அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

தளையுறாததும் தலைப்புறாததும் X

ஒவ்வொரு குள்ள வௌவால் மனிதனுக்கும்
வழிசொல்லிப்போகிற நவகாலம்
கௌவிக்கொண்ட தென் காலை.
நகராது நிலம். நசிக்கும் பாதம்.

அவி இணையச் சந்தெங்கிருந்தும்
வெப்பேற்றி விரிந்தலையும் வெறி அந்து,
யானை நினைவும் நாகக்கண்ணும்
தேளின் கொடுக்கும் நண்டின் நடையுமென.

கேள்வி கன நுங்குக்குலையாக்கிச்
சீவிச் சீவிக் கொட்டு மென் சிறுதலை.
தோல் அரித்து அரிந்து உரித்துக்
கொடுக்கச் நொடிப்பி கழியத் தின்று
வீசும் திரள்குலைக் கேள்வித்தொடர்.

அலை விந்துவால் வினாக்கெல்லாம்
விடை சொல்லிக் கழியுமென் விநாடி.

june 5, 2004

தளையுறாததும் தலைப்புறாததும் XI

உட்புறம்,
நீரள்ளி நிறைக்க நிறைக்கவும்
நேர்கோட்டிலே நீந்தாதாம் நிறமீன்.
நளினவால் சுழற்றிக் கோணலாய்
வாழ்கூறு கெட்டழியும் போம் திசை.

வெளிப்புறம்,
கரை அணைக்க அணைக்க,
அரித்தோடும் அலை மணல்.
அள்ளிப்போட்ட கூடை கூடத்
தேயும் துகள்வெள்ளி வெள்ளத்துள்.

போட்டவன் பொழுது போனது தவிர
நோக்கத்துக் காக்கமாய், நீர்ப்புறம்
மச்சத்திசையும் நெடுங்கக்காணோம்;
மணற்சுவரும் நிலைக்கக்காணோம்.

~6, ஜுன் 2004 ஞாயிறு 11:54 மநிநே

தளையுறாததும் தலைப்புறாததும் VI

கிள்ளிப்போட்டாலும் உள்ளியாய் மணக்கிறது
ஊர்ச்செய்தி - அள்ளிப்போட்ட அயலான்
தேசத்துப்பூக்கூட்டைக்குள்ளும் அவியக் கவிய.

ஒட்டிப்போன பிறப்பினையும்
வெட்டிப்போன இருப்பினையும்
ஒட்ட ஒட்டத் திரியும் முட்டாள்
என் தொழில் - ஊசிக்காதுக்குள்
காலகல் ஒட்டகம் போக்காட்டலே
என்றாரை ஒதுக்கி ஒதுக்கி
வெட்டின பிறப்பினையும்
ஒட்டின இருப்பினையும் - ஊசி
குத்தித் குத்தித் தைத்திருந்தேன்
ஊறி நையும் நாறற்கைத்துணி.

கார உள்ளி மணக்கும் போதெல்லாம்
மழைச்சாரற்கேங்கு ஒட்டகப்புத்திக்கு
உள்ளுவதெல்லாம் ஓரல் ஊசித்துளை.

~13 மே 2004, வியாழன் 03:24 மநிநே.

தளையுறாததும் தலைப்புறாததும் VII

என்னைக் கேட்டால் எல்லார் எழில்
இரவுகளையும் பறித்துக்கொள்வோமென்பேன்.

கூடை கிள்ளிய பூவையும் கிணறு அள்ளிய நீரையும்போல்,
அனைவரின் மெல்லா இரவுகளையும் மேல் மேலாய்க்
குவித்து மலையாய்ப் போடுவோம் வா முடிச்சு.

தெரிகின்ற எல்லா விழிகளெல்லாம் இடித்துக் காயட்டும் கடிவெயில்;
என்னைக் கேட்டால், இன்றும் சொல்வேன்; என்றுந்தான் -
மதி தணிக்கின்ற விழி துளிர்க்கும் மது இரவு வேண்டாம்;
எரிகின்ற விழிகள் மட்டுமே எழவென்று, நிலை மாறாமல்
நெருங்கதிரலையும் பகல் பொருந்தப் பொருதிப் பொருதி
எல்லார் பொல்லா இரவுகளையும் பறித்துக்கொல்வோமென்பேன்,
என்னைக் கேட்டால் நீ இன்றைக்கும் இனி என்றைக்கும்

~13 மே 2004, வியாழன் 03:44 மநிநே.

தளையுறாததும் தலைப்புறாததும் IV

வேடனைப் போலோர் வேடம் கொள்ளும் வேளையிது

காலையும் மாலையும் கண்ணியும் கல்லும்
கோணியும் கொண்டலையும் கோரவனமானது
இவ்விராட்சதத்தேசம்.

தேகமும் தேடலும் எதேஷ்டமென்றிராமல்
தின்னப் புள் நாடி தின்னு புலி தள்ளி
விரித்த கண்ணியின் விழிகண்ணெல்லாம் கச்சிதமாய்
பனி நுனித்த பசும்புல் மெல்லப் பறியும்
கலையும் கற்றே வாழலிவ்வூழெனக்
களைக்கக் களைக்கக் கலைக்கும் வேளை.

தேரத் தின்னா ஆதிவேடன் உள்ளானாயினும்.
ஆகாரம் உண்ணா வேடன் என்பான் இல்லான்.
வேடம் வேடனைப் போலாகும் வேளையாம் இது.

~13 மே 2004, வியாழன் 02:58 மநிநே.

சமீபத்திற் படுத்தியவை

விற்பவன் கண்களை வெறுமனே வைத்துக்கொண்டு
பிடித்ததென்றும் பிடிக்காததென்றும்
காய் பிரிப்பதும் வெகுசுலபம்.

விற்பவன் கைகளை விடாமற் பிடித்துக்கொண்டு
பிடித்ததைப் பிரித்துக்காட்டென்று
வலி புழிவதும் வெகுசுலபம்.

விற்பவன் வாயை வேர்நிமிண்டிக் கிண்டி
பிரித்ததைப் பகுத்திரென்று
மயிர் பிளப்பதும் வெகுசுலபம்.

எங்கும் நுள்ளிக்கொண்டவன் வெல்கிறான்.
நுள்ளலுக்கும் மேலாம்,
பிரிப்பதும் புழிவதும் பிளப்பதும்.

விதிவிலக்கின்றி
விற்பவர் வெளியில் வழியில்
விக்கித்திருக்கும் காலம்,
அகாலம்.

~19 May 2004 Wed. 21:06 CST

தளையுறாததும் தலைப்புறாததும் II

கடற்காற்று கனத்துக் கல்லாய்க் கண் தூங்கும் கழுத்தழுத்த,
சகதிச்சேறாய்ச் சீறி நாறும் சீழ்ச்சாமம் இன்றும் எனது.
சிறுநண்டேறத் தடமாகி சைக்கிளும் நானும்
சாய்ந்தே கிடக்கும் சன்னமண்ணும் தூங்கும்
தனி மின்னல் மட்டும் எண்ணி எண்ணித் துணை
இந்தப்பக்கம் ஒரு முறை அந்தப்பக்கம் மறுமுறை
விரைபாம்பு வீதிக்குள் வேரோடி ஒளியும் வெண்ணிலா.

