அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, August 08, 2021

தலைப்பு கெடுதலாகும்

 ஒரு நல்ல கவிதைக்கு என்ன வேண்டுமென்றால்,

எழுதுகிறவனுக்கு,

தான் கவிஞன் என்று தெரியாதிருக்கவேண்டுமென்பேன்.

மூலைச்சுவருக்குட் பாதவிரல் கீறச்

சீறும் பூனைக்குத் தெரியாது

தானொரு புரட்சியாளனென்று.



ஜூலை 9, 2021 11;09 கிநிநே


கொடுத்தல் வாங்கல்

 கொடுப்பதற்கு வாங்கவேண்டும்.

கொடுப்பதற்கே வாங்கவேண்டும்.

வாங்குதலும் ஒளி! கொடுப்பதும் ஒளி!

வாங்குவதற்குக் கொடுப்பினை வேண்டும்.

கொடுத்தல்தன் கூறு  வலி! குறையில்லை;

கொடுத்தல் வாங்கலுக்கே!

கொடுப்பார் குறைவிலர்! பெற்றார் தகவிலர்!

ஒளி பரவட்டும்! கொடுக்கல் வாங்கலும் கூடவே!


05/24/2020


இழவுக்கவிதை

 ஒரு இழவுக்கவிதையை யாரும் எழுதலாம்.

அது கவிதைக்கான சின்னப்

பொத்தற்சட்டையைப் 

போட்டிருக்கிறதா என்பதுகூட முக்கியமில்லை.

நன்கு கவனி

இங்கே!

யாருடைய துண்டுக்கவிதையும் எவருடைய துகட்கவிதைக்குள்ளும் கட்டெறும்பு விடக்கூடாது!

அடுத்தார் சொற்புலங்களிலே பைய ஊரும் எந்திரக்கவிதையின் கேவலத்தை எப்பட்டுச்சட்டையையும் மறைக்கப்போவதில்லை!

சொல்லப்போனால், ஒரு பொது இழவுக்கவிதைக்குச் சொல் முக்கியமில்லை; 

சொல்வார்கூட.

சொல்லப்பட்டவரிலும் சொல்தருணத்திலும் மட்டும்

ஒரு நற்கவிதை 

இளங்கிளுவங்கதியாலாய்

தன் நிலைக்கால்களை ஊன்றிப் பூத்திருக்கின்றது.



கவிதை என்றால், 

கவிதையல்லாததுவுமேதான்



வடிவமற்றது

இழவு!



05/17/2020 ஞா 07:46 கிநிநே


செங்கொடி

 செங்காவலர் தலைவர்

யேசுநாதர் என்பார் ஏஜே!

செங்கொடிதான் யேசுநாதர்!

எல்லோருக்குமாய் ஒரு

தீச்சிலுவை எரிந்தாள்.

தரிக்காத காவலின்

இருக்காத தலைமை

எவருக்கு வேண்டும்?

05/17/2020 10:17 கிநிநே


ஒல்லி ராஜா

 கறங்கு மையத்திலிருக்கின்றார் ஒல்லி ராஜா.

வட்டத்துப்பரிதியில் சுற்றிப் பருத்த கூத்தாடி

அசையாமையத்து உச்சப்புள்ளி ராஜாவுக்கு

பரிதிப்பள்ளத்துச் சுற்றாட்டம் வெள்ளெழுத்து


மையத்து ராஜாவின் தன் முன்மையவாதம் 

வலித்து இழுத்துக்கொண்ட ஒரு பக்கவாதம். 


5/13/2020 புதன் 22:43 கிநிநே