அலைஞனின் அலைகள்: கணம்

Tuesday, January 25, 2022

பாயம்

 

பாயமாய்ப் பிறந்ததுக்கு 

உயிருண்டு; நிறமுண்டு; ஓடுதலுண்டு!

ஆயினும், அதன்

வடிவெதென்பாய்? பெயரெதென்பாய்?


மொழி! பால்! நிறம்! இனம்!

நாடு! நிலை! குடி! வழி! மதம்!

எனக்கான அடையாளம் தருகின்ற நீ

நானே இடுவதையோ கிழிக்கின்றாய் கழிவாய்.

பேச்சில்! எழுத்தில்! குறிப்பில்!

கணக்கில்! கருத்தில்! பதிவில்!


நிலையடங்காச்சொல்

உருவிலிப் பாயம் நான்!

பாய்வேன்! விரிவேன்!

பறந்து சடம் மேவுவேன்! மேய்வேன்!

தேய, ஒருங்கி ஒடுங்குவேன்!

ஓரிடம் ஓய்வேன், ஒரு பொழுது!

அமையம் கொள்ளியங்கு

இயற்கைவிதி ஒன்றே

என் கடிவாளம்!


காதுப்படிமங்களாலாகா 

முகமறையுரை என்னுரு!


வெப்பதட்பவமுக்கத்து

வாயுவும் திரவமுமாய் 

காலவெளியலையும் பாயம்

உள்வெளிக்காயங்கொள்ளாதது! 


பொருத்திப்பார் பெயர்

கிழித்துப்போடுவேன் உன்

நொய்போர்வை!


01/25/2022 பு. 03:53 கிநிநே.


Sunday, January 23, 2022

தவிர்த்தல்

என் அப்பா

என் அண்ணா

என் காதலர்

என் கணவர் 

என் தம்பி

என் மகன்

என் தோழன்

தவிர்த்து மிகுதி அத்தனை பேரையும் 

சுட்டுத்தள்ளிவிடலாம்.


பொது என்பதும் தனிப்பட்டது.


01/22/22 ச. 08:55 கிநிநே


தேசக்கொடியோர் துணிவார்

எந்தவொரு தேசக்கொடிக்குமான செயற்பாடு இரண்டு! 

ஒன்றில், பறப்பது

அன்றில், போர்ப்பது


பறப்பது சுலபம்;

உச்சம்; பாதி; தலைகீழ்!

வெற்றி; துக்கம்; வழியின்மை!


போர்ப்பதென்பது மறைப்பது!

மானத்தை, சிலவேளைகளில்

அவமானத்தை, பிற வேலைகளில்!


கொடியின் பேரால் 

கொன்றதைப் போர்த்தலும் கொல்பவர் போர்த்தலும்

கொலைகளைக் காப்பதும் கொடியவர் மறைப்பதும்

கொல்லுண்டார் பிள்ளைகள் கொன்றார்க்காய்க்

காப்பதும் போர்த்தலும் மறைப்பதும் துவைப்பதும்

கசட்டுக்கொடி! மறக்காமல் கசங்கு அசிங்கக்கொடி!


கொல்லுண்டார் குழந்தைகள் கொன்றார் பேரில்

சுற்றிப் போர்க்கையில் மட்டும் கவனியுங்கள்

உற்றுப் பின்முதுகு ஊற்று! வென்றார்

போர்க்கைகொண்டு குத்திய பெற்றோர் 

குருதிச்சொட்டெங்கேனும் தெரியலாம்

தெறித்துக் கறை கொப்பளித்து!


தீந்தைகளும் தீட்டுதலும் வேறானாலும்

வீசு வீசக்கொடி நெய்த துணி

அடியோடும் நூல் எல்லாம் ஒன்றுதான்.

தேசத்தந்தையர் தனையர் தொங்கு

அரை இலங்கோடு இழைத்த தறி

மிச்சத்தில் முளைத்த துணி பொது

மக்கள் போர்க்கும் கனக்கொடி!


பறப்பதைப் போர்க்கும்போது

போர்ப்பது பறக்கிறது

பட்டப்பகலில்

வெட்டவெளியில் ஒரு

உள்ளங்கைபொத்தியிருந்த

சிட்டுக்குருவிபோல!


01/20/2022 வி. 06:40 கிநிநே.


சொல்லில்லாமல்...

 

பிரிதலின் கதையை வாரிப் பிறர் எழுதும்போதும்

சேர்தலின் கவிதையை ஆழ மௌனம் பேசுகிறது.