முடிகின்ற நிலம் எல்லாத்துக்குமாய் முடி நீட்டிக்கிடக்கிறது முழு நிலவு
அப்பப்போ, அறுகின்ற கதிருக்கும் உதிர்கின்ற நெல்லுக்குமாய் ஓங்கி
உப்பி உமிழ்ந்துவிட்டுப்போகிறது ஒளி ஒரு துளி
கறுத்துப்போன வெயிற்காட்டுத்தேகத்துக்கு மழையடித்து
மினுக்கிற நிலவுக்கும் முகமிருட்ட
வடித்து அடி மறைத்து நாசிமூசித் தலையாட்டும்
இரட்டைத்துளிர் மொட்டைக்கிளையின் கீழோர்
தோலுதிர் குட்டிச்சுவரில் தணலள்ளி
நெருப்பைத் திமிரத் தின்ற மரநெஞ்சில் மட்டும்
"இன்னும் ஏன் வரக்காணோம்?!"

வாழ்ந்த சொற்சொட்டும் வழித்தின்று அழிந்தானை வாயகட்டித் தின்றதெது?
கத்துங்கடலோ? கனக்குங் காற்றோ? கால்பாவாக் காரிருளோ?
நாளைப் பத்திரிகையும் நடிக்கும் தெரியாது நடப்பென்று.

தனித்தானைப் பாடுதல்

தனித்தானைப் பாடுவீர் நீவீர்;
தனித்தானைப் போற்றுவீர் நீவீர்;
உம்மிற் தனித்தானை அவரும்
அவருட் தனித்தானை நீரும்.

முதுகுள்ளி முகமிலி
உருவுள்ளி பெயரிலி
தார்மீகத் தனித்தானைப் போற்றுதி நீவீர்!
தரணி செய்தி பெருத்தானைப் பாடுதி நீவீர்!

ஆங்கே, யாருட் தனித்தானெனத் தேரா என்னைத் தவிரும்;
செத்த செஞ்சீன முகமிலித்தனித்தானையும் பாடுவேன் யான்; அமெரிக்க
' டைம்' காணா சிலியின் அறியிலித் தனித்தானையும் போற்றுவேன் காண்.
மறையதுட் பெரிதாம் மனிதம்! :-)

~5, ஜுன் 2004 சனி 1:24 மநிநே
(தியனான்மென் சதுக்க நசுக்கலின் நினைவுநாளில்)

தளையுறாததும் தலைப்புறாததும் III

ஒரு பொசுங்கு தனிப்பூனைமயிருக்குள்
நெடி சிலுப்பி நிலை சுருக்கி நசித்துப்போனவர்களை
நினைத்துப்பார்க்கும் நேரமும் வருமாம் எனக்கு.

தேவாங்குத்தேசத்தின் அலவாங்குப்புதல்வர்களின்
அழுத்தலுள்ளும் வருத்தலுள்ளும் அப்பப்போ
பூனைமயிர் பொசுக்கிப் போனார் புறப்பட்டுப்
புற்றுயிர்த்து வருவார் நான் போம் வழி பார்த்து.

அகப்பட்ட சங்கிலிக்குக் கண்சிமிட்டுவார்
புதைபட்ட கூண்டுக்குப் பூப்பெய்வார்; பொழிலென்பார்
காற்றுக்குழாயுள்ளே கலந்தூற்றுவார் கசப்புத்திராவகம்
பேச்சும் மொழியும் பொசுக்கத் தம் வருத்தம்
பூத்தான் ஒருத்தனைப் பார்த்தாலே பொங்கும்
பூரிப்போடு போய் மறைவார் பூத்த புற்றிலோ
புதிதாயோர் புழு பூரும் பொல்லாச்சந்திலோ

அடுத்த வேளையும் எங்கென்றில்லாது
கூண்டு காண மீண்டு தேர்ந்தெழுவார்
என் தேரோடும் வீதி.

~13 மே 2004, வியாழன் 02:51 மநிநே.

தளையுறாததும் தலைப்புறாததும் IX

அடுத்தாள் அடிப்பதற்காய் வாயில்
புடைத்துப் பருத்திருக்கிறது ஆராய்ச்சி மணி.
குலைக்காவேளையிற் குட்டிநாய்
பாதிக்கண் பொருத்தி படுத்திருக்கும்.
"உருக்குருக்கி ஒலியுரு வடித்தவன் யார்? - ஓசைப்படாது,
என் வாயில் தூக்கிக் கொழுவி முடித்தவன் யார்?"
கூறாமல், அடுத்தாள் தான் முன்னாள் முடித்த
பிடித்த நேரத்தில் முடிப்பிழுத்திழுத்து
அரற்ற அடிக்க வகை புடைத்திருக்கும்
என் வாசல் ஒரு மழுக்கு பழமுருக்குமணி.
முருக்கம் கதியால் வெறுமுதுகு இழுத்துக்கிழிப்பதுவாய்
போவான் வருவாள் பொல்லாப்புக்கெல்லாம்
என் வாயில் இழுத்து அடிப்பார் வாயிலெல்லாம்
உருக்கி வடித்து உருக்காவிக் கொணர்ந்து கொழுவார்
எனது வாயில் இழுத்தழுத்து அடித்துப்போவதினாற் பொழுது
இல்லாமலே நிம்மதியாய்க் காயும் ஏதுமின்றி அரற்றுமணி.

~13 மே 2004, வியாழன் 04:53 மநிநே.

தளையுறாததும் தலைப்புறாததும் VIII

பொறி தின்னத் தின்ன பூதமாய்ப் போகிறது புத்தி
போக்கிடமில்லாமல் போகும் பொறியெல்லாம்
பொத்தியும் பொறிந்தும் புகுந்துபோகிறது.

நிலை நெளியும் புத்திக்கு
நிலவு எரியும்; நிழல் நெரிக்கும்;
அவியும் கண்; அலையும் கை.
அள்ளிய பிடியிற் கிள்ளிப்போடும் வாய்.
அவதி தள்ளி கொள்ளப் பிடித்தைக் கொட்டி,
பொறிகீறி நன்னிநன்னி நாசி நுனி நனைந்து
அடுத்த பிடிக்குத் தேடியலையும் அடையாப்புதிது.

ஆகுதலது என்றன்றி ஆகாதிது என்றின்றி
எக்கி எக்கி எல்லாம் சமியத் தின்னும் ஏட்டுப்புழு;
உட்சாரம் செரியும்; உடன் சாராதது கழியும்.

பாற்பல் பருக்கும் புழு
பழுக்கும்; வெடிக்கும்.

