அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, February 26, 2005

போலச் செய்யேன்

புள்ளிகள் எனது
கோடுகள் உமது
கோலம் எமது.

அனுபவம் எனதில்
உமது அனுபவம்
எமது அறிதல்.

புதிதுயிர்க்கப் பல
புள்ளி தேடிப் போவேன்;
கொணர்ந்தபின், நீங்கள்
நீட்டலாம், நெளிக்கலாம்
கோடு.

அள்ளி வரும்வரை
புள்ளி,
அண்ணாந்து விண் பார்த்து
கூட்டி மீன் கோர்த்து
கரடி கலப்பை
கற்றிருப்பீராக.

'05 பெப்., 26 சனி 12:15 கிநிநே.

Friday, February 25, 2005

ஒரு நாய்க்கவிதை

நாயைப் பற்றிய கவிதைக்குட்
பாம்புகளும் பைய வரலாம்.

வால் தோன்று வரிகளுக்கு முன்
ஊரலாம் வழுக்கிக்கொண்டு வயிறு.

ஆதிக்கவிநாய் மெல்லத் திரியும்
பாம்பெனத் தோல் பளபளத்து.

கவிக்கணக்கிற்கு, வெறு
வாலால் வனைந்தது இவ்வையகம்.

'05 பெப்., 25 வெள். 07:39 கிநிநே.

Thursday, February 24, 2005

ஒரு புத்தகம் தாருங்கள்

தரவிரும்பினால்,
ஒரு புத்தகம் தாருங்கள்.
தூக்கத்துக்குத் தூக்கிக்கொள்வேன்;
முடிந்தால், துக்கத்திலுங்கூட.

ஒரு புத்தகம்;
எழுதினார் இன்னாரென்றிலாமல்;
எழுதியது இதைத்தான் என்று
இன்னொருத்தர் முன்னிருந்து சொல்லாமல்;
'இட்டார் இவர்; இது பற்றி
எவரெவர் புட்டுப்போட்டார்' என்ற
பெரும்புள்ளிவிபரமேதும் புதைத்திராமல்,
ஒரு சின்னப்புத்தகம்.

அட்டை கிழிந்த, பத்துப்பக்கப்
புத்தகமானாலும் பாவமில்லை;
அப்படியொரு புத்தகம்
அன்புகூரத் தாருங்கள்.

புரட்டிப்புரட்டிப் படித்து முடித்தபின்னும்,
அணைத்துக்கொண்டு தூங்குவேன் அதை;
விடியும் வெளி.

'05, பெப். 24 வியா 12:19 மநிநே.

Wednesday, February 16, 2005

போற்றுவேன் உனை

போற்றுவேன்
எனக்கொரு கவிதை தா;
பச்சைக்குழந்தை வாய்க் கட்டி எச்சிலெனப்
புத்தம்புதிதாக;
அடுத்தாற்போல், அலுத்துப்போய்விட்டதா,
அதனால், மீதி அத்தனை பூச்சொல்லும்
அங்குப் புக்காமற் பார்;
புராதனம்; புனிதம்; புராணம்; புரட்சி;
புணர்ச்சி; புழு; புழை; புடுக்கு.....
முக்கியமாய், அந்தப் பொல்லாஞ் சிறகு விரிக்கும் பொய், புனைவு.
காதலைப் பிடித்துக் கொஞ்சம் கையிற்குட் பொத்திவை;
அது கஷ்டமென்றால், காலுக்குள் மிதித்துப் பார்;
வாலாயப்படலாம்; யார் கண்டார்?
சீனி ஆகாதெனக்கு; ஏறினாற் செத்துப்போவேன்;
கொஞ்சம் காரமாய்ப் பாடு; கவடு விரித்துக் காமம்தான் கிடக்கிறதே.
அது செப்பித் தும்பி பறந்த பொழுது தொலைய
விட்டது பற்றித் தொடர் மீதி.
கொல் போரினையும் பாடு; வேண்டாமெனெனேன்; என்றாலும்,
நீ புரிந்த சமரினைக் கூறு; வேறு மனிதர் வினையைக்
கூறிட் டுனதாய்ச் சூறு கிழியச் சொட்டிச் சொட்டிச் செல்லாதே வழி.
அத்தனையேன்?
அகமென்றும் புறமென்றும் அடக்காமல் அகப்பட்டதெல்லாம் கவி சமை.
அவ்வளவுதான் சொல்வேன்.

இனி, எதைப் பற்றிப் பாடவென்று என்னைக் கேட்காதே;
வேண்டின், அந்த வெளி வெளிர்நீலக்காற்றாடியைப் பாடு; போ.
உனைப் போற்றுவேன்; இனி நீ என் கவி.

