அலைஞனின் அலைகள்: கணம்

Monday, November 25, 2024

May Flower & Thanksgiving


வைகாசிப் பூ மலரும் வசந்தம் ஒரு காலை வரும்!

வாழ்ந்திருக்கும் பொழுதினிலே வாயாரச் சொல்லிடுவோம்!

நாம் வாழ்தலுக்காய் வீழ்ந்தவரே! வணங்கி உமை…

நன்றி! நன்றி!


நீர்த்தார்க்கும் நெஞ்சு தளதளக்க நிறைந்தார்க்கும்

காத்தார்க்கும் காவற் றெய்வங்களாய்ப் பூத்தார்க்கும்..

நன்றி! நன்றி!

 

மீட்டார்க்கும் மீள அறிதுயில் தாம் காண,

நாம் பார்த்தார்க்கும் நோக்காத்து நம்..

நன்றி! நன்றி!

 

மாண்டார்க்கு, மாள்தலின்கண் வரி பூண்டார்க்கு,

நாம் வாழ்தலின் நிலை ஆண்டார்க்கு..

நன்றி! நன்றி!

 

பெற்றாரை, எமைச் சூழ்ந்திருந்த எம் உற்றாரை,

எமைக் காத்து உயிர் விட்டாரை நினைந்துருகி..

நன்றி! நன்றி!

 

சான்றோரை, அவர்தம்மை ஈன்றோரை,

எம் மனை விளங்க வாழ்ந்தோரை எண்ணியெண்ணி..

நன்றி! நன்றி!

 

உயிர் வளி தின்ன, உடல் மண் உண்ண, உற்றதற்காய்

மறைந்தோரே உணர்வுடனே எம்முடனே கலந்தோரே..

நன்றி! நன்றி!

 

எரி தேசம் நாமகன்று, எறி தேசம் தாம் விழுந்து,

எண்ணில்லா அவத்தையிலும் எம்மினிலே நிறைந்தவரே..

நன்றி! நன்றி!

 

ஊனது புண் தின்ன, உயிரது போர் உண்ண,

நாளெல்லாம் மண்ணெனவே நாட்டமது கொண்டவரே..

நன்றி! நன்றி!

 

காற்றின் மிசை கொள்விசையாவீர்! கடலின் அலை மிகு நுரையாவீர்!

ஆற்றின் வழிச் செல்சுழியாவீர்! அங்கெங்கினா தகல நிறைந்தோரே..

நன்றி! நன்றி!

 

பாட்டின் பொருள் நீரென்போம்! பரத ஜதி நீரென்போம்!

சேற்றின் மொழி நீரென்போம்! செல்லு வழி தானெம்போம்!..

நன்றி! நன்றி!

 

பாடும் மீன் இசையென்போம்! பாலாவி ஆழ் முத்தென்போம்!

பனை விளை  பாலென்போம்! குன்று முடிச் சுடரென்போம்!

நன்றி! நன்றி!

 

கண்ணுள் மணியென்போம்! ககனப்பறவைதன் விரைவென்போம்!

புல்வெளியின் துமியென்போம்! பூத்தமலர் புதுமணமென்போம்!..

நன்றி! நன்றி!

 

எம்மில் நிறைந்தோரே! எங்கும் நிறைந்தோரே!

இச்சகத்தைத் துச்சமதாய் எண்ணிக் கரைந்தோரே! எண்ணியுமை…

நன்றி! நன்றி!

 

எப்பாலோ! எம்மதமோ! எவ்விடமோ! எம்முனையோ!

இப்பால் எம் கழிமுகத்தே, சேர்ந்திருக்கக் கண்டோமே!..

நன்றி! நன்றி!

 

குருத்தோலை நாட்டிவைப்போம்! கொள்திரியொன்று ஏற்றி வைப்போம்!

கருத்தேதும் பிசகாது, கண்மணிகாள் கவனம் கொண்டிருப்போம்!..

நன்றி! நன்றி!

 

கார்படிந்த மேகங்கள் கவிந்தாலும் வான்மீது வேல்

கார்த்திகையான் விளக்கீடு கலங்கரையாய் ஒளிவிளக்கும்!..

நன்றி! நன்றி!

 

தேசத்தை நினைந்தோர்க்கு நித்தம் நித்தம் மெத்த நேசம்!

நினைவுகளைச் சுமர்ந்தோர்க்கும் நெஞ்சினிலே நினைந்த நேசம்!..