பிளந்து தொலைந்த பாதப்பதிவுத் தடத்தே
பொறி தின்னப் புகும் புதிதோர் புழுப்பிஞ்சு.

~13 மே 2004, வியாழன் 04:14 மநிநே.

தளையுறாததும் தலைப்புறாததும்

எல்லா விழிகளுக்கும் எரிந்துகொண்டிருக்கின்றேன்;
என் விழி மட்டும் இன்னும் தொடர வழிகிறது அடர் இருள்;

காற்றுன் தோணியிலே கடந்துகொண்டிருக்கின்றேன் காலத்தை;
சொரிந்த தினங்கள் புலம்பற்சருகுகளாய்
பொய்த்து அலைகின்றன போம் வழியில்.
தொட்டுக்கொள்ள எகிறும்; மறுகும்
எக்கணத்தும் துவளும்; மெல்லத் தூள்.

எரிந்த குப்பையெல்லாம் எடுத்து அடுக்கிக் கிடுக்கிப்பிடியில்
கிடத்தி வாசித்துக்கொண்டிருக்கின்றது கிழக்காலம் பல்லால்.
என்னையும் இனம் கண்டு
தின்னென்றது, "உன் பங்கு."

ஆங்கே அலைந்த நிழல்கள் கொஞ்சம் அசதிவசமாய்
அகப்பட்டுக்கொண்டதென் கோழிக்கால்களுள்;
வனங்களின் செறிவும் வழிகளின் புல்லும்
வரி கலந்ததாய்க் கசியும் மிதியும் நிழலும்
மருளும் அழியும் மலமாய்க் கழியும்.

அலைய அலைய அமிழும் தோணி.
அலையின் கீழே ஆழமாய் ஆழி.
அகல, களி.

~13 மே 2004, வியாழன் 02:14 மநிநே

தளையுறாததும் தலைப்புறாததும் V

நகரா நட்சத்திரங்களைக் கற்றுக்கொள்ள
நாள் பார்த்திருக்கிறேன் நான்.

கைவீசி எறிந்த வெளியில் வேறெப்போதோர்
வாளைக் கைதூக்கிய வேளையிலே வேலையிலே
தொலைத்த நட்சத்திரத்தைத் தேடும் தொழிலும்
ஓடி வந்து ஒட்டிக்கொண்டதென் ஓரப்பையுள்ளே.

மிச்சப்பரப்பெல்லாம் மினுங்கித் தொலைந்தபின்னால்,
மொச்சைக்கொட்டையாய் மின்னித் தவிக்கிறது உடுமொட்டு
என்னை எண்ணிக்கொள் எண்ணிக் கொள்ளென்று.

அப்பப்போ பெய்ய அடைமழைக்குட் தலை ஒளிந்தபின்னும்
சத்தம்போட்டென் சாரற்சன்னலைத் தட்டும் சின்ன நட்சத்திரத்தின்
சன்னப்பாட்டின் சாரீரம் பின்னாலே
குடைந்த கிடங்கு குவியக் கவிந்து
சடங்கிருக்கிறது என் அம்மாவின் ஊர்.

எண்ணிக்கொள்ளும் வேளையிலே
எழும்பி வரலாம் என்னைக் கண்டு
"இன்றாவது வந்தாயோ" என்று வழி.

நடுங்க நடுங்க நனைவேன்
நகராமற் பால்.

~13 மே 2004, வியாழன் 03:13 மநிநே.

கவிதையும் கதையும்

கவிதை எழுதுவதென்பது கடிலாஸ்கோப்பிலே
குறுணிவண்ணக்கண்ணாடிச்சிதறல் போட்டுக் குலுக்குதல் போலாம்;
கவிதை எழுதுவதென்பது இருண்டலர்ந்த கண்ணுக்குக்
குளிர்க்கண்ணாடி போர்த்திச் சூரியோதயம் சுட்டிக்காட்டுதலாம்;
கவிதை எழுதுவதென்பது கச்சற்பொருளுக்குச்
சக்கரைப்பாகு சுற்றி அண்ணாக்கழுத்தி நெக்குருக்குவதலாம்.

நெருப்பிலே உடைப்பிலே உருக்கி நொருக்கிப் போடுகிறேன்
என்னிடம் கேட்கப்பட்ட காக்காய்ப்பொன் கவிதைகளின் சொற்களை.
முரட்டுப்பாதை போகும் கறுப்புக்குதிரை
ஒன்றில் உதை தள்ளும்; அன்றில் கதை சொல்லும்.

Tue May 4, 2004 11:07 am

இன்றைக்கென் கவிதை பற்றி

இன்றைக்கென் கவிதை பற்றி எவருக்கும் தெரியாது.

இன்றைக்கென் கவிதை எதுபற்றியும் இராது -
இல்லை என்பது பற்றி; இருப்பது பற்றிக்கூட.

துள்ளித்திரிந்த காற்றில் கை
அள்ளித் தெளிந்து மிதக்க, நாள்.
உள்ளது அல்லது பிரியாது போம் பொழுது.
மெல்ல முகிழ்ந்தழியும் பொன்நிலவும்
கள்ளத்திற் சிரிக்கும் கன்னம் குழிக்க.

வந்ததைத் தின்று வருவதைக் கண்டு
சென்றதைப் பேசிச் செல்லவே இந்நாள்.
பெற்றது அழிவு; அற்றது செலவு;
ஒற்றுமை பார்க்கில் உள்ளது நிறைவு.

இப்படி ஒரு நாள் இன்றைக்கு மட்டுந்தான்,
கவிதைச் சொற்படி வளரும் என்றேன்; இன்றேல்,
இன்றைக்கென் கவிதை பற்றி எவருக்கும் தெரியாது.

Sun Feb 15, 2004 8:31 pm

புத்தாண்டு

ஒரு செத்த பாம்பைப்போற் சில்லிட்டு ஆண்டிறுதி;
அப்பப்போ மட்டும் அங்கங்கே உப்பி
வெப்பக்காத்து கொஞ்சம்-
இந்தப்பக்கம், அந்தப்பக்கம்.

மொத்தத்தில் மேடைக்கும் தரைக்குமாய்
பேச்சும் நான்; கேட்பும் நான் -
ஒத்தைப் புழு தத்தித்தடக்கி
கொத்தத் தேடும் ஊத்தைக்காக்கை.

பக்கத்துக் கத்துங்கடலோசையும்
பெருங்கதவெடுத்து மூடியது காது.
அப்பப்போ மட்டும் அரங்கு சப்பும்
உப்பற்ற வெப்பக்காத்தூர்-
அந்தப்பக்கம், இந்தப்பக்கம்
கத்தவும் அப்புறம் மெல்லத் தத்தவும்
சத்தின்றிச் செத்ததாம் தனிக்காகம்.

