அலைஞனின் அலைகள்: கணம்

Tuesday, May 31, 2005

அகாலநிலை


படம்: '05 மே 27, வெள். 14:18 கிநிநே.


மாதம் ஆறேழாய்,
ஆளாளுக்கு முடுக்குகிற நேரத்திலே சந்தித்துக்கொண்டிருந்தோம்
- அவஸ்தையை இறக்குமுன்னோ, இறக்கிக்கொண்டோ, பின்னோ.

நீர் பிரிந்தால், ஒரு வரியிற் காலநிலை கதையாகும்;
பிரியாமற் தடங்கின், குழாயின் வேகங்கூடக் குறையாகும்.
கை கழுவி, காற்றில் நானும் கடதாசியில் அவரும் காய,
மீள வரும் காலநிலை மெல்ல எமக்குள்,
குளிராய், சூடாய், காற்றாய்,
நேற்றுக்காய், நாளைக்காய்.

நான் கதவு திறக்க, தட்டு மேலுக்குப் போவார்;
அவர் திறக்கக் கதவு, நான், கீழ்த்தட்டுக்கு.

சென்ற நாளது ஏழாய், என் முடுக்கில்,
நான் போய் வருகிறேன் தனியாய்.

ஆள் பேரைத்தான் விட்டோம்; எண்ணிப்
பேசு எண்ணையேனும் பெற்றிருக்கலாம்
-என் மேலே படுவது கூதலா கொளுத்தலா
என இனி வேறாரைப் போய்க் கேட்பதாம் நான்?

'05 மே, 31 செவ். 17:27 கிநிநே.

Thursday, May 26, 2005

மழைக்காலப்பெருவீதி


படம்: '05 மே 26, வியா. 11:36 கிநிநே.

மழைக்காலப்பெருவீதிகள் என்ன செய்யும்?
எழுதிக் களைத்தெரிந்த எழுத்தாளனைப்போல்,
எண்ணம் மிதக்கத் தூங்கும் இரைமீட்டி.

நிறுத்தின கார்கள் பற்றி நினைக்கும்;
நிமிர்ந்த நெடுவரிக்கட்டடங்கள்
நிலைக்கக் கண் வெறிக்கும்;
நிற்கும் மரம் விதைத்தது, முளைத்தது,
பூத்தது, காய்த்தது, பழுத்தது, பட்டது,
விட்ட விழுது, கொட்டின இலை,
இளமையில் புழு கொத்திச் செத்த முளை
அத்தனையும் அலையும் அதற்குள்;
தார் கொதிக்கத் தகிக்காது
தலை தொலைத்த சூரியனைக்கூட
கார் மேகத்தூடு கண்தேடிக் கலங்கும்.
தனிமை தரை பிளக்கும் வழி.

எப்போதேனும் வருமொரு கார், புகை,
ஆளிரண்டு, அவசர இலைச்சலசலப்பு.
கணமிரண்டு கழியும்; ஒன்று, இரண்டு,
இன்று நிற்க உள்ளக்கனிவிருந்தால்,
மேலோர் அரைக்கணமும் மேவலாம்.
அதன்பின், ஆள் போகும்; கூடக் கார்;
மெல்ல, மீளத் தொடங்கும் இரைமீட்பு.

காலம் காரென்றால்,
வீதிகளுக்கில்லை பேதம்,
பெரிதும் சிறிதும்.

'05 மே, 26 வியா. 13:58 கிநிநே.

Sunday, May 22, 2005

கிரகணம்



மாலைப் பூங்காவில் ஆர்ப்பரிக்கும் ஒரு சிறுவன்:
"தெரிந்து கொள்! என் ஞானத்தந்தை தகியொளிச்சூரியன்,"
கை விரல் தூக்கி மேற்கு நிலம் முயங்கும் திசை நோக்கி,
காற்றை எதிர்த்துக் கதை சொல்லி, எரிசூட்டை மிதித்தான்போல்,
சுழல்வான்; சுழிப்பான்; அலைவான் கால் அங்கும் இங்கும்.