நன்றி! நன்றி!

 

எரிந்தணைந்த கதிரும் அரிந்துண்ட கதிருக்கும்

வாழ்ந்திருப்போர் உணர்வதனால் வாயுரைப்போம்!..

நன்றி! நன்றி!

 

காற்றின் திசை மாறினாலும் மீகாமர் புதுக்கத் தோன்றினாலும்

செல் திசைகாட்டியென்றும் அவ்வாதவனே! கலம் செல்வோம்..

நன்றி! நன்றி!

 

காற்றாகிக் கூற்றாகி, கடல் ஒலிக்கும் பாட்டாகி

மாற்றாய் மின்மலருடுப்பூவாகி பூத்திருப்பீர் எம்மனத்தே..

நன்றி! நன்றி!

 

வைகாசிப் பூ மலரும் வசந்தம் ஒரு காலை வரும்!

வாழ்ந்திருக்கும் பொழுதினிலே வாயாரச் சொல்லிடுவோம்!

நாம் வாழ்தலுக்காய் வீழ்ந்தவரே! வணங்கி உமை…

நன்றி! நன்றி!


Saturday, November 23, 2024

சூட்டுப்பூச்சி


 

ஒரு பனங்குட்டானில் அதுங்கிக் குளிர்தேசம் வந்த சூட்டுப்பூச்சி நான்

சிறு பழங்குட்டானில் பதுங்கிக் குளிர்தேசம் வந்த கூட்டுப்பூச்சி தான்

தைக்கூதற் போதிலே விளக்கணைத்தார்!
கைகூடற் போதிலே தவிக்கவிட்டார்!
கூட்டுப்பூச்சி! ஒரு சூட்டுப்பூச்சி!
அனல் சுரக்காத் தேசத்திலே,
உயிர் தரிக்காச் சிறுகாற்பூச்சி!

ஒரு பனங்குட்டானில் அதுங்கிக் குளிர்தேசம் வந்த சூட்டுப்பூச்சி நான்
சிறு பழங்குட்டானில் பதுங்கிக் குளிர்தேசம் வந்த கூட்டுப்பூச்சி தான்

சுடரிழந்தது திரி! சூடிழந்தது சூள்!
பேச்சிழந்தது பெயர்! மூச்சிழந்தது பூச்சி!
கூதற் போதிலே எரி விளக்கணைத்தார்!
சூடு தேடலிலே உடல் தவிக்கவிட்டார்!
கூட்டுப்பூச்சி! ஒரு சூட்டுப்பூச்சி!
அனல் சுரக்காத் தேசத்திலே,
உயிர் தரிக்காச் சிறுகாற்பூச்சி!

ஒரு பனங்குட்டானில் அதுங்கிக் குளிர்தேசம் வந்த சூட்டுப்பூச்சி நான்
சிறு பழங்குட்டானில் பதுங்கிக் குளிர்தேசம் வந்த கூட்டுப்பூச்சி தான்

குளிர் தின்னச் சொன்னார் பூச்சி
புலியைப் புல் உண்ணச் சொன்னார்போல்,
குளிர் தின்னச் சொன்னால் சுடு
பூச்சி என்ன செய்யும்?
என்னே… செய்யும்?
பூச்சியைப் போக்கு மாற்றென்று
சொன்னார் புகழ்ந்தால் குளிர்,
பூச்சி போரின்றி, தன்
நாள் பொருதலின்றி, வீணே
வாழ்ந்து மடியுமோ?
வீழ்ந்து முடியுமோ?
கூட்டுப்பூச்சி! ஒரு சூட்டுப்பூச்சி!
அனல் சுரக்காத் தேசத்திலே,
உயிர் தரிக்காச் சிறுகாற்பூச்சி!

ஒரு பனங்குட்டானில் அதுங்கிக் குளிர்தேசம் வந்த சூட்டுப்பூச்சி நான்
சிறு பழங்குட்டானில் பதுங்கிக் குளிர்தேசம் வந்த கூட்டுப்பூச்சி தான்
11/23/2024

Tuesday, November 19, 2024

வாழ்வறைக்காலச்சுவர்

 