சட்டை உரித்தூரும் குட்டிப்பாம்புப்புத்தாண்டு;
அழிந்த மேடை மிளிர்ந்து மிதந்தது மீளச் சனம்;
தூரச் செத்துக்கிடந்ததொரு சின்னக்காகம்.

31, டிசம்பர் '03

தனிநரைமுடி

காலைக்குளியலறைக் கண்ணாடியில்
நாடிநரை தாட்டுடைத்த கொட்டாவியிற்
பிறப்பார் அப்பா; செத்தார் முளைப்பார்,
வெண்முடியில்; சொட்டுந்துளி பட்டுத்
தெறிப்பார் ஆடி பளபளக்க.

செத்தார் என்னுட் சீவிப்பார் என்ற காலக்
கட்டியம் விலங்காகிக் கால் முட்டி முட்டி
அரக்கத்தான் இத்தனை நாள் வாழ்வு.....
"இந்த வயதில் அந்த நாள் அப்பா"
அம்மாக்குள்ளாலே, அந்தநாளாரை அறிந்தாருக்குள்ளாலே
என்னழுக்கு நகத்தைக் கூடத் தனக்குப் பிடித்தால்,
கிடைத்தபொழுதிலே வெட்டிப்போக உரித்தானவர்;
சனியிரவுமட்டும் சொட்டுச் சாராயம்
உதடு தொட்டுக் கொள்ளும் நண்பர்களும்
என்னளவிற் செத்துப் போகவென்றும்
இந்தவயதிலே வந்துபோக அந்த நாள் அப்பா.

அவசரத்தில் அவரசத்திற் சிரைக்கும் முடியோடு
மீள மரித்துக் கூடையுட் குப்பையாவார் அப்பா;
அதனாலென்ன? அடுத்த வாரத்துக்கும்
இரவு முதிர்த்து முறிக்க முன்னால்
மயில் ராவணனாய் முளைத்திருப்பார்
என் அப்பாமூக்கையடுத்தோ, இல்லை,
அவர் செதுங்கிச் செறி முன்னாடியை
முனைபட முள் ஆழப் பிரித்தோ.

என் மழித்த முகம் காண்பார்
களிப்புக்குரியதில்லையென்றால்,
கிடக்கட்டும். செத்தவர் முளைத்தாரென்ற
செய்தி ஒளிக்கச் சிரைக்கவென்றும் - சத்தமின்றிச்
சில சமயம் மூடுமென் காலைக்குளியலறை.

~10, Nov. 2003 Mon. 19:53 CST

எதிர்ப்படும் எந்த எதிரிக்கும் என்னிடமிருந்து....

என் மொழியும் உன் மொழியும் எவன் சொன்னான் ஒரே மொழி?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
என்னம்மையும் உன்னம்மையும் எத்துறைத் தோழியர்?
நீயும் நானும் - சொல்லவே வேணாம்- செங்கீரியும் நாகமும்.
காற்போக்கிலே கறிச்சந்தையிற் கலந்த விளைமீன்வாங்கியர் நாம்.
முந்திப்போல்,
இன்றையும் நாளையும் இனி வரும் காலையும்
கணம் முகம் பார்த்துக் கை குத்தாமற் குலுக்காமல்
பக்குவமாய்க் கலையும் கண்ணியராவோம்.

Sun Nov 9, 2003 9:03 am

Funny face

அகாலப்பசி;
குறுக்குமறுக்க இரு முறிப்பில் நீர் வேகிக் கோழி நூடில்ஸ்.

விட்டுவிட்டு ஓங்கித் தலை தட்டத் தெளியும் என் தொலைக்காட்சி;
நடுங்க, அலை கறுப்புள் ஆள் வெளுத்து ஹெப்ரோன் & ஆஸ்ரயர்.

முட்கரண்டி முனை நூல் செருகித் தூக்க, முன் வெடித்த முரண்குமிழ்;
பின்னிரவில், சுற்ற எல்லாம் செத்து, சவம் மட்டும் சிரித்த திரை.

அணைந்த இருளுள் ஆளளைந்து தின்னாமற் திறந்தாறத் தீனி.

~'03, ஓகஸ்ட் 23, சனி

திறனாய்வு

எழுதப்பட்ட நல்லதெல்லாம்
என் 2'X4'X1/2' அலுமாரிச்சுவருள் அடங்கும்
மறுப்பிருப்பின்,
உன் 5'X3'X1' புத்தகப்புற்றைப் பெயர்த்தெறி.
சொருகிக்கொள்ள நூல் தருவேன் நான்.

~12, ஓகஸ்ட் '03 செவ்வாய் 00:29 மநிநே.

பனைவெளிப்படல்

படுக்கை நிமிரத் தலை இடிக்கும் தாழ் மாங்கிளை
குசினித்திருகை நெரிந்து சுவர் துளைத் துளுந்து மணம்
சிதறிச் செவி நனைக்கச் சன்னமாய்க் கந்தரந்தாதி
ஊறி அடிநாக்கில் நுரையெச்சிற் புளிமாங்காய்
ஜன்னற்கண்ணில் மட்டும் எல்லையறு பனிவெளி.

~02, ஓகஸ்ட் '03 சனி 07:37 மநிநே

ஞமலி விடு தூ!தூ!

எழுதுவதுக்கு முன்னால், சந்தர்ப்பம்கூறுதலென்பதிலே பொதுவிலே எனக்கு நம்பி
க்கையில்லை. இந்தவிடத்திலே இது தவிர்க்கமுடியாததாலே:

ஜெயமோகனின் அண்மைய கணையாழிச்செவ்வியை முன்னிட்டு பதிவுகள்
கருத்துத்தளத்திலே இன்று பேசப்பட்டதினை வாசித்ததின் தொடர்ச்சியாகக் குறி
த்துக்கொண்டதிது.