வாழ்தலின் உன்னதமென்பது பிற

சொல் ஒன்றும் இல்லாதிருப்பது;

காதல் என்பது –விடு-

எதுவுமாயிருந்துவிட்டுப்போகட்டும்!


01/19/22 பு. 06:30 கிநிநே


Thursday, January 13, 2022

மாமுனியின் மௌனம் (அத்துடன் என் அதிகப்பிரசங்கித்தனமும்)

 தாகம் 1993





1992 May 31, Sundar 23:28 இலங்கை நேரம்
தாகம் 1993 மாசி சஞ்சிகையில் (நன்றி: மைக்கல் கொலின்)

Tuesday, January 11, 2022

பிளெமிங் விதி

சுட்டுவிரல் உள்ளவரை

கோனே குறி!

கோலே குறி!

 

இச்சகத்தே

இது காண் விதி!

மிச்சப்படி,

எம் செயலேதுமில்லை;

பேசிய பின் எழுந்து

பெரிசோ சிறிசோ,

பிருஷ்ட மண்ணைத் தட்டிப்போவோம்

வா!

 

அகிலம் நீர்க்க,

நீக்கமற நிறைந்திருக்கட்டும்

நீக்க அரசியல்!

01/11/2022 செ 13:45 கிநிநே


Monday, January 10, 2022

வேட்டிநாள்

 வேட்டியின் விலையிலே ஒரு 

வெங்காயம் விற்குதென்றால்,

வெங்காய தினமென்று கொண்டாடு!

விருப்பமில்லையென்றால், வெறும்

(இ)லங்கோடு தினமென்று நின்றாடு!

போ,

கோவணதாரி

கொட்ட 

பாய!


01/06/2022 வி 04:07 உலகவேட்டிதினம் 


Saturday, January 01, 2022

சுற்றுவடப்பூனை

 

அழுக்குமூட்டையை

நாள் சுமப்பதா நான் சுமப்பதா

என்பதில் கடந்தது நாள்.

உடற்சூட்டுள் கோதி

கோலி உள்ளுறங்கும்

ஒரு கால் சுற்றுவடப்பூனை,

சுமை!

 

கலைத்துவிடு!

 

உப்புக்காற்றில்

கடல் விசிறி

முற்றி எறியட்டும்

முழுநிலவு!

 

01/01/22 ச 19:07 கிநிநே

பரஸ்பரம் பல்லக்குத்தூக்கிகள்

 பரஸ்பரம் பல்லக்குத்தூக்கிகள் – இன்றும்

இடம் வலம் போகக் கண்டேன்.


புஜமல்லர்!

புகழ்பாணர்!

புகழ்ப்பாணருங்கூட!


ஏற்றுவார் இறக்குவார்

இறக்குவார் ஏறுவார்

ஏறுவார் இறங்குவார்

இறங்குவார் ஏற்றுவார்


செல்ல, சேவிக்க, திருத்தலம் ஏதுமில்லை – சுமைப்

பல்லக்கே பெருங்கோவில்; ஒய்யார மென்

யாத்திரையே யவர் உள்நோக்கு, காண்!

இன்று அவர் சாமி! இவர் தூக்கி! சரணம்!

கரணம்!

நாளை இவர் சாமி! அவர் தூக்கி! சரணம்!


நானோ கள்வன்!

நாவறுக்க இடைமறித்தேன் 

நடைத்தடத்து நடு!


“ஊபர் காலத்தே பல்லக்குத்

தூக்குவார் உண்டோ?” என்றார்

நா காணேன் நான்

தோள் கண்டேன்!

தோளே கண்டேன்!

 

பரஸ்பரம் 

பல்லக்குத்தூக்குவதும்

நிதம் பழகும் வழிப்

பண்டைய பழகுகலை!


12/30/2021 வி 15:00 கிநிநே


விடுமுறை

 தொலைக்காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன

கதாநாயகிகள் அழுதுகொண்டேயிருக்கின்றார்கள்

கதாநாயகர்கள் அடித்துக்கொண்டேயிருக்கின்றார்கள்

அலைபேசிகள் அலறிக்கொண்டேயிருக்கின்றன

நாய்கள் எசமானருடன் நடைபோய், வந்துகொண்டேயிருக்கின்றன

சோர மழை வெயிலுடன் பங்கு சேர்ந்து பெய்துகொண்டேயிருக்கிறது

அடுப்பு நெருப்பாய் உலை எரிந்துகொண்டேயிருக்கின்றது;

 குளிப்பறை நீர் கொழகொழத்துக்கொண்டேயிருக்கின்றது;

செலவு வாரிச் சொரிந்து கொண்டேயிருக்கின்றது; 

கடனட்டை காலெம்பிச் சென்றுகொண்டேயிருக்கின்றது

நீ மட்டும் சளைக்காமல்,

இஃது ஓய்ந்திருக்கும் விடுமுறை என்கிறாய்


 12/28/2021 செ 05:00 கிநிநே


விரைவு!