காதிலே குண்டலம் கண்டிலேன்; காததுவும் புண்டு தொங்கிலன்.
வாய் சொல்லுஞ் சொல் புரியாத சிறுபிள்ளையல்லோ இவன்!
"ஆர் சொன்னார்?" - அழுத்திக் கேட்டேன் - ஆனாலும்,
அடக்கிக் குரல் முடக்கி அவன் காதுக்கு மட்டும் எட்ட.
"அன்னை" என்பான், ஆள் காட்டினான், அருகொரு வாங்கில்.

குந்தி இருந்தாளைக் குறி வைத்துப் போனேன்; என்னதென்றாள்.
"நின் மகன் ஞானத்தந்தை ஞாயிறென்றான்" - நவின்றேன்.
கூசாமற் சொன்னாள், கூரான விரல், மேற்கைக் குறி வைக்க;
"ஞாயிறே ஞானமானவன்; ஞாயிறே ஞாலமானவன்;
ஞாயிறே நியாயமானவன்; ஞாயிறே நம்பகமானவன்;
ஞாயிறே விசாலமானவன்; ஞாயிறே நல்லொளியானவன்;
ஞாயிறே பீடமானவன்; ஞாயிறே நமக்கு...." சொல் விரித்தாள்,
வெறி மிதப்பாள், விழி சிவக்க, வரி புடைக்க, மயிர் சிலிர்த்து.
காலெடுத்துக் கடந்தேன்; கடி நகர்ந்தேன்; தாய் வேழம் இன்னும்
தடங்காமல் முழங்குமாம் என் நிழலும் தகிக்கத் தகிக்க,
வீசுவெயிலோன் விண்ணாணம் போமென் பிடரி பின்னால்.

கணத்தே, உள்ளிருந்து ஓங்கியடித்தாற்போல்,
உடனெழுந்தது சூழக் குவிந் திரவு குமிழ்ந்தது
போலோர் புறத்தோற்றம்; சூழல் திகைந்து திரிந்தது.
திகைத்துத் திரும்பி வான் பார்த்தேன்; கதிரோன்,
வீசு கதிர் விட்டான், வெறுங்கறை உற்றான்; சூழுங்
கரை மட்டுங் கொண்டான் கதிர், சுட்டுத் தின்றதார், சொல்?
வால் வளைத்துக் காலக்கேதோ? வயோதிபக் காலக்கேடோ?

ஆனாலும், மாறாத காட்சி சில மருட்டும்,
மங்கு இருளிலும் பொங்கு மகிமை பற்றி;
கிளியெனக் கூறும் சிறுவன்,
இன்னும் புகழ் கூவுகிறான், கேள்,
வெறுஞ்சூனியன் ஆனானை, ஞான
வெளிச்சூரியன் என்றே விடாமல்,
கூடிப் பேசுகிறாள், பார், குந்தி,
பட்டொளி வீசும் பகலவன் வீரம்.

வெறும் பெருங்காயப்பெட்டியும்
திறந்தால் மணக்கும்; கறிக்காகுமா?

சூனியகிரகணம் ஒளிக்காகுமா?


'05 மே, 22 ஞாயி. 04:57 கிநிநே.

Thursday, May 19, 2005

புண்ணியபூமி

காலங்காலமாய்
ஈரங்காணா
எங்கள் நிலத்திலே எதுவும் முளைக்கும்:
-இரு சிறு விரற்றுண்டு
-கடிகாரம் ஓடுமொரு கைப்பாதி
-பொசுங்குமயிர் நாற்றம்
-உதிரந்தோய்கிழிசற்சீலை
-புண்டபானை ஒழுக்கும் பழஞ்சோறு
-எரியுங்கூரை உத்திரம்
-நல்லதில்லாத நள்ளிரவு, சுடுகிற நடுப்பகல்
-பயந்த முகத்துடன் இடம் பெயர்ந்த மனிதர்
-புதியதொரு மொழி, சனம், குடிசை, குழாய்நீர்
-ஆயுதம் தாங்கி, கமிஸாக்கி, தொப்பி, சப்பாத்து
-இடமெல்லாம் வளைத்துச்சுற்றிய முள்ளுவேலி.
-இரட்டை இலை பிளந்தோர் இளம் வெள்ளரசு.