இப்போதெல்லாம் இலக்கியம் அச்சடிப்பது மாசாத்துவான்கள் சங்கதியாய்ப் போச்சு.
கொல்லைப்புறத்திலே நானொரு இலக்கியம் படைத்தால், கூடத்துநாற்காலியிலிருந்து
நீர் முகவுரை எழுதும்; காசை நான் விட்டால், என் சகலை அம்மான் ஆராச்சும் பதி
க்கலாம். குசினிப்புறத்திலே நீர் வைத்திருக்கும் மடைப்பள்ளிக்காரர் மதிப்புரையைப் பரி
ந்துரையாகவே புரிந்தெழுதித்தருவார். புத்தகம், முகவரி, மதிப்புரை வந்த சேதியை
வாலயத்துக்குஞ்சுகள் கொண்டு வந்து சேர்க்கவேண்டிய இடத்திலே சேர்க்கும். ஆதரி
த்து வரும் சேதியைக் கொண்டுபோய் நாற்காலிக்காரருக்குச் சேர்க்கும்; எதிர்த்தால்,
பாய்ந்து விறாண்டிக்கடிக்கும். இத்தால் அறிய வேண்டியது யாதெனில், படைப்பிலக்கி
யம் என்பது பண்டம் விற்கும் விளம்பர உத்தியினால் வெல்லப்படுவதாக்கும். சிற்றிலக்கி
யம் பேரிலக்கியம் என்ற பேதமில்லாமலே இந்த பேய்க்காட்டல் நிகழ்கிறது. இந்த நி
லையிலே ஒதுங்கி, சிற்றிலக்கியம்/பேரிலக்கியம், பெரும்பத்திரிகை/சிறுபத்திரிகை என்ற
கறுப்பு/வெள்ளை தீற்றுக்களுக்குள்ளே அடங்காது தான் மட்டும் ஒளிர நிற்பதே எழுத
முயல்கிறவன் முதலிலே எண்ணிக்கொள்ளவேண்டியதென்று நினைக்கிறேன். பெரி
யோர் முகவுரை, நூலனுப்பிப் பெறும் அறிந்தார் மதிப்புரை, நாட்டுக்கு நாடோடி புரி
ந்துணர்வு விழாவெடுப்பு என்பனவற்றின் விபரங்களோடு என்னை நோக்கி
உருண்டோடி வரும் "புத்தம்புது வீரிய இலக்கிய உலகத்தை" சப்பித்துப்பின
கரும்புச்சக்கை என்று மட்டுமே எண்ணிக்கொண்டு திறக்கிறேன். தனியே Marketing
Technique இன் வெற்றி மட்டுமே நல்ல படைப்பென்றதாகி விடாது என்பதிலே நம்பி
க்கை இன்னும் கொண்ட ஓரிருவர்களிலே நானும் ஒருவன். ஞமலி விடு தூ!தூ!

==================================================

வலை ஞமலி! வலை ஞமலி!!
எடுத்துப்போவாயோ ஆசான் குட்டிச்சாத்தானுக் கென் சேதி!
தனியிடம் கணியிலே தவித்துத் தமிழெழுதி
பதிவிடமில்லா தலையும் என் பெயர் பற்றியும்
பரிவுடன் அவர் மனம் பதியச்சொல்லு

~செ(¡)ல் சேதி~

அடுத்த முறையாச்சும் தமிழ் ஆண்டே,
தயைகூர்ந்து தமிழ்படைத்த
ஆகாக்காய் அரைவேக்காட்டு
ஊறுகாய் பெயரிலேனும்
உள்நுழையும் எனதையும்.
பாரும்,
ஆறு கவி நாலு கதை நானும் எழுதியுள்ளேன்.
குறித்துக்கொள்ளும்;
கூடவே உம்மை விதந்து ஓரிரு பதில் முறியும்


வேணுமென்றால் வாரும்
வெளிநாட்டில் வீசுவேன் நானும் உமக்குக் காத்து
நீரும் வீசவேணும் உள்நாட்டில் எனக்கும் பார்த்து
தேஜஸ் கூடத்துநாற்காலியிலே சீமானே உம் சேவை
கொல்லைப்புலத்துக்குக் கூட்டாளி நான் தமிழ்க்காவல்
குசினிப்புறத்துக்கு ஆராச்சும் நீர் பார்த்துப்போட்டால், அவராச்சு.
உமக்கு வாலாட்டும் எலும்பு நாய் எனக்கும் வாலாயப்படவேணும்.

எனைப் பாரும் தேவே! இறங்கி வாரும் ஏறே!
இந்தப்பக்கம் நான் தமிழரசன் உந்தப்பக்கம் நீர்
இந்த மாசம் இருக்குங் காசைவிட்டு என்னொரு கவித்தொகுதி;
நீர் முகவுரை; பதிப்பார் நம் பங்காளி; மடைப்பள்ளிக்காரர் விமர்சனம்
தாம்பாளம் எடுத்துப்போகவும் எதிர்த்தாரை எடுத்தெறியவும்
வாலாயப்பட்ட பூராயத்தெரியா வேட்டைநாய்த்தொகுதி.
அடுத்த மாசம் கட்டாயம் அறிஞர் உமது எட்டுத்தொகுதி காவியத்துக்கு
இந்தப்பக்கம் எடுப்போம் நாம் பிளாஸ்ரிக் குட்டிவாழை கட்டி ஆராத்தி.


ஆகையினால்,
அடுத்த முறையாச்சும் தமிழ் ஆண்டே,
தயைகூர்ந்து தமிழ்படைத்த
ஆகாக்காய் அரைவேக்காட்டு
ஊறுகாய் பெயரிலேனும்
உள்நுழையும் எனதையும்.
பாரும்,
ஆறு கவி நாலு கதை நானும் எழுதியுள்ளேன்.
குறித்துக்கொள்ளும்;
கூடவே உம்மை விதந்து ஓரிரு பதில் முறியும்

~செ(¡)ல்சேதி முடிவு~

சேதி எடுத்துப்போகும் எழில் நாயே
நடனம் சுழிக்குமுன் துடிவாலுக்கும் நன்றி.

இணைய நாயே!! இணைய நாயே!!
எடுத்துப்போகாயோ என் ஆசான் குட்டிச்சாத்தானுக்கு
இவ்விணையத்து ஏகலைவன் ஏக்கச்சேதி!


~31, ஜூலை '03 வியாழன்

(முதற்கிறுக்கல்; திருத்தமும் பின்னால் வரலாம்; வருத்தமும் பின்னால் வரலாம்)

பாலியல்வதை

திரும்பித் திரும்பத் தேர்ச்சில்லுட் செருகியும்
இத்திசை சாமி முலை எறிந்து எரியத் தினவு.
எண்ணிப்பார்த்தால், எண்ணெய்க்காப்பெல்லாம் கை
தடமிழுத்திழுத்துத் தனக்குடம் தடவிய கற்கருஞ்சிலை.
இந்திரியம் தித்தித்துத் திரியத் திரிய
தந்தம் முளைத்துத் தள்ளும் தாந்திரீகம்.
இறைவி குமரியானால், இதுதான் கஷ்டம்.

~17, ஜூலை '03 14:07 மநிநே.

மக்களாட்சி மாண்பு

மக்களை மக்களாய் நடத்தச் சொல்லி
மக்களுக்காய் மக்கள் மக்கற்றெரு மறித்து
மக்கள் கூட்டம் மதிலோரம் போட்டனர்.
முக்கிய மக்கள் பேச, நடுத்தெருவில்
எக்கியெக்கிக் கேட்டார் மிச்ச மக்கள்.

சொடுக்கி மக்கள் அடிக்கக் கட்டிய மணியை
அரசமக்கள் அறுத்துப் பதுக்கல்பற்றிப் பேச்சு.

மக்களால் மக்களுக்காய்த் தேருண்ட
மக்கள் அரசு மக்கள் தெருவில்
பொதுமக்கள் போகவென்றாம்
மக்கள்காவலரைப் பக்குவமாய்
நகர் சுற்றி வர அனுப்பியதென்பது,
"மக்களே! இது உங்கள் வானொலி".

