருவாரும்
தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.

சுற்றிச்சுட்டியோடும்
குச்சின் தளத்துள்ளே
அளைந்து உதிர்முடி
அலைந்து கொண்டிருக்கும்
பூனைக்கால்கள்
எட்டு
உடைத்தது என் குச்சு;
பெரியன நான்கு;
பிஞ்சுகள் நான்கு.

மேலே பூனை நட
பின்னே நீ தொடர்.
கீழே குட்டி நகர்
பின்னே நான் தொடர.....

ஒரு சரிந்த தொப்பிக்காரன்
இன்னும் சாட்டுக்கேனும்
விரட்டிக்கொண்டிருக்கிறான்
என்னை,
ஒரு சாந்தமுனி
பின்னும் ஆட்கவிந்து
முடக்கிக்கொண்டிருப்பதைப்போலவே.

சுவரின் சுண்ணாம்புச்சிதிலத்தோடு மோதும்
ஒரு குருட்டுக்கடுவன் பூனையினது
காலையைப் போன்றவைதான்,
கழிக்கும் மதியமும்
கருங்கும் மாலையும்.

சித்தக்குறி சற்றுச்சிதறிய
எட்டுக்காற்பூச்சியின் வட்டக்கண்கள்
எத்திசைப்பட்டவை?

'07 ஏப்ரல் 28 சனி 09:00 கிநிநே

Friday, April 27, 2007

இவை பற்றி ஏழு கருத்துகள்

குழப்பம்
'07 ஏப்ரல் 27 வெள்ளி 14:20 கிநிநே


1. இவை பற்றி ஏழு கருத்துகள் எனக்குண்டு.
2. இவை பற்றி ஏழு கருத்துகள் உனக்குண்டு.
3. இவை பற்றிச் சொல்லாத கருத்திரண்டும் இவற்றுள் அடக்கம்.
4. இவை பற்றி ஒளிந்து, இன்னும் கிடைக்கலாம் கருத்திரண்டு.
5. என் ஏழு கருத்துகளும் என் சொந்தக்கருத்துகள் என்பதற்கில்லை.
6. உன் ஏழு கருத்துகளும் உன் சொந்தக்கருத்துகள் என்பதற்கில்லை.
7. எதைப் பற்றியும் ஏழு கருத்துகள் எவர்க்குமுண்டு
- சொல்லாத இரண்டு, ஒளியும் இரண்டு, சொந்தமில்லாதவை என்றும் உள்ளடங்க, அடங்காதிருக்க.
'07 ஏப்ரல் 27, வெள்ளி 13:40 கிநிநே.