 ஒளிவெள்ளத்தே புனலாடு இலை

இலையுள்ளத்தே ஊடாடு ஒளி

ஒளியால் இலையம்

இலையால் ஒளிர்வு

சடம் இயங்கச் சக்தி

சக்தி விளங்கச் சடம்

சடமாகும் சக்தி

சக்தியாகும் சடம்


வெளிச்சம் பொதிவு!

வண்ணம் மிகுது!

வாழ்வு இனிது!


விரிந்து பரவட்டும்

வெளிச்சம்! 

மிளிர நிறம்

ஒளிரட்டும் இலை!


வெளிக்கட்டும்

விரவி!


விரைவு!

12/26/2021 ஞா 17:03 கிநிநே


பக்குவம்

சலனமறு பகலின் பச்சிலைகள் 

எதைப் பேசக்கூடும்?

புழுப்பூராப் பழுப்பேறல்

பச்சயத்து முழுப்பக்குவம்

என்பது பற்றியுமாகலாம்.


12/25/2021 ச 01:35 கிநிநே


காற்றே கோ!

 காற்றின் திசையோடு

விரைகிறது புள்;

சுருள்கிறது புல்;

பறக்கிறது கொடி;

மிதக்கிறது படகு.


காற்று நன்மை!

காற்று கருணை!

காற்றாகும் காப்பு!


மாற்றாய், எகிறி

எதிரான முகத்தில்

அறைவதும் காற்று.


காற்று வன்மை!

காற்று வெம்மை!

காற்றானது துன்பம்!


காற்று,

அறியும் திசை

- தனது | பிறிது


காற்றுக்குமுண்டு

காண்கோணம்!

தற்சாய்வு!


காற்று கோன்!

காற்றே கோ!

காற்றே கு!


12/24/2021 வெ 00:29 கிநிநே


நடு என்பது கல்

 மையம், விட்டம், பரிதி கட்டமைந்த வட்டமொன்றை 

எங்கிருந்து வரையறுக்கத்தொடங்குவதாம்?


நடு என்பது கல்;

விளிம்பெல்லை,

உளவிரிவு; இடை

கூவுவது ஏதொரு 

அதிர்நாண்.


இருக்கட்டுமே! ஆனால்,

நட்ட மையத்துக்கும் சுற்று பரிதிக்குமிடை 

ஒரு தட்டைவட்டத்தை ஒட்ட

வரையறுக்கமுடியாப்போதில், உருள்

முப்பரிமாண முட்டையை

எப்படி முடிச்சவிழ்ப்பதாம்?


வரைவான் வரையறுக்க 

வல்லமையற்ற வட்டமொன்று

தன்னைத்தானே அமைய 

மீள்வரையும்.


முட்டை! ஓமோம்!

வெண்முட்டை, 

செம்மஞ்சட்பரிதிக்

கருவை சிதற உடைத்துக்கொள்ளட்டும்

சளி கோது சொட்டச்சொட்ட!


வரையறுப்புக்கு மேலான

வழி,

வரையழிப்பு!


அழிப்பும் 

ஆகவொரு

வெட்டவெளி வானுக்கான 

விடுதலைதான்!


12/17/21 வெ 21:!2 கிநிநே


வெற்றுப்பவிசு

 

உரசிக்கொள்ள

நேரம் அகப்படாப்பொழுதில்

இருண்ட அறையில்

ஈரம் வரண்டு

அலையும் காற்று,

காதல்!

 

தும்பிக்கை பிணைந்து

நேர்பொருதி, நெற்றி

நெரிய மோதும்

யானைகள் பிளிறல்,

காதல்!

 

காதல் என்பது ஈரம்!

காதல் என்பது பிளிறல்!

 

மீதியெல்லாம்,

பாதிக்கண்மூடிப் பதுங்கித்தூங்கும்

பகட்டுப்பூனைகள்தம் வெற்றுப்பவிசு!

 

12/15/'21 பு 23:54 கிநிநே.