மக்கள் பிக்கலுற்றார்; பிணங்கிப் பினைந்தார்.
"வந்த மக்களை நின்ற மக்கள் நெருக்க,
நின்ற மக்களை வந்த மக்கள் நொருக்க,
பல மக்கள் பெருமண்டை உடைந்து,
சில மக்கள் சிறுமண்டை பிளந்து,
மலையெனக் குவிந்து, ஆறெனப்பெருகி"
என வினையெச்சித்து மக்கள் தாளிகை.

இத்தால்,
"மக்கள் வென்றார்" என்றார் அரசி மக்கள்
"மக்கள் மாண்டார்" என்றார் மறித்த மக்கள்.

மக்கள் ஆட்சியிலே,
வென்ற மகன் நானா, தோற்ற மகன் தானா
என்றறியா மீதி மக்குமக்களுள் புக்கி யானும்.

~09, ஜூலை '03 02:30 மநிநே. (அடிப்படி)
~15, ஜூலை '03 16:09 மநிநே. (திருத்திய படி)

இயக்கம்

எனக்குச் சம்பந்தமிலாப் பங்குகளிற் தொங்குகிறதென் தொழில்
நான் தொழாத் தெய்வத்தின் பாழ்சந்நிதிக்குப் போகிறதென் வரி
என்னோடிணங்காப் பிறர் சுமத்திய அரசியல்வாதியென் குரல்
என்னையறியா எவரோ அனுப்புவதெல்லா மாகுமென் அஞ்சல்
என்னைத் தவிர எல்லாமே இங்கெனக்கான இயக்கமானால்,
என்னாலானது என்னவென்றெண்ணியிருத்தலே இனி.

~15, ஜூலை '03 02:30 மநிநே.

சுற்று

மழையைப் பற்றியே பேசி முடித்து அவிழ்த்துப் பேசினோம்.
நான் அறுத்தால் அவன் தொடக்கம்; அவன் அறுந்தால் என் துளிர்ப்பாம்;
ஆலங்கட்டி மழை பற்றி நானும் அதுபோல வேறொன்றை அவனும்.
ஆலங்கட்டியளவு அகட்டவொணா என் கை தொங்கிக் கருந்தோற்பை;
உள்ளொட்டி நனைந்திருக்குமோ கோப்பு? - அலைக்கும் மென்நடுக்கம் தலைக்குள்.

நூற்றாண்டு வெள்ளம் பற்றிச் சொன்னானாக்கும்
~பைத்தோல் வழுகி உட்கை குளிர்ந்தவன்~
சென்றாண்டுப் புயல் பற்றிச் சொன்னேனா பின்னே?

அடித்தள்ளிய அடைமழை அவசரத்தில் ~ ஆளாள் ~
நுழைந்த கதவால் தலை குனிந்தகலல்வரை,
மழையைச் சுற்றினோமென்றே சொன்னாலும் - ஆளுக்காள்
சொன்ன மனதைச் சுற்றினோமாக்கும்;
ஏற்றிக்கொண்டு எங்கும் சுற்றின
எம் ஓட்டி எதனைச் சுற்றினானோ?

~14, ஜூலை '03 20:27 மநிநே. (அடிப்படி)
~15, ஜூலை '03 16:19 மநிநே. (திருத்திய படி)

பெயர்*

இரவின்றிப் பகலின்றி உனக்கின்றி எனக்கின்றி
எதிர்ப்பட்ட திசையெல்லாம் விரிந்து செல்லும் வெறுங்காற்று.
பட்ட உடலில், பக்கத்துப்பூவில், பாற்பிள்ளைச்சத்திக்குள்
நாசி பெற்ற பெயர் நசிந்துபோகிறது.
நீர்பட்ட நெடுங்கிழக்கோ நிலம் பரந்த நேர்தெற்கோ,
உந்தித் தள்ளி வளி உந்தப் போகிறது.
கிளை சுற்றித்தான் உலா - என்றாலும்,
காற்று~மரம் தொட்ட உறவில்
பெயர் ஒட்டிடமும் ஒடிவிடமும்
சட்டெனத் தெரிதலில்லை.

~10, ஜூலை '03 13:14 மநிநே.

*(கல்யாண்ஜியின் "வளையல் பூச்சி" உரசிய பதிவு)

நாளுள் நான்

நீ வரும் வரைக்கும்
நாள் முழுக்கத் தூங்குகிறேன் - தூங்காநேரத்தில்
தூசு தட்டித் துடைத்துக்கொண்டிருக்கிறேன்
கணியை, பலகணியை, பத்தாண்டுப் பின்நினைவணியை.
அப்போதைப் போலத்தான் அகலாமல்
காலடியிற் கட்டிப்போட்ட குட்டிநாயாய் உறங்குது கொள்காலம்;
விதிரத் தவித்தெழ எப்போதேனும் வீரிடும் தொலைபேசி.
தாயில்லாப் பிள்ளையாய்த் தான் வளரும் வயசையும்
இடை முடிந்துக்கொண்ட இணைப்பையும் தவிர்த்துவிட
சுற்றி எதுவுமே சுற்றா வெம்மதியம், இப்போதும்
உடையும் குமிழாகும் உன்னொரு சாவித்திருப்பலில்.

~10, ஜூலை '03 16:34 மநிநே.

பெருங்கடல்

கேவலந்தான்,
நித்தம் கத்திப் பிழைத்தல்.
ஆனாலும், ஆள் சேர்க்க
அலை கடலுக்கேது
அடுத்த வழி?
கொடுமை
இருளுட் தனிமை.

~10, ஜூலை '03 17:04 மநிநே.

வளர்ச்சி

முடிந்த கொண்டைக்குள் ஊரும் ஈராக, கிழமைக்கு
கழியும் அஞ்சலுக்குள் ஒன்றேனும் கண்டன அஞ்சல்.

முறைப்பாட்டுக்கடிதங்கள் மட்டும் முன்பல் முளைத்துத்
தாளிற் தழைக்கின்ற காலமாம் இது.

இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைந்தார் உடைந்த பல் பேரிலொன்று
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைத்தார் உடைத்ததன் பேரிலொன்று
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைந்தார் உடைந்த பல் பேரிலொன்றான
கண்டனம் பேரில் சிங்கப்பல் உடைத்தார் உடைத்துப் புடைத்த கைபேரிலொன்று.

இலக்கியம் பேரில் ஏதோமடத்தாரை எழுத்தடித்ததன் பேரிலொன்று
இலக்கியம் பேரில் எழுந்த மடத்தாரை எடுத்தடித்தவர் பேரிலொன்று
இலக்கியம் பேரில் மடத்தார் எதிர்த்ததை இழுத்துப் பகைத்தார் பேரில்
தடித்தவர் அடித்தவர் அவரைப் படித்தவர் விறைத்தததின் பேரிலொன்று.