சட்டகத்துட் சிறுசதுரமிட்டு
கட்டமிட்டு வாழ்ந்த காலம்
வட்டத்துள் நாள் பொருந்தி
சுவர் முட்ட உறைந்த நேரம்
உயிர்த்துளி சுவறிச் சொட்டப்
பொழுதுடன் போன பழமை
வாழ்வறைதன் சுவரைப்போல்
கழன்றுபோன கண்ட பொருள்
பாவனை போய் பார்பவிசுக்காய்
மீந்திருந்த பழம்பொருட்பெருமை
வாழ்ந்திருந்தோம் நாம் வளி மூசி
வீற்றிருந்த எந்தையும் போயினன்
ஈந்திருந்த எந்தாயும் போயினள்
எஞ்சிய மட்கலவாழ்வு வெறும்
காலம் துஞ்சாக் கடிகார முள்,
கண்டம் பொறுத்துக் களம்
உள் விழுங்கவும் பொறாது
வெளித் துப்பவும் தப்பாது
தொங்கித் தங்கித் துருத்தியது
நடுச்சாம அலர்துடிநெஞ்சமும்,
நிச்சலன அறைநெடுஞ்சுவரும்!
காலம் வெறும் காய்சருகோசை!
காலன் வரும் காலடியோசை!
11/19/2024


Monday, November 18, 2024

எமக்கொரு வீடிருந்தது


 





ஊரில் எமக்கொரு வீடிருந்தது
அதைச் சூழ நிறப்பூவிருந்தது
பூவுக்கொரு மணமிருந்தது
மணத்துள் எம் மனமிருந்தது.
மனத்துள் ஊர் மலர்ந்திருந்தது
மலர்வில் வீடு மணந்திருந்தது
மணம் நிறைய நாமிருந்தோம்
நாமிருந்த கதை ஊரறியும்
ஊர் தறை நாமிழந்தோம்
தறையின் பூவும் தாமிழந்தோம்
நாரழிந்த பூவினிலே 
நறுமணத்தின் வேரிழந்தோம்
வேரிழந்த போதினிலே 
வேறு நிலம் நாம் நகர்ந்தோம்
நாம் நகர்ந்த போதினிலே 
விழுதுகளில் வாழ்ந்திருந்தோம்
வாழ்ந்திருக்கும் விழுதுகளே
வேர்க்கனவாய் ஊடுருவ
வேரறுந்து விழுதினிடை
வெறுமனவே வாழ்வு செல்லும்
எமக்கொரு நறும்பூ மலர்ந்த
வனம் நிறைந்த வீடிருந்ததோர்
சிறு ஊரிருந்தது ஒரு காலை
11/18/2025

கைப்பைநாய்

மாரித்தாழ்வாரத்துச் சொட்டுமழைத்துமிக்கு
ஒரு சிறுகைப்பையைப்போல் மேவு கூதல்
அனுங்கிப் பதுங்கிக்கொண்ட தவ்வல் நாய்,
உன் மனமும் மண் மணமும்;
நீர் சொட்டுத் தெறிக்கும் 
என் வறள்நிலம்.

ஆட்டம்





சட்டென கைவிட்டுச்செல் எறிபந்துகளாய்ச் 
சுற்றிச் சுழல் வெளி அண்டம் உன் ஆடல்;
மனம் பேரரங்கு - அன்றேல்
மரச் சிறுகுரங்கு;
கறங்கு நீ மேலும்!
களியாட்டம்,
உள்ளும் புறமும்
புரைத்த பெருவெள்ளம்!
உள்ளுதல் என்பதே 
நம் வாழ்வுயர்ச்சி

11/17/2025

Friday, November 08, 2024

வாக்கு




என் பூவை இட்டு வந்தேன்

என்றாலும் கூடை நிரம்பவில்லை

என் குரலை எழுப்பி வந்தேன்

என்றாலும் பாடல் கேட்கவில்லை

என் கோட்டை இழுத்து வந்தேன்

என்றாலும் ஓவியம் முடியவில்லை

இட மறந்த அடுத்தவர் பூக்களும்

இசைக்க மறந்த அடுத்தவர் குரல்களும்

இழுக்க மறந்த அடுத்தவர் கோடுகளும்

இன்னொரு முறைக்கும்

இழுத்து வந்திருக்கின்றன 

எல்லாரிடமும் கறையோடு 

அறையப் பாவச்சிலுவையை!

தூக்கி அறையப்படுவோரே 

அறிவீரா? ஆணிக்குருதியில்

விட்ட கை ஆண்டவரதல்ல!

அறையப்பட்ட நும் கையே!

11/06/2024


 
StatCounter - Free Web Tracker and Counter