படம்: '05 யூன் 02, வியா. 11:36 கிநிநே.
சந்திக்கப்போனேன்; பாதி திறந்து கதவு;
தட்டப் பதிலில்லை; தள்ளித் திறந்தேன்;
அனைத்துமிருந்தது; அவரில்லை.
மேலே நாட்காட்டி; கை கிறுக்கிச்
செயல் சுட்டிக் குறித்த நாளிரண்டு;
தலை தொங்கித் தூங்கிய தொலைபேசி;
காது பொருத்திக் கேட்பானில், கீதம்
-பெண்சன்னக்குரலிற் புரியாத மொழி;
பாதி முடிந்த நீருடன் கோப்பை,
ஆவியுயிர்க்கும்; காற்றிலாடிக்
கலைந்த நீள்நரைமுடிபோல்,
கத்தைத்தாள், கட்டுரை பரவிக்
கிடந்த மேசையில் மீதிக்குத் தூசி
வெளிக்காற்றுக்குத் தவழும்; தாவும்;
தொடர, வளி வரத் திறந்த ஜன்னல்.
கழுத்து முடிச்சுக்காகும் நூலிரண்டு
தூக்கிச் சுருங்கு வெனீஸ்_படங்கு.
ஆள் அகல, வெளித்த கதிரையை
ஆக்கிரமித்தோர் விரிசட்டை; கறுப்பு.
வாய் திறந்த பை வளைந்து; கரி
முறிந்த பென்சில்_குழாய்; மேசை
கீழ் தரை குப்பை; குண்டூசி; கொழுவி;
துளைத்தறுந்த துண்டுத்தாள்; நாள் பல
தோய்க்காத தொப்பி; இணை சேர்ந்து
பிரி பாம்புக்கம்பி; சிவப்பு; சாம்பல்; கறுப்பு.
"நீயே கல்" என்று நாமமிட்ட நூல் மூன்று.
பாம்புத்தோல் தரைவிரிய, பாவும் கண், என்
கால்; காற்சட்டை; மேற்சட்டை; கையிரண்டு
நின்று இன்னும் பார்த்தேன்; நிமிடம்;
ஆள் இல்லை அப்பொழுதும்; அறைக்குள்,
இன்னும் பாவும் மோனம்; அதன்
பின்னும், மேற் பார்த்தேன்.
கணித்திரை காய்ந்திருந்தது
-"எதேச்சை நடை" என்றிருந்த
பகுப்பாய்வு வேதியல்; முட்டி
மோதத்தான் மூலக்கூறாம்.
அவரைக் கண்டேன்;
அப்படியே திரும்பினேன்.
பாதி திறந்த கதவு,
தட்ட, தள்ளச்
சொல் சத்தங்கெட்டுப்
பார்த்திருக்கட்டும்.
போவார், வருவார்;
வருவார், போவார்.
'05 மே, 02 வியா. 12:57 கிநிநே.