எண்ணொணாக் கவலை என்னோடு இருந்தாலும்
இலக்கியக்கவலையன்று இறந்தது காண் இன்று.

வருந்தமிழ் எப்படி வரண்டாலும், பரம்பும் பார், பையப் பைய
கடித இலக்கியச்சுரையேனும் தமிழ்க் காய்ந்து.

~10, ஜூலை '03 02:30 மநிநே.

நகர்காட்டிகள்

நகரவாழ்வு பற்றி நாலுபேர் சொன்னார்கள்.
நறுக்கி, "நரகம்" சொன்னார் நகர முன்னால்,
அடுத்தாள் நாவில் "'நடுநிசிநாய்' அலை தெரு."
ஊதி ஒத்தூதி, "கொடுமை" கூறிக் குனிந்தேன்.
என் சின்னமுகம் குறித்தே முழுக்கப் புகைத்தார் ஓராள்;
"ஆலைப்புகை ஊடும் முழத்தீவும் சன்னற்றுளையும்."
சுவருட் சுருங்குலகைச் சுற்றிச் சலித்தார் மற்றாள்.
அவருயிர்க்கக் கண் சுருக்கி நெரிந்ததென் புருவம்.

இருள் பழுக்க, ஆள் போக்கிக் கதவடைத்தேன்.

நினைத்து நானேனும் கேட்டிருக்கலாம்,
முன்னொரு நகரம் வாழ்ந்தோரோ என்று.

~9, ஜூலை '03 02:30 மநிநே.


நன்றி: 'நடுநிசிநாய்' பதத்துக்காக பசுவைய்யா

எச்சம்

எது பிடிக்கும் எது வெறுக்குமென
இலகுவாய்ச் சொல்ல முடியவில்லை; என்றாலுங்கூட,
கடைத்தெருவில் கழுத்தளவாற் சட்டை தேர்தலென
சுலபப் புணர்தலும் பெறுதலுமாய் ஒடுங்கிய சுபாவம்.
தேடற்பொறிகூறும் நான்கெண் ஆண்டைக்கூட
ஆட்குறியாய்ப் பெயர்பின்னால் அள்ளி முடிந்தோடும்
அவலமும் வந்த நிகழ்காலம் எனதான சங்கடம்.
இலக்கணம் தப்பாமல் எழுவாய் பயனிலைக்கிடை
வகுத்த பயணமே செயப்படுபொருளாகி,
சுலபமாய்ப் புணர்ந்தும் சுகமாய்ப் பெற்றும்
சடங்காய் நொருங்கிய சவம் காண் சூழ்வாழ்வு.
நகர்ந்தென்னைக் கழித்து நத்தைப் பசையாய்
மெல்லக் கழிகிறது சுவை மெல்லாப் பொழுது;
துப்பிய எச்சிலாய் மிச்சம் நான்.

~8, ஜூலை '03 02:30 மநிநே.

அந்தரங்க விஷயம்

அந்த ரங்கமான விஷயமாக்கும்;
இந்த ராமச்சந்திரனைப் பற்றி அவரும் சொல்லவில்லை
அந்த ராமச்சந்திரனைப் பற்றி இவரும் கேட்கவில்லை.

தந்த ராமச்சந்திரனில்லா நந்தன் அமாவாசை பற்றி
வந்த நாள் தொட்டு எந்த ராமச்சந்திரனாச்சும்
குந்த விருந்து பந்த ராமச்சந்திரருக்குச் சொன்னானா
சந்த மாய்க் கவி என்று சல்லடைத்துப் பார்த்ததினால்,
இந்த நாள் வரைக்கும் எனக்கும் வந்ததில்லை துயர்,
எந்த ராமச்சந்திரன் பற்றி இந்த ராமச்சந்திரன்
அந்த ராமச்சந்திரனுக்கு எடுத்துச் சொன்னானென்று.

சுந்த ரமான ரகுராமச்சந்திரர்பூமியிலே,
எந்த நந்த அமாவாசை என்று இவரும் கேட்கவில்லை
எந்த நந்த அமாவாசை என்று அவரும் சொல்லவில்லை.
மந்தி ரமாய் மனதுள் எண்ணினவன் மட்டும் நான்.

~8, ஜூலை '03 02:30 மநிநே.

Epsilon

மூச்சுவிட வெளிவந்தால் மூக்கணாங்கயிறு.
மாட்டுக்காரர் உலா; சூட்டுக்கோல்.
தோலுடன் நாசி பற்றிப் பொசுங்கும் நம்பிக்கை.

அவரவர் வட்டமெல்லாம்
அரைவட்டம் வெளுப்பு
அரைவட்டம் கறுப்பு
துணுக்கியும் காணாப் பழுப்பு.
வெளுத்த பிறைக்குள்ளே கறுத்தான் எதிரி
இருட்டுச்சுழிக்குள்ளே வெளுத்தான் எதிரி
ஆதியிலும் நீதி அப்படித்தான் இருந்தது
மீதியிலும் நீதி அதுவாய்த்தான் மிதக்குது

அறிந்தாரோ அந்நியரோ,
நிற்கும் விட்டப்பரிதிக்குள்ளொடுங்கு
பாதிவட்டத்தளநிறத்துப்புண்ணியர்
மட்டுமெம் இன்ப வட்டகையார்.
மிச்சத்தார், அரவமோ திரிகயிறோ
நெஞ்சுலர அஞ்சுவோம்; அகல்வோம்.
ஈடன் தோட்டத்தப்பிள்
எச்சிற்பட்டபின்னால்,
எவர் கண்டாரிங்கு
எல்லாத்தள வட்டமும் உள்ளடங்கும்
பெருங்கோளம்?

~8, ஜூலை '03 02:30 மநிநே.

கனத்த மழைமீது இன்னுமொரு கவனம்

கனத்த மழை பெய்யத் தூங்கப்போகின்றேன்
ஜன்னலைத் தட்டிக் கொண்டிருக்கிறது மழை தள்ளக் காற்று
நடந்து கொண்டிருக்கும் தெரு நானிருக்கும் நாட்டிலில்லை
பெருத்த மழைக்குள்ளும் பிடிபட்டுக்கொண்டு நகரும் பெண்களின் குரல்
தடுப்புக்கு அப்பால்
இயற்கைக்கும் இருப்புக்குமாய் சிந்திக்கொண்டு போகின்ற சொற்களுக்குரி
த்தானோர் அவர்கள்
தெளிந்துகொள்ள முடியா இழப்பை உணர்ந்து கொள்ளமட்டுமென்றே உரத்தடிக்கிறது
ஜன்னலில் மரக்கிளை
"எழும்பு; எழும்பு; இவை இவை உன் பங்கு."
காதை அழுத்திப் பொத்திக்கொண்டு மரவட்டை முடக்கம் சிறுக்கும் உடலெனதாகும்
சொடுக்கின சாட்டை நகநுனியிற் தெறித்தாற்போல் இன்னும் இழுத்து அடிக்கிறது காற்றூதல்