அத்தனைக்கும் ஆதியில்
வேறு வயல் வித்திட்டுக் கிள்ளி
நட்டதோர் முற்றிய நாற்றென
நடுவீதியில், புலர்பொழுதிற்
சட்டென முளைத்த புத்தன்
-திறந்த கண் தெரு விறைக்க
வெறுங்கல்லாய்த் தரை அறைந்து.
போதி அத்தனைத் தொடரும்,
போகா அத்தனை துயர்களும்.

பசும்புல்லை,
பாடுபுள்ளைத் தவிர,
தறை வெடிக்கும்
எங்கள் நிலத்திலே எதுவும் முளைக்கும்,
மூடிக் கண் திறக்க முன்னோ,
முன் காலை பிறக்க முன்னோ.

'05 மே, 19 வியா. 14:06 கிநிநே.

Monday, May 16, 2005

சச் சச் சச்

சச்சரித்துக்கொண்டிருந்தன எலிகள் - விட்டால்,
பற்கள் பெருகிச் செத்திடுவோம் என்னுமாப்போல்,
தம் முலகிற் சஞ்சரித்து, தலை
தட்டுத் தடவெனத் தாளமிட்டுக்
கை கொட்டிக் கொட்டிக்
குதூகலமாய்க் கூட்டம்போட்டு.

வழவழத்தோடி, வழி சறுக்கி, சொற்சலம் பெருக்க, ஒட்டித் தூக்கினேன் கால்;
கொழகொழத்து வெளிக்கொட்டாமல், பல்லிடுக்கில் ஒட்டிய துளிச் சொற்கள்
எகிறி, எட்டிக் குந்தின என்மீதும் குத்தின கூர்ந்தம்பால்.

சிற்றெலி சிதறப் பொறுக்கி வாய்
பேரெலி போட்டுப் போட்டதொரு பேரொலி கேட்டுப்
பார்த்தால், மிச்ச எலியெல்லாம் பேரொலி பிரித்துப்
பிளந்தன; பேசின; பின்னெல்லாம், பிய்த்த எச்ச சொச்ச
எதிரொலியிருந் தெழுந்தும் பிறந்தன பறந்தன பெரிதென,
பெயர், வினை, எச்சம்; எச்சத்துப் பிறவினை; வினையணை பெயர்...
... பல் தத்திடத் தடங்கிட, தாளம் சொல்......சச்சிட; சச் சச்;
சச் சச் சச்; சட சச்; சச் சச்; ச் ச் ச்; சச் சட் சட சட..

நிறுத்தம் வந்தது; இருக்கை வெளிக்க, எட்டினேன்; இறங்கினேன்.
தரித்தொரு கணம், முறித்து, தலை திருப்பிப் பார்த்தேன்;
முண்டியடித்துள் ஏறின மூவருள், சொல்லெலிச்சச்சரவால்
எட்டு வரியேனும் எவர் எழுதுவார் இனிக் கவி?

'05 மே, 16 திங். 15:20 கிநிநே.

Tuesday, May 10, 2005

செய்தி

நேரே கிடைத்ததென்கிறாய் நீ - கடைக்கண்
கதைக்குறிப்பு கறுத்துச் சுருங்கிக் மறுக்கிறது.

சிறு கருவட்ட மயிலிறகு போலோர்
காற்றேகும் இலேசான பொருட்செய்தி.
ஒற்றை வரி - எட்டுச்சொல் - முற்றுப்புள்ளி

எப்படித்தான் தொலைந்திருக்கும்?
எங்கேதான் தொலைந்திருக்கும்?
இத்தனை கொத்து விளக்கத்துக்கான
விளக்கத்துக்கான விலக்கற்ற விளக்கு
வில்லங்கங்கள் சடைத்து முளைக்கமுன்,
சரியாய் எண்ணிப்பார்த்தோமா?

எட்டுநடைத்தூர இடுக்கெல்லாம் தேடலாம் வா.
பாறைமனிதர் எம் போதைக்குப் பயந்து
பாதை இடையிற்றான் எங்கோ - பல் கிடுக்கிப்
பதுங்கியிருக்கிற தென் செய்தி.

'05 மே 10, செவ். 18:13 கிநிநே.