அலைஞனின் அலைகள்: கணம்

Tuesday, October 25, 2005

உதிர்



ஒவ்வொருவரிடமும் இன்னொருவர்
எதையேனும் எதிர்பார்க்கின்றார்.
மண்ணிடம் மரத்தை
மரத்திடம் கிளையை
கிளையிடம் இலையை

இலையிடம் நீ
எதை எதிர்பார்ப்பாய்?

எவரும் கேட்க முன்,
இலையிடம் சொல்லாம்:
"எதையும் சொல்லாமல்
உதிர்ந்து
விடியமுன்
மண்ணிடம் போ."

'05, ஒக்., 25 செவ். 14:33 கிநிநே.

Saturday, October 22, 2005

கண்நகரம்

'05, செப்., 19 திங் 18:05 கிநிநே.


நகரத்தில்
கண்களை அணிந்துகொண்டவர்களின்
நெளிபாம்புத்தெரு முளைத்தது தனியாய்.

ஒற்றைப்பாவனைத் தொடுவில்லை போல்
கண்கள் எடுத்துப் பொருத்தி நடந்தது தெரு.

அணிந்த கண்களுக்கு அணிந்துரைக்கண்கள்
அடுத்து முளைத்த தெருவில் கிடைத்தன.

கண்களுக்குக் கருத்து எதிர்த்து(ம்) முளைக்க
இன்னொரு தெரு கிளைத்து முளைத்தது;
சின்னச்சீசாவில் சொல், நீர், சுரணை
- வியாபித்துச் சூடு பிடித்தது வியாபாரம்; விழி.

அணிந்த கண்களை அவிக்கத்
தேவை பிறக்காதாவென்றால்,
அதுவும் தொடர்ந்தது; அப்பால்
தழைத்தது அவிகரணர் தெரு.

அவித்த கண்கள் -> அழிந்த கண்கள் ->
அவிழ்த்த கண்கள் -> கழித்த கண்கள்
கழித்ததைக் கிளற முளைத்த சிறுவர்
பொம்மைக்குப் பொருந்தப் பொறுக்கின
கண்களால் பிறந்துழன்றன இரண்டு
பிள்ளைத்தெரு, பொம்மைத்தெரு.

பொறுக்கலின்பின் பொருந்தலின் பின்
இழிந்தவை குவித்து எரிக்கப் புகுந்தார்
இருந்திடத் தெருவொன்று இறங்கிட நகரினில்...

.....கண்களால் தின்றார்;
........கண்களால் கேட்டார்;
...........கண்களால் தொட்டார்;
.................கண்களால் நுகர்ந்தார்.

.................கண்களை நுகர்ந்தார்;
...........கண்களைத் தொட்டார்;
........கண்களைக் கேட்டார்;
.....கண்களைத் தின்றார்.

இந்திரன் தோல், தெரு சமைத்த மாபூஸ் நகரில்
பாகர்கொல் மதயானை கால் தழுவித்தடவி
அலைந்து திரிவர் கண்ணணி அலங்காரிகள்.


'05, ஒக்., 22 சனி 17:50 கிநிநே.