மழை துன்பம்; மழை இன்பம்; மழை அழுகை; ஆனந்தம் மழைநிலமே.
காற்றும் மழையும் கடுங்காதலும் துன்பமும்; காற்றும் மழையும் பேரின்பமும் வன்மமும்.
இடுங்கிச் சரிவன என் உடல் அவயவம்; உலர்ந்து வரள்வது உள்ளே வாழ்சூழல்.
காவிச் செல்வது காற்று; அகல்பாதத்தால் காலத்தை உதைத்தென்னைக் கைதூக்கி
முன்னிலைக்குக் காவிச் செல்வது இராக்காற்று; கூடச் சிலிர்த்தழ கொடுமழை.
நாளை அழிந்த போன பொழுதுகளிலே துள்ளலும் துவளலுமாய்ப் போர்வைக்குள்
காவிச் சென்றதெனைக் காற்று; காதிற் கூவி ஓலமிட்டுப் பாதை அடி பார்த்துப் பதுங்கிப் பி
ன்வந்தது ஓயாமழை.


தேகம் திமிறி அழ அழப் பார்க்கின்றேன் அழிந்த நிலங்களை; குலுங்கி அற அறக் கி
ளைக்கும் அவலத்துரூபங்கள்.
மஞ்சட்களை முளைத்த கறைத்தரையெல்லாம் புதைந்த நாட்கள் வாசம் பொசியும் மெல்ல
மெல்ல நுனிநாசிக்குள்;
நாட்களுட் தூங்கும் நானிழந்த பேர்கள். அறிந்த முகங்கள் அரைகுறையாய் பிளந்து வரும்
தரை; தோல் முடிந்த வடு பிரிந்து வடியும் நிணம்.
வேரும் விழுதும் பின்னி சாரையும் நாகமும் மூசிமூசிப் புணரும் சத்தமோ எச்சமாய்க்
கொக்கியதென் செவிக்குள்?
காற்றின் மழையின் கத்தும் கூத்து; "கவனி கவனி; இது வாழ்ந்துற்ற அவனி"
சோர நனைந்ததில் சேர நடுங்குவேன் தேகம்; காலம் குழப்பி நூற்போர்வையும் அதிரும்;
மெல்லிய ஜன்னலை இன்னும் மின்னல் அதட்டும்; வன்முறை, வன்முறை;
கத்தவுமொண்ணாப் படங்கு மடங்கியடிக்கும் தன் மார்
கண்ணோளி பறிக்கக் கண்ணாடி ஜொலிக்கும். பின்னால், இருள்வான் மயங்க, வேலிப்
பல்லியாய் ஓடும் மின்னல்தன் முதுகெலும்பு.
இன்னும் மூடுவேன் என் மெல்லிய போர்வை; இரு கை சோரவும் இடிகூடி
முழக்கும்; "உன்னுலகிங்கில்லை; அங்கே, அங்கேதான்."


இந்நிலை அந்நிலை எந்நிலை அறியேன்; எல்லாமே கூழாய்க் கொட்டித் தொங்கும் என்
தலை சுற்றச் சுழல சுற்றும்முற்றும்.
கள்ள மழை அள்ளிச் செட்டை தொடர அடிக்கும்; சட்டச்சடசட சட்டச்சடசட; பொன் மி
ன்னி தும்மிச் சிதறி வெடிக்கும் செல்லிடத்தெல்லாம் இடி;
ஜன்னல் மீள நடுக்கும்; கத்தும் இன்னும் கடற்காற்று; "வா, வா; உன்னை அள்ளிப்
போக வந்தேன். உயிரோ உடலோ உனதெல்லாம் எனதாம்."
இன்னும் நான் நினைவின்றி நிலைமாறி நனைய நனைய நடப்பேன்; நாளும் புலமும் நசி
ந்த வசமாய்;
நானறியா வெளியன்றில் மிதந்து தாழ்ந்து; நானறியா வெளி என்றேனா? நானறியேன்.
நனைய நனைய நடந்தேனா? நானறியேன்; அறியேன் நான்.


காற்று வந்தின்னும் "வா, போ" என்றதட்டும் என் காதை; பெரும் வாதை.
போர்வைக்குள் முடக்கவும் மூலையின்றி காலிழுத்துத் துடிக்கும் அட்டை.

6/17/2003

அநாமதேய அமெரிக்க விமானநிலையம்...

நேற்றிரவே மூசி மூசி
இருட்டு மூக்கு மூலைக்குள்ளும் முடிதேடி, முளை பிடுங்கி
ஆழ மழித்துப்போட்டேன் நான் நாலு நாள் நாற்றுத்தாடி.
விரல் மேவி வீரம் பேசாமல் கை நகங்கூட முழு
வீச்சாய் வெட்டிச்சாய்த்துச் சரி பார்த்தேன் சில நாழி,
உன்னைக் கேட்டு, பின்னால் அவளைக் கேட்டு.
கைச்சின்னப்பைக்குட் சதத்துச்சீப்புக்குக்கூட,
கொன்னைப்பற்கொடுக்கு
படக்கென்று முறித்துப் போட்டேனென்றால்,
பார்.


மொத்தமாய்ப் பார்த்தாற்கூட
பத்துக் கிலோத்தான் பொதிப்பாரம்.
புடைத்த சட்டைப்பைக்குள்
உடல் தடித்துக் கடவுச்சீட்டு,
சிறிதும் பெரிதுமாய்ச் செறியச் சொருகி
உறுப்பாய், ஊரலும் மரத்த அடையாளவட்டை.


இப்படியாய்,
என்னைப் பொறுத்தவரை
எல்லாமே தம்மளவில்
இயல்பாய்த்தான் இருந்தனவாம்
- எண்ண மறந்த என் முகவெட்டைக் கண்ணில்
சந்தேகக்கண்ணி சடைத்தார் காணும்வரை.

6/19/2003

Wednesday, January 19, 2005

சிட்டுக்குருவியாய் விட்டு விடுதலித்தல்

பலகணி திறக்கப் பரந்த பெரும்வெளி
புல்லும் புதரும் முள்தரித்த நிலமுடியும்


நடந்தனன் நடந்தனன் நாழி உருக,
துடிநாடி யடுங்கித் துவளவுங்கூடக்
கடந்தனன் கடந்தனன்
பாழியும் திட்டும் மேவிப் பாவி
நடந்தனன் கடந்தனன்
விரிந்த மலைநிலம்


ஏகனாய்,
போகுமிடத்துப் பாதச்சுவடு
காயும் அழியும் கதையுணராது
உடை கணம் ஒருக்க நினையா
துள்ளே புதிதறிவதாய்
நனைந்து முனைந்து
நடந்தனன் நெடுவழி.


பெருவிரலழுத்த
காலத்தொடிவு.


பொடி;
பொடி

~Wed Jun 11, 2003 4:55 pm