'05 பெப்., 16 புதன் 11:30 கிநிநே.

Monday, February 14, 2005

முறுக்காமற் கிட

போகின்ற பாதையிலே புடுங்கிப்போடுகிறாய் புதர்முள்;
ஒரு சொல் பேசாமற் போகிறேன்; சுற்றி முன் போய், விடாது
போகக்கூடிய வெளிப்புல்லிற்கூட முள்ளைத் தழைக்கிறாய்.

உனக்குத் தெரிந்ததெல்லாம் வகிடெடுத்து வகுத்த தெருவில்,
வரைந்த வயல்வரம்பில், திசை கிடத்திக் கிழித்த நீர் வாய்க்காலில்
தேரும் ஏரும் படகும் ஆள் காட்ட வழி நகர்த்துதல்.

வெளியில் அடுத்தான் விதை கிள்ளி அள்ளிப்போட்டுக்கொண்டு
பெருமரம் முளைப்பார் பாவனையில் முயங்கக் கிடக்கிறது முழுத்தேசமும்.
முழுத்தேசமென்றால், உன் பூச்சித்தேகமும் அடங்கும் பார் அதனுள்ளே.

"எனக்கென்ன? கிடக்கட்டும் விடு" என்றிருக்க நான், சொல்,
தன்பாட்டில் விரல் முடக்கிக் கிடப்பான் குறியை முறுக்குவானேன் நீ?

'05 Feb., 14 04:22 EST

வால்களும் குதிகளும்

குரங்கின் வாலும் நாயின் வாலும்
குழைத்துப் புனைந்ததென் கூர்ப்பு வால்.
எரிகின்ற முனையும் குழைகின்ற திசையும்
எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.

விலங்கும் பூப்பூக்கும் தாவரமும் ஊனுண்ணும்
விந்தைப்பூமியிலே உலவுன்றதென் குதிகள்.
கண்கள் அறுந்த காலக்குமிழிற் கிளர்ந்து
குதித்துக் குதித்துக் குதிர்ந்தெல்லாம் பெருங்குதிகள்.

அடுத்த விலங்கின் ஆதர்சம் காண் கண் துடித்து விளையாது
அந்தக விலங்கின் வால் விரிவின் செவ்வெரிவும் தண்குழைவும்.

ஊன்றிக் குதி நடக்கின்ற நிலம் குறித்து வால் முளைக்கின்ற
குருட்டுவிலங்கொன்றின் நீள்மூக்கிற் துளிர்ப்பது புறப்பார்வை.

விழியறு விந்தைப்பூமிக்குள் வில்லெடுப்பார் வேண்டாதார்.

'05 Feb., 14 03:23 EST

படுக்கவிடுவாயா பாம்பை?

நாட்டுப்பட்டறைக்கு அப்பாலே படர்வது என் தாவரம்;
வைத்திருக்கும் கையுளியால் உனக்குப் பட்டதை, கொத்து, கொந்து;
உன் உளி; உன் வழி; உன் இஷ்டம்; ஆனால்,
விட்டுவிடு படாத அடர்வனத்தை பரந்து படர்ந்திருக்க.
பட்டறை, சிந்தைக்குட்படு செத்த கட்டைச் சிலும்பாச் சிலைக்குதவும்;
எதேச்சை ஒரு சுயேட்சை இலை வெடிக்க என்றேனும் இயலுமா?

உளி செதுக்கிக் காய் காயமரப்பட்டறைக்கப்பாலே
கால் தன்னிச்சைப்படி ஏறிப் படர்வதென் பெருவனம்.

ஓய வனம் படுக்கும் பாம்புவால் மிதிப்பாயா,
இல்லை, பையத் திரும்பி,
பாதம் வந்த திசை நோக்கி மெல்ல நடப்பாயா,
நீ?

'05 Feb., 14 02:54 EST

காற்றின் மொழி

காற்றானபடியாற் கடந்து போகிறேன்;
வேளைகளிற் கலைந்தும்
வேண்டாச்சிகை கலைத்தும்.
பட்டுக்கொள்கின்ற பாவங்கள் குறித்துப்
பக்கவாட்டிற் படர்கின்றவை என் பெயர்கள்:
ஊழி,
உப்பு,
ஊதாரி,
ஊத்தை,
உன்மத்தம்.
போகிற வழிகளிலே புகுகின்ற பெயர்கள்
வளைந்து வால் வழியாக வழிந்தோடுகிறன.

அசைதலால்,
கடிதல் என்பது காற்றுக்குமட்டுமாகி,
அகலொளி குவி மேசையில்
ஆழத்தட்டுவேன் மொழி தனித்து.

'05 Feb., 14 02:11 EST